இளமையை தொலைத்த பேரறிவாளனும் ‘பிரிட்ஜ்மேனும்’

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வு நடந்துள்ளது. கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, இளமைக் காலம் முழுதும் 27 ஆண்டு சிறையில் அடைக்கப்பட் டிருந்த ஒருவர், இப்போது நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ரோனி பிரிஜ்மேன் என்ற கருப்பர் இனத்தைச் சார்ந்த அவர், விடுதலை செய்யப்பட்டதற்கான காரணம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். “இவர்தான் கொலைகாரர்; அதை நான் நேரில் பார்த்தேன்” என்று அமெரிக்க போலீஸ் ஒரு 12 வயது சிறுவனைப் பிடித்து பொய்சாட்சி சொல்ல வைத்தது. இந்த சம்பவத்தை 2011இல் ‘சீன்’ என்ற அமெரிக்க பத்திரிகையின் செய்தியாளர், மீண்டும் புலனாய்வு செய்தார். போலீஸ் பொய் வழக்கை தயாரித்தது உண்மை என்று தெரிந்தவுடன், “அப்பாவிகளுக்காக உதவும் வழக்கறிஞர் குழு” பிரிட்ஜ்மேனுக்காக வழக்கை நடத்த முன் வந்தது. 27 ஆண்டுகளுக்கு முன் பொய் சாட்சி சொன்ன 12 வயது சிறுவன் தனது சாட்சியத்தை திருத்திக் கொள்ள விரும்புவதாக நீதிமன்றத்தில் கூறினார். இப்போது நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. ‘பொய் சாட்சியம்’ என்பது தெரிந்தவுடன், அமெரிக்க நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது.
ஆனால் இராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 24 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தை ‘திருத்தி’ எழுதியது உண்மைதான் என்று, வாக்கு மூலம் கொடுத்தார் – தியாகராஜன் என்ற புலனாய்வு அதிகாரி. பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்; அவர் குற்றமற்றவர் என்று கூறிய பிறகும், இந்திய நீதிமன்றம் அதை பொருட்படுத்த தயாராக இல்லாமல் காலம் கடத்திக் கொண்டே இருக்கிறது.
விடுதலையான ரோனி பிரிஜ்மேன், “என்னுடைய இளமைக் காலம் முழுதும் கொள்ளை போய் விட்டதே” என்று கதறியழுதார். அதேபோல்தான் தனது இளமைக் காலத்தை சிறையிலேயே தொலைத்தார் – நமது பேரறிவாளன். அமெரிக்காவில் ‘மனசாட்சி’யும், நேர்மையும் கொண்ட நீதிபதிகள் இருக்கிறார்கள் என்பதை உலகுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது இந்தத் தீர்ப்பு.

ஆர்.எஸ்.எஸ். ‘பொய்யர்கள்’
தொலைக்காட்சி வாதங்களில் பேசுவதற்கு வரும் ‘சங் பரிவாரங்கள்’ – ஏதோ, தமிழ்நாட்டையே தங்கள் பார்ப்பன மேலாண்மைக்குள் கொண்டு வந்து விட்டதுபோல பேசத் தொடங்கி விட்டார்கள். ஆணவம், அதிகாரம் அவரது பேச்சுகளில் காணக் கிடக்கிறது. உண்மைக்கு மாறான தகவல்களை முன் வைப்பதிலும் அவர்கள் வெட்கப்படுவதே இல்லை. ‘தலித்’ என்ற மராட்டிய சொலை, ‘சமஸ்கிருதம்’ என்ற ஒருவர் அறியாது உளறுகிறார். அது மராட்டிய சொல் என்று எடுத்துக் கூறிய பிறகும், அவர் ஏற்க தயாராக இல்லை. ‘பகவத் கீதை’யை தேசிய நூலாக்குவது சரி என்று வாதாட வந்த ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர், அரசியல் சட்டத்தின் முகப்புரையிலேயே – இராமாயணம், மகாபாரதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று ஒரு போடு போட்டார். எந்தப் பிரிவில் இருக்கிறது என்று கேட்டதற்கு, “இருக்கிறது; என்னால் நிரூபிக்க முடியும்” என்று சவால் விட்டார். இது அப்பட்டமான பொய். ‘பகவத் கீதை’யை தேசிய நூலாக்கும் முயற்சியை எதிர்த்து தலையங்கம் தீட்டிய ‘இந்து’ ஆங்கில நாளேடு (டிசம்.10, 2014), ஒரு வரலாற்று செய்தியை பதிவு செய்திருக்கிறது.
“ஆண் கடவுள்களானாலும, பெண் கடவுள்களானாலும், தேசிய பண்பாட்டுக் கூறுகளோடு கடவுள்களை இணைத்து வைத்தல் கூடாது” என்று அரசியல் சட்டத்தை உருவாக்கிய காலத்திலேயே திட்டவட்டமாக முடிவெடுக்கப் பட்டுவிட்டது. உண்மையில் அரசியல் சட்டத்தின் முகப்புரையை ‘கடவுள் பெயரால்’ தொடங்கலாம் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டபோது அதற்கு, அரசியல் நிர்ணய சபையில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. தங்களை தீவிர கடவுள் நம்பிக்கையாளர்களாக அறிவித்துக் கொண்டவர்கள்கூட இதை ஏற்கவில்லை. அரசியல் சட்டம் வழங்கியுள்ள ‘மனசாட்சி’ சுதந்திரம், “ஒருவர் எந்த மதத்தையும் ஏற்பதற்கோ அல்லது மதம் வேண்டாம் என்று மறுப்பதற்கோ உரிமை அளிக்கிறது. இந்த நிலையில் எந்த ஒரு மதத்தின் ‘புனித’ நூலையும் தேசிய நூலாக்குவது அரசியல் சட்டம் வலியுறத்தும் மதச்சார் பின்மைக்கு நேர் எதிரானது” என்று ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் தலையங்கம் படம் பிடிக்கிறது. தொலைக்காட்சி விவாதங்களை பார்ப்பவர்கள் தெளிவும் மதிநுட்பமும் சிந்தனையும் நிறைந்தவர்கள் என்பதை
‘சங் பரிவாரங்கள்’ புரிந்து கொள்ளவே மாட்டார்கள் போலிருக்கிறது.

மும்பை மாநகராட்சியின் அதிரடி
சென்னை போன்ற நகரங்களில் முஸ்லிம்கள், தலித் மக்களுக்கு வீடு வாடகைக்குக் கிடைப்பது அவ்வளவு எளிது அல்ல; தலித் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில்கூட மாட்டுக்கறி சாப்பிடு வோருக்கு வாடகைக்கு விடமாட்டோம் என்று இப்போது பார்ப்பனர்கள் சிலர் புறப்பட்டிருக் கிறார்கள். மாதம் ரூ.50,000 அளவுக்கு வாடகைக்கு வீடு எடுப்பவர்களுக்குக்கூட அசைவம் சமைக்க தடை விதிக்கிறார்கள். இப்போது பல அடுக்குமாடி குடியிருப்புகள் பார்ப்பனர்களுக்கு மட்டும் என்று கட்டப்பட்டு வருகின்றன. ஒரு முறை ‘இந்து’ நாளேட்டில் ‘பிராமின்ஸ் ஒன்லி’ என்று விளம்பரமே வெளிவந்து, பிறகு மறைந்த மருத்துவர் இனியன் இளங்கோ, அது குறித்து பத்திரிகை கவுன்சிலுக்கு புகார் தந்து, பல மாதங்களுக்குப் பிறகு அந்த ஏடு அதற்கு வருத்தம் தெரிவித்தது.
இந்த நிலையில் மும்பை மாநகராட்சி பாராட்டத் தக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி யுள்ளது. “சைவம் சாப்பிடுவோருக்கு மட்டுமே வீடு என்று வாடகைக்கோ விற்பனைக்கோ நிபந்தனை விதித்தால் வீடு கட்டுவதற்கு மாநகராட்சி வழங்கிய அனுமதி இரத்து செய்யப்படும்” என்று தீர்மானம் கூறுகிறது. மும்பை மாநகராட்சி சிவசேனை கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனாலும் இது பாராட்டுக்குரிய நடவடிக்கை என்பதில் சந்தேகமே இல்லை. சென்னை மாநகராட்சி இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டு வரக் கூடாதா?

‘கோட்சே’ தேசபக்தராம்
‘காந்தியை கொலை செய்த கோட்சே, காந்தியைப் போலவே ஒரு தேசபக்தர்தான்’ என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியிருக்கிறார். உ.பி. உன்னனோ தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சாமியார்’ கோலத்தில் காட்சி அளிக்கும் இவரது பெயர் ‘சக்ஷி மகராஜ்’. தொலைக்காட்சி அலை வரிசைகள் அவரது உரையை நேரடியாகவே ஒளிபரப்பிவிட்டதால் உண்மையை மறைக்க முடியவில்லை. மாநிலங்களவையிலும் மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சினையை கிளப்பவே, பா.ஜ.க. அணியினர் தடுமாறினர். மூச்சுக்கு மூச்சு மோடி இப்போது எல்லாம் காந்தியைப் பேசி வந்தாலும், இவர்களின் உள்ளத்தில் புதைந்து கிடப்பது கோட்சே பக்திதான் என்பது அவ்வப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. ‘கோட்சே’ சீடரான அந்த நாடாளுமன்ற உறுப்பினர், தனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், அப்படி பேசியதற்கு வருத்தம் தெரிவிப்தாகவும் அறிவித்தார்! ஏற்கெனவே ஒரு பெண் அமைச்சர், “இராமனுக்குப் பிறந்தவர்கள் நாட்டை ஆள வேண்டுமா? அல்லது முறைதவறிப் பிறந்தவர்கள் நாட்டை ஆள வேண்டுமா?” என்று பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பிய பிறகு வருத்தம் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் கோட்சேயை புகழ்ந்து ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஒரு நாடகம் நடத்த திட்டமிட்டனர். காங்கிரஸ் காட்டிய எதிர்ப்பால், பிறகு அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆட்சிக் காலத்துக்குள் இவர்கள் கோட்சேவுக்கு சிலை வைத்தாலும் வியப்பில்லை.!

‘பசுமேத யாகம்’
பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு லாரிகளில் கொண்டு போகப்படும் மாடுகளை மறித்து, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அரியானாவில் மாட்டை வெட்டினார்கள் என்று இந்த கூட்டம் தலித் மக்களை அடித்தே கொன்றது. ஆனால், ஒரே நேரத்தில் 5 இலட்சம் ஆடுமாடுகளை பலியிடும் பலித் திருவிழா, நேபாளத்தில் எல்லை ஓரமாக இருக்கும் பாரா எனும் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடக்கிறது. இங்குள்ள ‘கதி மாய’ கோயிலில் நடக்கும் இந்த உயிர்ப் பலிதான், உலகிலேயே அதிக எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் நடப்பதாகும். கடந்த நவம்பர் 29, 30ஆம் தேதிகளில் 5 இலட்சம் ஆடு மாடுகள் வெட்டப்பட்டன. உ.பி., பீகார், மேற்கு வங்கத்திலிருந்து கால்நடைகள் அழைத்துச் செல்லப்படுகின்றன. சூரிய உதயத்துக்கு முன் பார்ப்பனர்கள், ‘பசுமேத யாகம்’ நடத்தி, பலியைத் தொடங்கி வைக்கிறார்கள். மாடுகள் வெட்டுவதை எதிர்த்து ஆங்காங்கே கலவரம் செய்யும் சங் பரிவாரங்கள் இதை மட்டும் வேடிக்கைப் பார்ப்பது ஏன்?

இராஜபக்சேவுக்கு ஆசி வழங்கிய பார்ப்பனர்கள்
இனப்படுகொலை செய்துவிட்டு ஏழுமலையானை தரிசிக்க வந்தால் அதை கோயில் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும். அதற்கெல்லாம் ஆகமவிதிகள் எதும் கிடையாது போலும்! உண்டியலில் போடும் கருப்புப் பணத்தையும், கள்ள மார்க்கெட் கடத்தல் பேர்வழிகளையும் ஏற்றுக் கொள்ளும் “ஏழுமலையான்”, இனப் படுகொலை செய்தவர்களை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டானா, என்ன? ஏழுமலையான் ஏற்கிறானா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்கட்டும் . திருப்பதி நிர்வாகமும், வேத பண்டிதர்களும் வரவேற்று ஆசி வழங்க தயாராகவே இருக்கிறார்கள். கோயிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் இராஜபக்சேவுக்கு லட்டு, தீர்த்தப் பிரசாதம், ஆன்மிக புத்தகங்களை வழங்கியதோடு, வேத பண்டிதர்கள் வேத மந்திரம் ஓதி, ஆசி வழங்கினார்களாம். எதற்கு? இனப்படுகொலையை நடத்தி முடித்ததற்கா?
இராஜபக்சே வருகைக்காக கோயிலின் நான்கு மாடவீதிகளில் இரும்புக் கதவுகள் அடைக்கப்பட்டு, பக்தர்களுக்கு ‘அங்கப் பிரதட்சணை’ டிக்கட் வழங்குவதும் நிறுத்தப்பட்டதாம். ஈழத்தில் இந்துக் கோயில்களை இடித்துவிட்டு திருப்பதி கோயிலில் தரிசனம் செய்துவிட்டால் போதுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ‘வைகோ’. வெளியுறவுக் கொள்கைகளை உருவாக்கும் இந்திய பார்ப்பன அதிகார வர்க்கத்தை தனக்கு எப்போதும் ஆதரவாக வைத்திருப்பதே இராஜபக்சேயின் திருப்பதி வருகை என்ற செய்தியும் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆக இந்திய பார்ப்பன அரசியலை இராஜபக்சே புரிந்து வைத்திருப்பார் போலிருக்கிறது! “திருப்பதியில் லட்டு தயாரிப்பில்கூட பார்ப்பனர்கள் மட்டும்தான் ஈடுபடுத்தப்படுகிறார்களாம். அதுதான் அய்தீகம் என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தாகாரத்.

ஆர்.எஸ்.எஸ்சை எதிர்க்கும் சாமியார்கள்
ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இப்போதெல்லாம்
‘5 நட்சத்திர’ ஓட்டல் கலாச்சாரத்தில் ஆடம்பரமாக வாழத் தொடங்கி விட்டார்கள். ஆர்.எஸ்.எஸ். ‘ஆன்மிக’த்தை கை கழுவி ‘அசுர சக்தி’யாக மாறி வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கூறுவது யார் என்பதுதான் வியப்புக்குரியது. உ.பி.யில் உள்ள ‘இந்துஸ்தான் மோட்சா’ என்ற அமைப்பைச் சார்ந்த இந்து சாமியார்கள்தான், இப்படி வெளிப்படையாக குற்றம்சாட்டி இருக்கிறார்கள். உ.பி. மாநிலம் காசியாபாத்தில் இதற்காக வரும் மார்ச் மாதம் 3 ஆம் நாள் மாநாடு நடத்தப் போவதாகவும் இந்த அமைப்பின் தலைவரான யதிநரசிங்கானந்த சரசுவதி எனும் பார்ப்பனர் தரிவித்துள்ளார்.
– இரா

பெரியார் முழக்கம் 18122014 இதழ்

You may also like...

Leave a Reply