தலையங்கம் – கருநாடக “இந்து” துறவிகளைப் பாருங்கள்!
தமிழ்நாட்டில் இந்து மதத்தின் காவலர்களாக புறப்பட்டிருக்கும் அமைப்புகள், எவ்விதச் சமூக சிந்தனையுமின்றி பெரியார் இயக்கத்தைக் கண்மூடித்தனமாக எதிர்த்து வருகின்றன. ‘இந்து ஒற்றுமை’ பற்றி கூப்பாடு போடும் அவர்கள், அதற்கு தடையாக இருக்கும் ஜாதி, தீண்டாமைப் பற்றி பேசுவதே இல்லை. ‘தீண்டாமைக்கு’ உள்ளாக்கப்படும் மக்களும் ‘இந்துக்கள்’ தானே என்பது குறித்து இவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்ததைப்போல், தமிழகத்திலும் வரவேண்டும் என்றால் உடனே ‘நாத்திகப் பிரச்சாரம்’ என்று கூக்குரலிடுகிறார்கள். இதோ, கருநாடகத்திலிருந்து ஒரு நல்ல செய்தி!
மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும் என்று கருநாடகத்தில் 3 நாள் பட்டினிப் போராட்டம் நடந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களே காவி உடை தரித்த இந்து மத சாமியார்கள் தான் என்பதே இதில் முக்கிய அம்சம். தலித் மற்றும் பகுத்தறிவாளர்களும் இந்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி. பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய நீடிமாமுடி சென்னமலா மடாதிபதி வீரபத்ரா சாமி முன்வைத்துள்ள கருத்துகள், ஆழ்ந்த சிந்தனைக்கு உரியவை. ‘நாட்டில் நடக்கும் சரி பகுதி குற்றச் செயல்களுக்கு மதம் காரணமாக இருக்கிறது’ என்று அவர் நேர்மையாக ஒப்புக் கொண்டுள்ளார். அறநெறியி லிருந்து மதத் தலைவர்கள் விலகி நிற்கிறார்கள் என்ற உண்மையை சுட்டியதோடு, மதத்தின் பெயரால் நடக்கும் மிருகத்தனமான சடங்குகள் அப்பாவிகளையும் ஏழைகளையும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களை அதிக அளவில் வதைத்து வருகிறது என்ற வேதனையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
“சுயநலம், பணவெறி, காம உணர்வுடன் திரியும் சாமியார்களே, தங்கள் பேராசை எண்ணங்களுக்காக மக்கள் மீது மூடநம்பிக்கை எனும் நஞ்சை ஊற்றுகிறார்கள்” என்று உண்மைகளை உள்ளம் திறந்து கொட்டி யிருக்கிறார். சமூகக் கவலையோடு இந்தக் குரலை உயர்த்தியிருக்கும் இந்த மத சாமியார்கள் அனைவருமே பார்ப்பன ரல்லாதவர்கள். இந்த உணர்வை பாராட்டி வரவேற்கிறோம். இந்தப் போராட்டம் பார்ப்பனிய சக்திகளுக்கு எதிரானது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
கருநாடக அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரவிருப்பதை சட்டசபையில் அறிவித்தபோது, பா.ஜ.க., ஆர்.எ°.எ°., விசுவ இந்து பரிஷத், இராம சேனா உள்ளிட்ட பார்ப்பனிய மதவெறி அமைப்புகள் அதை எதிர்த்து அரசை மிரட்டி, சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சிகளைத் தடுத்து விட்டன. இந்தப் பின்னணியில் சமூகப் பார்வை கொண்ட இந்த சாமியார்கள் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
பார்ப்பனர்களின் வேத மதத்தை ‘இந்து’ மதமாக்கிக் கொண்டு, பார்ப்பன மேலாண்மைக்குள் அனைத்து மக்களையும் திணித்து, அந்த ஆதிக்கக் கட்டமைப்பைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வரும் பார்ப்பன சூழ்ச்சிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று பெரியார் தொடர்ந்து எச்சரித்து வந்தார். அந்தக் குரலை சரியாகப் புரிந்துகொண்ட குன்றக்குடி அடிகளார் போன்ற இனஉணர்வு மிக்க துறவிகள், பெரியாருடன் கைகோர்த்தார்கள். ஒரே மேடையை பெரியாருடன் பகிர்ந்து கொண்டார்கள். இது தமிழக வரலாறு. இந்து பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் சமூகச் சுரண்டலையும் தொடர்ந்து எதிர்த்து வந்த பெரியார்தான், இந்து – பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, வேலை மற்றும் அதிகார சமத்துவ உரிமைகளுக்காகப் போராட்டங்களை முன்னெடுத்தார். கடவுள் மீதே நம்பிக்கை இல்லாத பெரியாரும், அவரது இயக்கமும் தான் பார்ப்பனரல்லாத ‘இந்துக்கள்’ சூத்திரர்களாக இழிவுபடுத்துவதை எதிர்த்தும் அந்த இழிவை உறுதிப்படுத்திட இன்றைக்கும் கோயில்களில் அர்ச்சகர் உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்தும் போராட்டங்களைக் கண்டது.
கடவுள் மீதே நம்பிக்கை இல்லாதவர்கள், ஏன் அர்ச்சகர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று ‘சூத்திர’ இந்துக்கள் எதிர்கேள்வி போட்டார்களே தவிர, அவர்களே முன் வந்து,
இந்த இழிவுக்கு எதிராக எந்தக் குரலையும் கொடுக்கவும்
தயாராக இல்லை.
இடஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்ப்பவர்களாடு, கர்ப்ப கிரகத்தில் தீண்டாமையை நியாயப்படுத்துபவர்களோடு, தமிழ்மொழி வழிபாட்டை மறுப்பவர்களோடு, “கும்பாபிஷேக உரிமை” தங்களுக்கு மட்டுமான பிறவி உரிமை என்று பிடிவாதம் செய்வோ ரோடு, கூடி நின்று சேவை செய்யத் துடிக்கும் தமிழ்நாடு ‘சூத்திர’ இந்து அமைப்புகளே! இதோ இந்த கருநாடகத்தின் தன்மானம் கொண்ட இந்து சாமியார்கள் போராட்டத்தைக் கண்திறந்து பார்க்க மாட்டீர்களா? என்று உரிமையோடு கேட்கிறோம்.
கர்நாடக இந்து சாமியார்களையும் இந்து எதிர்ப்பாளர்கள் என்ற குற்றக் கூண்டில் நிறுத்தி விடாதீர்கள்! அவர்களின் போராட்டத்தில் அடங்கியுள்ள ஜாதி-மூடநம்பிக்கை எதிர்ப்புக் கூறுகளை சீர்தூக்கிப் பாருங்கள்!
பெரியார் முழக்கம் 27112014 இதழ்