சட்ட எரிப்புப் போராட்ட வரலாற்றுச் சுவட்டில்…
1957 நவம்பர் 26இல் பெரியார் ஆணையை ஏற்று அரசியல் சட்டத்தில் ஜாதியை பாதுகாக்கும் பிரிவை தீயிட்டுக் கொளுத்தி, பல்லாயிரக் கணக்கில் 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறையேகியது கருஞ்சட்டைப் படை! அந்தப் போராட்டம் குறித்து, ‘விடுதலை’ நாளேட்டில் வெளிவந்த சில செய்திகளை இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
ஆடுமாடுகளைப் போல்
• •அரசியல் சட்ட எரிப்பு சம்மந்தமான வழக்கு 11.12.57-ந் தேதி வாய்தா என்று முன்னமே தெரிவித்திருந்த அரசாங்கம் திருச்சியிலிருந்து இன்று மாலை 4 மணிக்கு 6 திறந்த லாரியில் ஆடு மாடுகளை அடைப்பதுபோல் அடைத்துக் கொண்டு வந்து மாயூரம் சப்டிவிசனல் மாஜி°ட்ரேட் கோர்ட்டின் வாசலில் கொண்டு வந்து நிறுத்தினர். 5000 பொது மக்களுக்கு மேல் கூடியிருந்தனர். தொண்டர்களும் தோழர்களின் மனைவி, குழந்தைகள், கர்ப்பவதிகள், தள்ளாத தாய்மார்கள் யாவரும் உற்சாகத்துடன் கூடி யிருந்தனர். கைதான தொண்டர்களும் உற்சாகத் துடன் இருந்தார்கள். இரவு 7 மணிக்கு அதிகாரி இதனடியிற் கண்டபடி கேசை வாய்தா போடப் பட்டிருப்பதாக தெரிவித்தார்கள். கைதான தோழர்கள் வரும்போதும் போகும்போதும் ‘பெரியார் வாழ்க’ என்றும் ‘அரசியல் சட்டம் ஒழிக’ என்றும் கோஷமிட்டார்கள். மேற்படி கோஷமானது எல்லோரையும் உற்சாகமூட்டியது. மாதிரிமங்கலம் தோழர் கணபதி திருச்சி சிறையில் இருக்கிறார். அவருக்கு 11.12.57-ந் தேதியன்று ஆண் குழந்தை பிறந்து இறந்த செய்தி கேட்டும் உற்சாகமாகவே இருக்கிறார்.
ஆறுமாத கர்ப்பத்துடன்
• •மாயூரம் ஆதி திராவிட தோழர் கலியபெருமாள் மனைவி கோவிந்தம்மாளுக்கு இன்று 3 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆறுமாத கர்ப்பிணி ஆறு வயதுள்ள ஒரு பெண்ணும் கூடவே இருந்து வருகிறது. மேற்படி கலியபெருமாள் இன்று திருச்சி மத்திய சிறைக்கு போகும்போது உற்சாகத்துடனேயே பெரியார் வாழ்க என்று கோஷமிட்டுக் கொண்டே சென்றார். கொரநாடு தோழர் இராமசாமியின் தாயார் மரண அவ°தையிலிருப்பது தெரிந்தும் மிகவும் உற்சாகத்துடனேயே சென்றார். பொறையார் தோழர்களுக்கு தலைவர், உபதலைவர், காரியதரிசி இவர்களுக்கு 9 மாதமும் இரண்டு பெண்களுக்கு 3 மாதம், பாக்கி பேர்களுக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. (விடுதலை, 13.12.1957)
பட்டினிப் போட்ட கொடுமை
• •பெரியார் கட்டளைக்கிணங்க சென்ற நவ.26-ந் தேதி அரசியல் சட்டப் புத்தகத்தை எரித்து போலீசாரால் கைது செய்யப்பட்டு ‘ரிமாண்டு’ செய்யப்பட்டுள்ள நமது வீரமிக்கத் தோழர்களும், தோழியர்களும் பல வேளைகளில் சாப்பாடு இல்லாமல் பட்டினிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக செய்திகள் ஏராளமாய் வந்திருக்கின்றன.
உதாரணத்துக்கு மன்னார்குடியிலிருந்து வந்துள்ள செய்தியைத் தருகிறோம். 28.11.57-ந் தேதி இரவு 7.30 மணி அளவில் மன்னார்குடியில் ரிமாண்டில் வைக்கப்பட்டிருந்த தோழர்கள் 258 பேருக்கும் அங்கு சிறையில் அன்றிரவு தரப்பட வேண்டிய உணவைக் கொடுக்காமல் 4 லாரி
5 ப°களில் திருச்சிக்குக் கொண்டு போனார்கள். திருச்சியிலும் இரவு உணவு அளிக்கவில்லை. அங்கு இரவு சிறைச்சாலையிலும் அனுமதி கிடைக்கவில்லை. மறுநாள் (29.11.57) காலை
11 மணிக்குத்தான் அனுமதியளித்திருக்கின்றனர்.
அது வரையில்; 258 தோழர்களையும் 3 வேளை உணவுமில்லாமல் பட்டினி போட்டிருக் கிறார்கள். (விடுதலை, 4.12.1957)
மலம் எடுக்க வைத்த அதிகாரிகள்
• சென்னை 19ஆவது வட்டம் ஓட்டேரி தி.க. துணைத் தலைவர் டி.கே.வரதராசன் எழுது வதாவது:
வேலூர் பெண்கள் சிறையில் நமது தோழியர்கள் குறைகளை நேரில் சென்று கேட்டேன். நான் 14.12.57இல் மாலை 5 மணியளவில் வேலூர் தோழர் மோகனராசு உடன் வேலூர் சிறைக்குச் சென்றேன். நமது தோழியர்களை மலம் எடுக்கச் சொல்லுவதும் கால்வாய் கழுவ சொல்லுவதுமாக ஜெயிலில் வார்டர்கள் தொந்தரவு செய்வதுமாக வும் அப்படி செய்ய மாட்டோம் என்று சொன்னால் உங்களுக்கு உணவு கொடுக்க மாட்டோம் என்று சொல்லுகிறார்களாம். சுசீலா அம்மையார், மனோரஞ்சிதம் லக்ஷ்மி அம்மை யார், பட்டம்மாள் அம்மையார், அறிவுக்கொடி பூங்காவனம், சண்பகவள்ளி அம்மையார் மகள் புரட்சிமணி ருக்மாபாய் இவர்கள் முக மலர்ச்சியுடன் காணப்பட்டார்கள். குறிப்பாக என் மகள் வீரசெல்வி, வி. பத்மசுந்தரி வீரநடை போட்டு வந்து வீரமுடன் இருப்பதாக எனக்கு ஆறுதல் சொன்னாள்.
சிறையில் பிறந்த குழந்தை
• •மண்ணச்சநல்லூரில் சட்ட எரிப்பில் ஈடுபட்டு கைதான வீராங்கனை அஞ்சலை அம்மை யாருக்கு லால்குடி சப் ஜெயிலில் நேற்று காலை 5 மணிக்கு ஆண் மகவு பிறந்தது. சட்ட எரிப்பில் அந்த அம்மையாருடன் கைதான தோழியர்கள் பதின்பர் வேண்டிய உதவி புரிந்தனர். செய்தியறிந்த ஆங்கரை கோவிந்தராசன் சிறைக்குச் சென்று மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்து விட்டு இதன் நினைவாக அனைவருக்கும் இனிப்பும் பழமும் வழங்கினார். மற்றவர்கள் கூறிய புகாரையும் கேட்டு அதிகாரிகளிடம் தெரிவித்தார். (‘விடுதலை’ 30.11.1957)
• நீடாமங்கலம் தோழர் இராசமாணிக்கம் பெரியாரின் கட்டளையை நிறைவேற்றிச் சிறை சென்றார். சிறிது நேரத்திற்கெல்லாம் அவரது தாயார் இயற்கை எய்தினார். இருப்பினும் கடமையை வழுவாது சிறையில் இருக்கிறார் அன்புள்ள மகன்.
தங்கை சாகும் நிலையில்
• தன் உடன்பிறந்த தங்கை சாகும் தருவாயில் படுத்த படுக்கையில் கிடக்கிறதே என்று கவலைதோய்ந்து கடமையை நிறைவேற்றத் தவறவில்லை. வீரர் நாகை தாலுக்கா கிள்ளுகுடி தோழர் ப.குஞ்சப்பன் பெரியாரின் கட்டளையை நிறைவேற்றி சிறை சென்றார். 2.12.1957இல் உடன் பிறந்த யசோதை இயற்கை எய்தினார். கடமை வழுவாது சிறையி லிருக்கிறார். (இயற்கை எய்தின செய்தி அன்னாருக்கு தெரியாது) கிள்ளுகுடி திராவிடர் கழகம் அவருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
• நீடாமங்கலத்தில் சென்ற 26-ந் தேதி அரசியல் சட்டத் தாளைக் கொளுத்தி கைது செய்யப்பட்ட தோழர் கே.ஆர்.குமார் அவர்களின் மகள் செல்விக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சென்னையிலுள்ள மைனர் பெண்கள் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள்.
மற்றும் இதுபோலவே, கலியபெருமாள், கோவிந்தராஜ் ஆகிய இரு சிறுவர்களுக்கும் இரண்டு ஆண்டு தண்டனை அளித்து, ஒருவரை திருநெல்வேலிச் சிறைக்கும், மற்றொருவரை செங்கற்பட்டு சிறுவர் சிறைக்கும் அனுப்பி வைத்தார்கள். மன்னார்குடி வட்டத் தோழர்கள்
68 பேருக்கும் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதென்று முன்னர் வந்த செய்தியில் 20 பேருக்கு மட்டுந்தான் தண்டனை விதிக்கப் பட்டதென்றும், மீதமுள்ள 48 பேர் மீதுள்ள வழக்கும் 7.12.57-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது. (‘விடுதலை’ 2.12.1957)
67 வயது மூதாட்டி
• சென்ற 10.11.57இல் சென்னையில் நடைபெறும் ஓட்டல் மறியலில் (‘பிராமணாள்’ பெயர் அழிப்பு) கலந்துகொண்டு ஒரு வாரம் சிறைத் தண்டனை யடைந்து 17.11.57இல் திரும்பி வந்த மூதாட்டியார் பரிபூரணத்தம்மையார் அவர்கள் தமது 67ஆவது வயதையும் பொருட் படுத்தாமல் உடல் நலிவையும் கவனிக்காமல் தந்தை பெரியார் அவர்களின் கட்டளைக்கிணங்கி சென்ற 26.11.57-ந் தேதி
இந்திய அரசியல் சட்டத்தாளைக் கொளுத்தி கைது செய்யப்பட்டு தஞ்சை சிறையில் ஒரு
வாரம் ‘ரிமாண்டில்’ வைக்கப்பட்டு கடந்த
2.12.57-ந் தேதி தஞ்சை உதவி சப்டிவிஷனல் மாஜி°திரேட்டாரால் 3 மாதம் கடின காவல் தண்டனை விதிக்கப்பட்டார். மூதாட்டியார் தண்டனையை முகமலர்ச்சியுடன் ஏற்று சிறையேகினார்கள். தஞ்சை சப்ஜெயிலில் கடைசி நாளன்று இவர் மிகுந்த வேதனைக் குள்ளாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
மன்னிப்பு கேட்க மறுப்பு
• சென்னையில் சென்ற 26-ந் தேதி இந்திய அரசியல் சட்டத் தாளைக் கொளுத்தி கைது செய்யப்பட்ட தோழியர்கள் பதமசுந்தரி, ருக்மாபாய் ஆகிய இருவருக்கும் சென்னைத் தோழர்கள் டபிள்யூ.பி.ஏ. வேலாயுதம், கன்னியப்பன், திருப்பத்தூர் தோழர் கிரசுனன் ஆகியோருக்கும் சென்னை 5ஆவது மாகாண மாஜி°திரேட் அவர்களால் இன்று தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னை 19ஆவது வட்டம் தி.க. துணைத் தலைவர் திரு.டி.கே.வரதராசன் மகள் தோழியர் பத்மசுந்தரிக்கு 2 மாதம் வெறுங்காவல். சென்னை 18ஆவது வட்டம் புளியந்தோப்பு திரு. இராகவன், துணைவியார், தோழியர் ருக்மாபாய்க்கு 3 மாதம் வெறுங்காவல். தோழர் வேலாயுதம் அவர்களுக்கு 9 மாதம் கடுங்காவல் – ‘பி’ வகுப்பு. புது வண்ணாரப்பேட்டை (1ஆவது வட்டம்) தோழர் கன்னியப்பன், திருப்பத்தூர் கிருசுனன் ஆகிய இருவருக்கும் தலா 6 மாதம் கடுங்காவல்.
தோழியர்கள் இருவருக்கும் தண்டனை விதிக்குமுன், மாஜி°திரேட் அவர்கள், ‘இனிமேல் இம்மாதிரி சட்டம் கொளுத்தவில்லை என்று ‘பாண்டு’ எழுதிக் கொடுக்கிறீர்களா? அவ்வாறு எழுதிக் கொடுத்தால் உங்களை விடுதலை செய்கிறேன்’ என்று கேட்டார்.
இதற்கு இரு வீராங்கனைகளும் ‘மாட்டோம். விடுதலையானாலும் சட்டப் புத்தகத்தையே கொளுத்துவோம்’ என்று பதிலளித்தார்கள். அதன் மீது மாஜி°திரேட் மேற்கண்டவாறு தண்டனை விதித்து தீர்ப்புக் கூறினார். வழக்கின் முடிவைக் காண இன்று கோர்ட்டுக்கு ஏராளமான கழகத் தோழர்கள் வந்திருந்தனர். (விடுதலை-03.12.1957)
பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட “அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்” நூல்.
பெரியார் முழக்கம் 27112014 இதழ்