பீகார் முதல்வரின் பெரியார் குரல்!
“கோவில்களில் பூஜை செய்ய ஒரு சமூகத்தவர் மாத்திரம் ஏன் உரிமை கொண்டாட வேண்டும்? அவர்கள் என்ன நிரந்தர ஒப்பந்ததாரர்களா?” என்று ஜிதன் ராம் மாஞ்ஜி கேட்டார்.
பாட்னா நகரில் உள்ள பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பீகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி பேசியபோது, “சமூகத்தில் மக்களிடையே உள்ள பிரிவினைக்கு மூல காரணம் மதம் தொடர்பான சிந்தனையே” என்றார். “மதமின்றி இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள், மதங்களை பின்பற்றுபவர்கள் அவர்கள் சார்ந்த மதத்தினருக்கு மட்டுமே சிறப்பு மரியாதை செய்வார்கள். ஆனால், இங்கே ஒரு மதத்தைச் சார்ந்தவர்களை அதே மதத்தைச் சார்ந்தவர்கள் பிரித்து வைக்கும் கொடுமை நடக்கிறது. இங்குள்ள மதத்தில் என்னுடைய மதத்தவனையே ஜாதியின் பெயரால் பிரித்து வைக்கிறார்கள். இதன் காரணமாக சமூகத்தில் நிரந்தர பிளவு ஏற்பட்டு விடுகிறது. இங்கு மாத்திரமே பிறப்பால் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன.
உடல் உழைப்பற்ற செயல்களை செய்பவர்கள் இங்கு உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் கடுமையாக உழைக்கும் சமூகத்தினரை ஜாதியின் பெயரால் பிரித்து வைக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட பணிக்காக பிறந்தவர்கள்போல் பரம்பரை பரம்பரையாக செய்து வருவது இந்தியாவில் மாத்திரமே நடக்கிறது. கோவில்களில் பூஜை செய்வது, அதன் மூலம் வரும் வருமானத்தில் சுகபோகமாக வாழ்வது, ஏழைகளின் உடலுழைப்பைச் சுரண்டி வாழ்வது போன்ற செயல்களை ஒரு சாரார் செய்து சமூகத்தில் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தி வைத்துள்ளனர். கோவில்களுக்குப் பூஜை செய்ய இவர்கள் என்ன பரம்பரை ஒப்பந்தக்காரர்களா? அப்படியென்றால் அந்த சாமிப் படங்களை ஏன் நீங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர்கள்?
எனது வீட்டில் எந்த ஒரு சாமிப் படமும் இல்லை. மனிதர்களைப் பிரிக்கும் வர்ணத்தைக் கூறும் மதக் கோட்பாட்டை நான் பின்பற்றுவதும் கிடையாது; அம்மதத்தின் அடையாளமான சாமிகளை நான் வீட்டில் வைத்திருப்பதும் கிடையாது; எனது வீட்டில் மக்களுக்காக உழைத்த தலைவர்கள் படம் மாத்திரமே இருக்கிறது” என்று பீகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி கூறினார்.
பெரியார் முழக்கம் 27112014 இதழ்