தமிழக அரசின் அத்துமீறல்களுக்கு துணை போகும் ‘அறிவுரைக் குழுமம்’: கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்

சேலம் சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற அடக்கு முறை சட்டங்களை இனி எவர் மீதும் பயன் படுத்தக் கூடாது என்று சேலம் சிறையிலிருந்து விடுதலையானவுடன் சிறைவாசலில் அளித்த பேட்டியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தினார்.

இந்தச் சட்டங்கள் முறைகேடாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று கண்காணிப் பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட ‘அறிவுரைக் குழுமம்’ ஒன்று செயல்படுகிறது. அந்த குழுமம் கண்காணிப்பு வேலை செய்யாமல் கண்களை மூடிக்  கொண்டே ஆட்சியாளர்கள் முறைகேடாக பயன்படுத்தும் அடக்குமுறை சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது ஜனநாயகத்துக்கே அவமானம். ஓய்வு பெற்ற மூத்த நீதிபதிகள் இப்படி முறைகேட்டுக்கு துணை போய்க் கொண்டிருக்கும் போது உயர்நீதிமன்றத்தின் இளம் நீதிபதிகள் இந்த அடக்குமுறை சட்டங்கள் முறை கேடாகப் பயன்படுத்துவதை நீக்கம் செய்து விடுகிறார்கள். இதைத் தங்களுக்கு நேர்ந்த அவமானமாகக்கூட இந்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் கருதிப் பார்க்க மறுப்பது வெட்கக் கேடானது என்றார் கொளத்தூர் மணி. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று நாங்கள் குரல் கொடுத்தோம்; தொடர்ந்து ஈழ விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம் என்றும் கூறினார்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நங்கவள்ளி தோழர்கள், கிருட்டிணன், அருண்குமார், சேலம் அம்பிகாபதி ஆகியோரும் விடுதலையானார்கள். பிப். 15 ஆம் தேதி காலை 9.15 மணியளவில் சிறையிலிருந்து வெளிவந்த தோழர்களை உணர்ச்சி முழக்கமிட்டு ஆடை போர்த்தி தோழர்கள் வரவேற்றனர். விடுதலையாகும் சேதி அறிந்து தமிழகம் முழுதுமிருந்தும் தனி வாகனங்களில் தோழர்கள் திரண்டனர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்தரன், பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், புதுவை மாநில கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், வழக்கறிஞர் அருண், திருமூர்த்தி, ஆனந்தராஜ், மாயன், கவுதம பூபாலன் மற்றும் ம.தி.மு.க. தோழர்களும் தமிழகம் முழுதுமிருந்தும் நூற்றுக்கணக்கில் கழகத் தோழர்களும் சேலத்தில் குவிந்தனர்.

120 வாகனங்கள் அணி வகுக்க, பறை இசை ஒலிக்க, ஊர்வலமாகப் புறப்பட்டு, புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கும் தந்தை பெரியார் சிலைக்கும் கழகத் தலைவர், விடுதலையான தோழர்கள் மாலை அணிவித்தனர். அங்கிருந்து வாகனப் பேரணியாக ம.தி.மு.க. வழக்கறிஞர் ஆனந்தராஜ் இல்லம் சென்றனர். ம.தி.மு.க.வைச் சார்ந்த வழக்கறிஞர் ஆனந்த ராஜ், கழகத் தலைவர் கைதான நாளிலிருந்து விடுதலை பெறும் வரை ஒவ்வொரு நாளும் சந்தித்து வழக்கு தொடர்பாக கடுமையாக செயல்பட்ட தோழர் ஆவார். அண்மையில் வழக்கறிஞர் ஆனந்தராஜ் தந்தை மரணமடைந்துள்ள நிலையில் அவரது இல்லம் சென்று ஆனந்தராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு தோழர்களுடன் கழகத் தலைவர் ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து கைது  செய்யப்பட்ட தோழர்கள் நங்கவள்ளி அருண்குமார், கிருட்டிணன், சேலம் அம்பிகாபதி அவர்களின் இல்லத்துக்குச் சென்று, அவர்களின் குடும்பத்தினரிடம் தோழர்களை ஒப்படைத்தனர். குடும்பத்தினர் கழகத்தினரை அன்புடன் வரவேற்றனர். ஆதரவாளர்கள், தோழர்கள் தந்த வரவேற்பையேற்று பிற்பகல் 4 மணியளவில் கழகத் தலைவர், தோழர்கள் வந்த வாகனங்கள் அணிவகுப்பாக மேட்டூர் வந்து சேர்ந்தன.

மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எழுச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிற்பகல் 4 மணியளவில் மேட்டூர் நகராட்சி திருமண மண்டபத்தில் தோழர்கள் அனைவருக்கும் தோழர்கள் உணவு ஏற்பாடு செய்திருந்தனர். மயிலாடுதுறை, மன்னார்குடி, புதுவை, கிருட்டிணகிரி, ஈரோடு, கோபி, திருப்பூர், கோவை, சேலம், மேட்டூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் திரண்டு வந்து வரவேற்ற காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது.

– நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 20022014 இதழ்

You may also like...