தலையங்கம் : தடை போட வேண்டுமாம்!

மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஒரு விசித்திர வழக்கை சந்தித்திருக்கிறது. ‘பிராமணர்’களை எதிர்த்தும் அவதூறூகவும் பேசி வரும் தி.க. தலைவர் கி.வீரமணி, தந்தை பெரியார் தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் “பிராமணருக்கு” எதிராகப் பேச தடைவிதிக்க உத்தரவிடவேண்டும் என்பது வழக்கு. வழக்கைத் தொடர்ந்தவர் சிவகாசியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற வழக்கறிஞர். விசாரித்த நீதிபதிகள் வி.இராம சுப்பிரமணியன், வி.எம். வேலுமணி மனுவை தள்ளுபடி செய்து விட்டனர்.

“விமர்சனம் என்பது கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி கருத்துரிமைக்கு அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறது. சரியான விமர்சனங்களை வரவேற்க வேண்டும். விமர்சனம் முறையற்றதாக நியாயமற்றதாக இருக்குமானால், ஒன்று அதை புறக்கணிக்கலாம். மற்றொன்று சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரலாம். விமர்சனம் எல்லை மீறினால் புத்தர் காட்டிய வழியில் அமைதி காக்கலாம். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

சகமனிதர்களை தனது வைப்பாட்டி மக்கள், சூத்திரர்கள் என்ற அறிவித்துக் கொள்ளவும் அதற்கான அடையாளமாக ‘பூணூலை’ அணிந்து கொண்டு, தான் ‘பிராமணனாக’ உயர்ந்து ஏனையோரை ‘சூத்திரராக்கி’ விட்டேன் என்று அடையாளப்படுத்தி வருவதையும் தடை செய்யப் படாமல், அதை சுட்டிக் காட்டி இழிமகனாக இருக்க மாட்டோம் என்று பேசுவதற்கு தடை போட வேண்டுமா?

“இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டது மந்திரம் ‘பிராமணர்’களுக்குக் கட்டுப்பட்டது. (ப்ராஹ் மணோ மம தேவதாஹா) என்று கூறும் வேதமும், “பிரம்மாவின் வாயிலிருந்து ‘பிராமணன்’ பிறந்த தாலும் அவன்தான் முதலில் பிறந்தவனாதலாலும் வேதங்களுக்கு உரிமையுடையவன் ஆதலாலும், அனைத்து படைப்புகளின் எஜமானன் அவனே என்று கூறும் ‘மனு°மிருதி’யும் இன்று வரை புனிதமாக போற்றப்பட்டு அறிவு தடை செய்யப் படாத ஒரு நாட்டில் இதை எதிர்த்துப் பேசுவதற்கு மட்டும் தடைபோடப்பட வேண்டுமா? ‘பிராமண’ எதிர்ப்புக்கே தடை போட வேண்டுமானால் யார் யாருக்கு எல்லாம் தடைபோட வேண்டியிருக்கும்?

இடைத்தரகர்களாக இருந்து ஆணையும் பெண்ணையும் கூட்டி வைப்பதே ‘பிராமணன்’ வேலை என்று கூறும் குறுந்தொகைப் பாடலான,

“பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!

செம்பூ முருக்கின் நன்னார் களைந்து

தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே

எழுதாக் கற்பின் நின்சொல் லுள்ளும்

பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்  மருந்தும் உண்டோ! மயலோ இதுவே!”

என்று பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் கூறும் குறுந்தொகைப் பாடலுக்கு தடை போட வேண்டும்.

அரசு செல்வத்தைத் துறந்து ராமன் காட்டுக்குப் போகும் நிலையிலும் தங்களுக்குத் தரவேண்டிய தானங்களை இரக்கமின்றி கேட்ட பேராசைக் காரர்கள் பார்ப்பனர்கள் என்பதை,

“பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்

அருத்தி வேதியருக்கு ஆன் குலம் ஈந்து அவர்

கருத்தின் ஆசைக் கரையின்மை கண்டு இறை

சிரித்த செய்கை நினைத்தழும் செய்கையாள்”

என்று சுந்தர காண்டத்தில் பார்ப்பனரைக் கண்டித்த கம்பனின் இராமாயணத்துக்கும் தடை போட வேண்டும்.

கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் சென்று ‘பிராமணன்’ கடவுளை அர்ச்சிக்கக் கூடாது. அப்படி அர்ச்சித்தால் நாடாளும் மன்னனுக்கு நோய் உண்டாகி, நாட்டில் பஞ்சம் வந்துவிடும் என்பதை,

“பிரான் தன்னை அர்ச்சித்தால்

போர் கொண்ட வேந்தர்க்குப்

பொல்லா வியாதி யாம்

பார் கொண்ட நாட்டுக்குப்

பஞ்சமு மாம் என்றே

சீர்கொண்ட நந்தி தெரிந் துரைத்தானே”

என்ற திருமூலரின் திருமந்திரத்துக்குத் தடை போட வேண்டும்.

சாத்திரத்தையும் வேதத்தையும் நெருப்பில் போட்டுக் கொளுத்த வேண்டும் என்பதை,

“சாத்திரத்தைச் சுட்டி சதுர்மறையை பொய்யாக்கிச்

சூத்திரத்தைக்கண்டு துயர் அறுப்பது எக்காலம்?”

பாடல் வழியாக போர் முழக்கமிட்ட சித்தர் பத்திர கிரியார் பாடல்களைத் தடை செய்ய வேண்டும்.

“சாத்திரத்தை ஓதுகின்ற சட்டநாதபட்டரே

வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?”  என்றும்,

“மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்

மீன் இருக்கும் நீரிலோ மூழ்குவதும் குடிப்பதும்

மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும்

வேதியர் மான் உரித்த தோலலோ மார்பில் நூல் அணிவதும்”

என்றும் முழங்கிய சித்தர் சிவவாக்கியர் பாடல் களுக்கு தடை போடவேண்டும்.

பார்ப்பனரை அமைச்சராக வைத்துக் கொண்டால் ஆட்சி முறைகள் கெட்டுப் போகும். ஆட்சியில் நீதி இல்லாமல் போய்விடும் என்பதை

“நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்

கோலெனிலோ வாங்கே குடிசாயும் – நாலாவான்

மந்திரியுமா வான் வழிக்குத் துணையாவான் அந்தவரசேயரசு.”

என்று பாடிய அவ்வையார் பாடல்களுக்கு தடை போட வேண்டும்.

“கன்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக் காகத்தை யென்செயப் படைத்தாய்?” – என்று கேட்கும் ‘விவேக சிந்தாமணி’க்கு தடை போடவேண்டும்.

“ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்திய ரிஷிகள் சேர்த்து வைத்த பொக்கிஷங்களை, இவற்றுக்கு டிர°டியாக நியமிக்கப்பட்ட ‘பிராமணன்’, ஏனைய மக்களுக்கு பகுத்து வழங்காததால்தான் மு°லிம் படையெடுப்பு இந்தியாவில் வெற்றி அடைநதது. பொக்கிஷங்களை (நல்ல கருத்துக்களை) “பிராமணன் அனைத்து மக்களுக்கும் வழங்காததால்தான், இந்தியர்களுக்கு தங்கள் மதத்தின் மீது ஈடுபாடு இல்லை” என்று பேசியும் எழுதியும் வைத்த விவேகானந்தரின் கருத்துகளுக்கு தடைபோட வேண்டும்.

“தமிழ் மக்கள் எல்லோருக்கும் தொடர்பாகத் தீது புரிந்துவரும் பார்ப்பனரை நஞ்சினுங் கொடியராக நினைத்திடக்” கோரிய மறைமலை அடிகளாரின் நூல்களுக்கு தடை போட வேண்டும்.

“பார்ப்பான் பால்படியாதீர்;

சொற்குக் கீழ்ப் படியாதீர்

உம்மை ஏய்க்கப் பார்ப்பான்;

தீ துறப்பார்ப்பான்  கெடுத்துவிடப் பார்ப்பான்

எப்போதும் பார்ப்பான் .”

என்று உணர்ச்சியூட்டிய புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பாடல்களுக்கு தடை போட வேண்டும். ஏன், “பேராசைக்காரனடா பார்ப்பான்” என்று எச்சரித்த பார்ப்பன பாரதிக்கும் தடை போட வேண்டும்.

இப்படி இன்னும் ஏராளம் உண்டு. பார்ப்பன எதிர்ப்பை சட்டத்தின் இடுக்குகளில் புகுந்து தடுத்துவிடலாம் என்று பார்ப்பனர்கள் கருதுவது அவர்களின் கோழைத்தனத்தின் வெளிப்பாடு.

நீதிமன்றத்தின் படிக்கட்டுகளை ஏறும் பார்ப்பனர்கள், காலத்தின் மாற்றத்தைக் கணக்கில் எடுத்து, ‘பிராமணன்’ இறுமாப்பைத் தூக்கி யெறிந்து சகமனிதனாக அடையாளப்படுத்திட முன் வராதவரை பார்ப்பனிய நச்சுக் கருத்துகளை கைவிடுகிறோம் என்று பிரகடனப்படுத்தி, சமத்துவத்தை நேசிக்காதவரை பார்ப்பன எதிர்ப்புப் போர் தொடரும்! தொடரும்!

இதைக் கல்லில் செதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்!

பெரியார் முழக்கம் 19062014 இதழ்

You may also like...