சுகாதார மய்யம் அமைக்க நிலம் வழங்கியவர்: அய்யா வைத்திலிங்கம் நினைவலைகள்
விழா மேடையில் அய்யா வைத்தி லிங்கம் ஏற்புரையாற்றும்போது, தான் வாழ்ந்துவரும் அழகியநாயகிபுரத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக நிலம் கொடுத்ததைப் பற்றிக் கூறினார்.
கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரத்தின் ஊரான நாட்டுச்சாலை தான் இவரது சொந்த ஊர். கவிஞரின் அண்ணன் கணபதியும் இவரும் மிக நெருங்கிய நண்பர் களாக இருந்துள்ளனர். அவரது வழிகாட் டலில்தான் இவர் சிங்கப்பூர் சென்றிருக் கிறார். அப்போது கடவுச் சீட்டு எடுக்கும் போது அதிக நாள் பணியாற்றலாம் என்று கூறி, நான்காண்டுகள் வயதைக் குறைத்துக் காட்ட 11-4-1918 என்று தனது பிறந்த நாளை மாற்றிப் பதிந்த கதையையும் இவர் நகைச் சுவை பொங்கக் கூறுவதுண்டு. நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு இல்லாதிருந்த நிலையில் அவரை பலர் கேலி பேசியதையும், அவமானப்படுத்தியதையும் எடுத்துரைத்தார். ஒரு திருமண வீட்டில் அவரைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் மொய் எழுதத் தொடங்கியபோது குழந்தைப் பேறு இல்லாதவன் திருமண மொய் எழுதக்கூடாது என்று மொய் ஏட்டைப் பிடுங்கிச் சென்ற பின்னரே குழந்தைப் பேற்றுக்காக ஒரு சீன மருத்துவரிடம் அவரது மனைவியை அழைத்து சென்று மருத்துவம் பார்த்திருக்கிறார். குழந்தைப் பேற்றுக்காக அவரது மனைவியை பலர் கோவில்களுக்கு அழைத்து சென்றதற்கு மாறாக அப்போதே சுயமரியாதை சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் அறிவியல் பார்வையோடு மருத்துவம் செய்ததையும் நினைவு கூர்ந்தார். 40 வயதைக் கடந்த பின்னரே முதல் குழந்தை பிறந்ததாகவும் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் அப்போது இருந்துவந்த அவருக்கு 1962ல் சேதுபாவாசத்திர ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், தாங்கள் 2 ஏக்கர் நிலம் கொடுத்தால் மட்டுமே இவ்வூரில் மருத்துவமனையைக் கொண்டுவர முடியும் எனக் கடிதம் எழுதிக் கேட்டதையும், ஊர் சார்பாகவும் பலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இங்கு வந்து 2 ஏக்கர் 2 செண்ட் நிலத்தை எழுதிக் கொடுத்துவிட்டு அன்றே சிங்கப்பூர் திரும்பியதையும் கூறினார். மீண்டும் மேலும் 25 செண்ட் நிலம் தேவைப் படுகிறது என ஆணையாளர் கடிதம் எழுதிக் கேட்டதனால் மீண்டும் வந்து அதையும் பதிவு செய்துக் கொடுத்திருக்கிறார். இப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்நிலத்தின் ஒரு பகுதியை ஒருசில சுயநல சக்திகள் ஆக்கிரமித்துக் கொண்டதை எதிர்த்து அரசுத் துறை தரப்பில் எதையும் செய்யமுடியாமல் இருந்தபோது, தனிமனிதராக சுமார் நான்கு இலட்சம் ரூபாய்களுக்கும் மேலாக செலவு செய்து அதை மீட்டதையும் நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
முதல்முறை நிலத்தைப் பதிவு செய்துவிட்டு வந்தவுடன், அந்நினைவுகளை ஒரு கவிதையாக எழுதியிருக்கிறார். அழகியநாயகிபுரத்தின் கிழக்கு எல்லையாக உள்ள – தொடக்கத்தில் மாட்டுமந்தையாக பயன்படுத்தப்பட்டு வந்த ‘கணக்கன் கொல்லை’ என்றழைக்கப்பட்ட அந்நிலத்தில், தானே கோலேந்தி மாடு மேய்த்ததையும், அந்நிலத்தில் வரவிருக்கும் மருத்துவமனையால் மக்கள் நலம் உயரும் என்பதையும் கூறும் அக்கவிதையின் தொடக்க வரிகளையும் கூறினார்.
ஆ கூடி அமர்ந்து நின்ற கணக்கன் கொல்லை
அழகிய நாயகி புரத்தின் கிழக்கின் எல்லை
கோல் ஏந்தி கோ மேய்த்தோன் கொடுத்த கொல்லை
குறைவின்றி மக்கள் துயர் தீர்க்கும் – அய்யமில்லை !…… ……
– என்பதே அவ்வரிகள்.
ஏங்கித் தவித்தேன் – பல
இன்னல் அனுபவித்தேன் – எதிர்காலம்
நமக்கில்லை என நினைத்தேன் – சொந்த
ஊரைத் துறந்து கடலைக் கடந்தேன்
சோம்பலின்றி உழைத்தேன்
சொல் தவறாது நடந்தேன்
சுய மரியாதையால் துணிவுற்றேன்
பெரியாரியலில் பெரிதும் மகிழ்ந்தேன்
குடும்ப வாழ்வில் குறைவின்றி வாழ்ந்தேன்
பகுத்தறிவைப் பெற்று, மூடநம்பிக்கை அற்று – பெரியாரின் முன்னறிவில் என் வாழ்வு
நூறாண்டு நிறைவு பெற்று
தொடர்வதுதான் உண்மை எனக் கூறி
பெரியாரின் தொண்டர்களை பெரிது(உ)வந்து வாழ்த்துகிறேன்.
சொந்த ஊரை விட்டோடி கடலைக் கடந்தேன்
உழைத்துப் பொருள் தேடி
ஊருக்கு வந்தேன் – பெற்ற
பிள்ளை பெண்டிற் சுற்றத்தாருடன் சேர்ந்து
சுகமடைந்தேன் – நல்ல
சுயமரியாதையால் துணிவு பெற்றேன் – தந்தை
பெரியாரியலில் பெருமையுற்றேன்
பேரின்பம் என்பது பொய் – தந்தை
பெரியார் சொன்னதே மெய்
இயற்கை என்பது மெய் – உலகில்
இறைவன் என்பது பொய்
பகுத்தறிவு சிந்தனைதான் வாழ்வு
பக்தி என்று நம்புவது தாழ்வு
பிணி மூப்பு சாக்காடு உண்மை – சாமி
பிழைக்க வைக்கும் என்பது பொய்மை!
தெய்வத்தால் கிடைக்காது மகப்பேறு – நல்ல
மகப்பேறு மருத்துவரைச் சென்று பாரு
இரு தாரம் செய்தும் மிக நீண்ட காலம் – இல்லை
எனக்கு ஒரு செல்லப் பிள்ளை – தெய்வ
நம்பிக்கை கொண்டலைந்தும்
நன்மையில்லை – அதனால்
வெந்து மனக் கண்ணீர் மல்க விரும்பவில்லை
நாற்பது வயதுக்கு மேல் ஏது பிள்ளை – என்ற
நலமற்ற விமர்சனத்தை நம்பவில்லை – தன்
நம்பிக்கை எந்நாளும் குறையவில்லை – இறுதியில்
மகப்பேறு மருத்துவந்தான் கடைசி எல்லை – அதன்
பயனால் கிடைத்தது நான்கு பிள்ளை
முதன்மை மகள் பெற்ற எனதன்பு பேத்தி – வைஷ்ணவி
மகப்பேறு மருத்துவரானதால் – நான்
மகிழ்ச்சி அலையதனில் மிதக்கின்றேனே.
ப.அ.வைத்திலிங்கம்