125 ஆவது பிறந்த நாள் நினைவாக (2)
சர். ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் கடலில் வீழ்ந்தது!
125 ஆவது பிறந்த நாள் நினைவாக சர். ஏ.டி. பன்னீர் செல்வம் குறித்த வாழ்க்கைக் குறிப்பின் கடந்த வாரத் தொடர்ச்சி.
திருவையாறு கல்லூரியில் சமஸ்கிருதம் மட்டுமே கற்றுத் தரப்பட்டதை மாற்றி தமிழ்க் கற்பிக்கவும் ஏற்பாடு செய்த சர். செல்வத்துக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்ப்பு எதனையும் சர்.செல்வம் பொருட் படுத்தவில்லை. விடுதியிலும் தமிழ் படிப்பவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு வழி வகைகள் செய்யப் பட்டன. ‘சமஸ்கிருத காலேஜ்’ எனும் பெயர் ‘ராஜாஸ் காலேஜ்‘ என்றும், ‘அரசர் கல்லூரி’ என்றும் அழைக்கப்படலாயிற்று. அதாவது பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜா சத்திரங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டும் உணவளிக்கப்பட்டு வந்தது. அதனை மாற்றி சர். செல்வம் எல்லா வகுப்பினருக்கும் உணவளிக்கும்படி ஏற்பாடு செய்தார்.
சர். செல்வம், மாவட்டக் கழகக் கல்வித் துறையை நன்றாக முடுக்கி விட்டார். திருவையாறு, உரத்தநாடு, ராஜாமடம் போன்ற இடங்களில் முதற்கட்டக் கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. திருவாரூர், பாபநாசம் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளை மாவட்டக் கழகம் (ஜில்லா போர்டு) தனது நிர்வாகத்தில் இணைத்துக் கொண்டது. முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் ஆகிய ஊர்களில் நடுநிலைப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. கல்வி நீரோடை தங்கு தடையின்றிப் பாய்ச்சப்பட்டது.
சர். செல்வம், தஞ்சையில் ஆதி திராவிடர் களுக்காக ஒரு விடுதி ஏற்படுத்தினார். இப்போதும் அவ்விடுதி இயங்கி வருகிறது. தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்த அளவில் உத்தியோக நியமனங்களில் ஒவ்வொரு வகுப்பினருக்கும் தாராளமாகப் பங்கு கிடைக்கும்படி செய்து வந்தார்.
சர். செல்வம், மாவட்டக் கழகத் தலைவராகப் பதவி வகித்ததற்குப் பிறகு, தஞ்சைக் கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், 1930களில் சில ஆண்டுகள் அரசு வழக்கறிஞராகவும் பொறுப்பில் இருந்தார்.
சர். பன்னீர்செல்வம், தொடக்கம் முதல் இறுதி வரை பார்ப்பனரல்லாத மக்களுக்கு உழைத்த பெருந்தலைவர் ஆவார். அதனால்தான், திராவிடர் இயக்கத் தோழர்கள் அவர்கள் இல்லங்களிலே பிறக்கும் குழந்தைகளுக்குப் பன்னீர்செல்வம் என்று பெயர் வைத்து மகிழ்ந்தார்கள். கலைஞர் மு. கருணாநிதி, திரைக்கதை, உரையாடல் அமைத்த ‘பராசக்தி’ திரைப்படத்தில் கல்யாணிக்குப் பிறக்கும் குழந்தைக்கு ‘பன்னீர்செல்வம்’ என்றே பெயரிடப்படு கிறது. சர். செல்வம் அவர்களின் தன்னலம் கருதாப் பணிகளுக்குக் கிடைத்த வரவேற்புகளே அவை.
அது மட்டுமன்று, செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை மாநாட்டில் (1929) இளைஞர் மாநாட்டிற்கு சர். செல்வம் தலைமை வகித்துப் பேசினார்.
சர். செல்வம் அவர்கள், கத்தோலிக்க மதத்தில் பற்றுடையவராக வாழ்ந்தார். கத்தோலிக்க கோயில் களில் வழிபாட்டுக்கு வருகின்றவர்களிடத்திலே உயர்ந்தவர் – தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டினைக் காட்டுவதை அறவே அவர் வெறுத்தார். இதற்காகத் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குச் சமத்துவம் வழங்க வேண்டிக் கோயில் மதக் குருமார்களிடம் அவர் வாதாடினார். தாழ்த்தப்பட்டவர்களை ஆதரித்து அவர்கள் பக்கமே சர். செல்வம் நின்றார். அதுமட்டு மல்லாமல், கிறித்துவ மதத்தில் சாதி வித்தியாசம் பாராட்டுவதை, அம்மதத்தின் அடிப்படைக் கொள்கைக்கே விரோதம் என அவர் கூறி வந்தார்.
சுயமரியாதை இயக்கத்தின் சமூகச் சீர்திருத்தக் கொள்கையைச் – சமய சீர்திருத்தக் கொள்கைகையத் – தமது கொள்கையாக இவர்வரித்துக் கொண்டார். அதனால், கிறித்துவ மாநாடுகளில் பங்கு கொண்டு சமத்துவக் கொள்கையை வற்புறுத்தி வந்தார். இவரது பேச்சுக் கும், செயற்பாடுகளுக்கும் அனைத்து மட்டத்திலும் நல்ல வரவேற்பு இருந்தது.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் முன்னின்று நடத்திய முதல் தமிழர் மாநாடு 1937 டிசம்பரில் திருச்சியில் நடைபெற்றது. இம்மாநாட் டிற்கு வழக்கறிஞர் கா.சு.பிள்ளை தலைமை தாங்கினார். செந்தமிழ்ப் புரவலர் த.வே.உமா மகேசுவரன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். நாவலர் சோமசுந்தர பாரதியார் வரவேற்புரை நிகழ்த்தினார். ஈ.வெ.இராமசாமிப் பெரியார் சிறப்புரையாற்றினார். கட்டாய இந்தியை எதிர்த்துப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில்தான், ‘தமிழ்நாடு தனியாகப் பிரிக்கப்பட வேண்டும்’ என்கிற தீர்மானம் முதன்முதலில் நிறைவேற்றப்பட்டது.
இம்மாநாடு திருச்சியில் கூட்ட ஏற்பாடுகள் நடந்த சமயம், சர். செல்வம் காலில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு செல்வபுரத்தில் தங்கியிருந்தார். சற்று உடல்நலக் குறைவுடனேயே இம்மாநாட்டிற்கு அவர் நொண்டிக் கொண்டே வந்தார் என அவரைப் பற்றிய பதிவுகள் கூறுகின்றன.
இதற்கு அடுத்த ஆண்டு – அதாவது 27.12.1938இல் நடைபெற்ற தமிழர் மாநாட்டிற்கு சர். செல்வம் தலைமை தாங்கி அரியதொரு உரையை நிகழ்த்தினார். இவ்வுரை அனைவரையும் கவர்ந்தது.
சர். செல்வத்தின் குரல் நாட்டுப் பிரிவினை இயக்கமாக வடிவெடுத்து, அதுவே பின்னாளில் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என வளர்ச்சி யடைந்தது. முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தின்போது சர். செல்வம், தந்தை பெரியாருக்குப் பெருந்துணையாக இருந்தார். பெரியார் பெல்லாரிச் சிறையில் அடைக்கப்பட்டபோது சென்று பார்த்தார். சட்டமன்றத்தில் அடிக்கடி பெரியாரைப் பற்றிக் கேள்விகள் கேட்டார்.
முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாகப் போராட்ட வீரர்களுக்குக் கடுந் தண்டனைகள் வழங்கப்பட்டன. இக்கொடுமையை எதிர்த்துச் சட்டமன்றத்தில் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சட்டமன்றத்தில் சர். ஏ.டி. பன்னீர்செல்வம், ராஜா சர். முத்தையா செட்டியார், திவான்பகதூர் அப்பாதுரை பிள்ளை ஆகிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் முதலமைச்சர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
சர். செல்வத்திற்கு 1929 ஆம் ஆண்டு இராவ்பகதூர் பட்டம் வழங்கப்பட்டது. 1930-31 ஆம் ஆண்டுகளில் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்குச் சர். செல்வம் நீதிக்கட்சி மற்றும் இந்திய கிறித்தவர்களின் சார்பில் சென்றார்.
1930 முதல் சட்டமன்ற உறுப்பினராகப் பணி யாற்றினார். சட்டமன்றத்தில் முக்கியத் தீர்மானங்கள் வருகிறபோதும், வரவு செலவுத் திட்டத்தின் போதும், சர். செல்வத்தின் பேச்சு அரசின் கவனத்தைக் கவரக்கூடியதாக இருக்கும். சர். முகமது உஸ்மான், உள்நாட்டு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய தும், சர். செல்வம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். செல்வத்திற்கு எதிராக காங்கிரஸ்காரர்கள் ஜான் ஜோசப் என்வரைப் பரிந்துரைத்தனர். சர். செல்வத்தைத் தோற்கடிக்கப் பலமான முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் ஆகிவிட்டன.
சர். செல்வம், காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவியேற்றுக் கொள்ளாமல் சில நிபந்தனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த இடைக் காலத்தில் ஏற்பட்ட சர். கே.வி.ரெட்டி அமைச்சரவை யில் மூன்றரை மாதம் அமைச்சராக இருந்தார்.
சர். செல்வம், இந்தியா மந்திரியின் ஆலோசனை யாளராக பதவியை ஏற்றுக் கொள்ளும் பொருட்டு 1940 பிப்ரவரி 25இல் தமது சொந்த ஊரான செல்வபுரத்திலிருந்து சென்னைக்குப் பயணமானார்.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து ரெயில் கிளம்பியபோது இருந்த சூழ்நிலையை, “நகரத் தூதன்” ஆசிரியர் மணவை திருமலைசாமி குறிப்பிடுகையில், “விற்குடி ஸ்டேஷனின் சம்பவம் இரும்பு நெஞ்சையும் இளக்கிற்று. செல்வம் செல்லும் வண்டியைச் சற்றிச் சூழ்ந்து நின்றனர் தமிழர் பலர்! பெரியார் நிற்கிறார்; செல்வன் ஜார்ஜூம் (சர். செல்வம் அவர்களின் மூத்த மகன் – இவர் தற்போது செல்வபுரத்தில் வாழ்கிறார்) நிற்கிறார். அவரது ஆத்ம தோழர் சாமியப்பாவும் அருகில் நிற்கிறார். எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டார் சர். பன்னீர்செல்வம். வண்டியில் ஏறி வாசற்படியில் நின்றார்; பார்த்தார்; புத்திரனை பரபரப் போடு இறங்கி இரு கரங்களாலும், செல்வனைச் சேர்த்து அணைத்து உச்சியிலும் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டுவிட்டுப் பெரியாரை நோக்கினார்… பெரியாரும் செல்வமும் ஒருவருக்கொருவர் பேச முடியாது தத்தளித்தனர்.
இவ்வாறு கண்ணீர் மழைக்கிடையே சர். செல்வம் பம்பாய் சென்றார். அங்கிருந்து விமானத்தில் பறந்து கராச்சி சென்றார். வைசிராய் அனுப்பி வைத்திருந்த விமானம் சர். செல்வத்திற்காகக் கராச்சியில் காத்துக் கிடந்தது.
1940 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் முதல் நாள் அதிகாலை 4.30 மணிக்கு ‘ஹனிபால்’ என்ற விமானம் சர். செல்வத்தை ஏற்றிக் கொண்டு கிளம்பியது.
ஆனால், அன்று மாலையே பத்திரிகைகளில் ‘சர். பன்னீர்செல்வம் சென்ற விமானம் எங்கே?’ எனும் தலைப்பு உண்மைத் தமிழர்களின் நெஞ்சத்தைத் துணுக்குறச் செய்தது. அவருடன் சென்ற மூன்று இராணுவ அதிகாரிகள், விமானத்தை நடத்திச் சென்ற விமான ஓட்டிகள் உட்பட ‘ஓமான் கடலிலே’ மூழ்கி இருக்க வேண்டுமென அரசு தீர்மானித்தது. தமிழர்கள் கண்ணீர்க் கடலில் மூழ்கினர்.
நன்றி: க. திருநாவுக்கரசு தொகுத்து திராவிட‘இயக்க வேர்கள்’ நூலிலிருந்து
பெரியார் முழக்கம் 30012014 இதழ்