மேட்டூரில் முப்பெரும் நிகழ்வுகள்
மேட்டூரில் 25.2.2014 அன்று மாலை முப்பெரும் விழாக்கள் சிறப்புடன் நடந்தன. ‘அகமணமுறையை அகற்றுவோம்; ஆரோக்கிய சமூகத்தை வளர்ப்போம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு; ‘புரட்சிப் பெரியார் முழக்கம்-2014’ஆம் ஆண்டு மலர் வெளியீடு; ஒரே ஜாதிக்குள் நிகழும் இணையர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சந்திக்கும் உடல், மனநலக் கோளாறுகளை அறிவியல் ரீதியாக மருத்துவர்கள் முன் வைத்த கருத்துகளைத் திரட்டி உருவாக்கப்பட்ட ஆவணப் படம் திரையீடு என்ற முப்பெரும் நிகழ்வுகள் நடைபெற்றன. மாலை 5.30 மணியளவில் மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் ஜாதி எதிர்ப்புப் பாடல் களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து மேட்டூர் பெரியார் பிஞ்சுகள் நடத்திய கலை நிகழ்ச்சிகள், பரப்புரை பயணத்தில் அகமண முறைக்கு எதிரான கருத்துகளை விளக்கிடும் திராவிடர் கலைக் குழுவினர் நடத்திய நாடகம் ஆகிய நிகழ்வுகள் அனைவரையும் கவர்ந்தன.
கருந்திணை சார்பில் தயாரிக்கப்பட்ட அறிவியல் விளக்கங்களைக் கொண்ட ஆவணப் படம் திரையிடப்பட்டது. 40 நிமிடங்கள் ஓடிய இத்திரைப்படத்தில் பெண், ஆண் மருத்துவர்கள், ஒரே ஜாதித் திருமணங்களால் பிறக்கும் குழந்தைகள் எதிர்கொள்ளும் மனநல உடல்நலக் கேடுகளை விளக்கினர். மண்டல அமைப்புச் செயலாளர் மேட்டூர் சக்தி தலைமையில் மலர் வெளியிட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. எழுத்தாளர் பாமரன் வெளியிட, ‘எவிடென்சு’ கதிர் மலரைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ரூ.150 விலையுள்ள மலர் ரூ.100க்கு விற்கப்பட்டது. மேடையில் திருச்செங் கோடு கழகத் தோழர் சோமசுந்தரம்-காஞ்சனா இணையரின் பெண் குழந்தைக்கு கொளத்தூர் மணி ‘இளம்பரிதி’ என்று பெயர் சூட்டினார்.
வழக்கறிஞர் திருமூர்த்தி, கழகப் பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையைத் தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத் தூர் மணி நிறைவுரையாற்றினார். பயணக் குழுவில் தொடர்ந்து பரப்புரை செய்த பொள்ளாச்சி விஜயராகவன் பயணத்தில் மக்கள் தந்த ஆதரவை விளக்கிக் கூறினார். வெளியீட்டு செயலாளர் சூலூர் தமிழ்ச்செல்வி, பரப்புரைப் பயணத்தின் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
கழகத் தலைவர், தோழர்கள் விடுதலைக்கு நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்கள் திரு மூர்த்தி, துரை. அருண், சேலம் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குகளில் முழுமையான பங்களிப்பு வழங்கிய வழக்கறிஞர்கள் ஆனந்தராஜ், மாயன், கவுதம பூபாலன், சிறையிலிருந்து விடுதலையான தோழர்கள் நங்கவள்ளி கிருட்டிணன், அருண் குமார், சேலம் அம்பிகாபதி ஆகியோருக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும் பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் ஆடைகள் போர்த்தி பாராட்டினர். சேலம், ஈரோடு, கோபி, கோவை, குமாரபாளையம், சென்னை உள்ளிட்ட மாவட்டங் களிலிருந்து தோழர்கள் ஏராளமாக நிகழ்ச்சிக்கு திரண்டு வந்திருந்தனர்.
பெரியார் முழக்கம் 06032014 இதழ்