கழக வளர்ச்சி-கழக ஏடு குறித்து விவாதம்: கோவை மண்டல கழக கலந்துரையாடல் முடிவுகள்

21-03-2014 வெள்ளிக்கிழமை அன்று காலை 11-00 மணியளவில், பொள்ளாச்சி ‘பர்வானா இல்லத்”தில் (வங்கி பணியாளர்கள் சங்க கட்டிடம்) கோவை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம் மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விஜயன் தலைமையில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் கடவுள் மறுப்பும், பொள்ளாச்சி விஜயராகவன் ஆத்மா மறுப்பும் கூற, கோவை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பொள்ளாச்சி மாவட்டம் என தனியாக பிரித்தல், மாவட்ட அமைப்புகளை புதுப்பித்தல், பயிற்சி வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பல்லடம் விஜயன் உரையாற்றி துவக்கி வைத்தார். தலைமை சொல்லும் வேலைகளை மட்டும் செய்தால் போதாது; கிராமப்புற பிரச்சாரம் உள்ளிட்ட பல வேலைகளை நாமே முன்னெடுக்க வேண்டும் என்று செயலவைத் தலைவர் துரைசாமி வலியுறுத்தினார். உயர்கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராகவும், ஜோதிடக் கல்விக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியம் குறித்து வழக்குரைஞர் பன்னீர்செல்வம் பேசினார்.

தலைமைக் கழகம் சொல்லும் அனைத்து பணிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கும் மாவட்டம் திருப்பூர்; அதேபோல பரப்புரை பயணங்களில் கூடுதல் பங்கேற்பு ஆகியவற்றிற்கு காரணம் நான்கு கட்ட பயிற்சி வகுப்புகள், திராவிடர் சீறணி பயிற்சி வகுப்பு, பெண்கள் பயிற்சி வகுப்பு ஆகியவை திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றதால் தான். கோவை மாவட்டத்திலும் இது போன்ற வகுப்புகளை நடத்த ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்; பயிற்சி வகுப்புக் கான பாடத் திட்டங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்கள் முதலியவற்றை தலைமை முறைபடுத்தியுள்ளது எனவே பயிற்சி வகுப்புகள் தலைமையின் ஆலோசனையைக் கேட்டு நடத்தினால் சிறப்பாக இருக்கும்; அகமண முறைக்கு எதிரான பரப்புரைக்கு நல்லவரவேற்பு கிடைத்தது நமக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது, இதுபோன்ற பயணம் தொடர்வது அவசியம் என கழக அமைப்புச் செயலாளர் தி.தாமரைக்கண்ணன் தனது உரையில் குறிப்பிட்டார்.

மக்கள் சந்திப்பு இயக்கம் சில மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளது; அதை மேலும் கூடுதல் முயற்சியோடு தொடர்ந்து எடுத்து செல்ல வேண்டும். பெரியார் முழக்கத்தை இன்னும் கூடுதலாக கொண்டு செல்லுதல், மாத இதழ் தொடங்குதல், புத்தகங்கள் வெளியிடுதல் போன்ற பல வேலைகளை நாம் செய்வதற்கு நிதி ஆதாரம் அவசியம்; முழு நேரப்பணியாளர்கள் மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு பேராவது தேவை எனவே மாநில அளவில் நிதி வசூல் குழு ஒன்று அமைப்பது அவசியம் என்று கழகப் பொருளாளர் ஈரோடு ப.இரத்தினசாமி தனது உரையில் குறிப்பிட்டார்.

தோழர்கள் நிர்மல்குமார், திருப்பூர் மணிகண்டன் ஆகியோர் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் மூலம் தங்களின் அனுபவங்களையும், மக்களின் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். பெரியார் முழக்கம் கிடைப்பதில் அஞ்சல் துறையில் இருக்கும் சிக்கல் குறித்தும், மாற்று ஏற்பாடு குறித்து சூலூர் நாராயணமூர்த்தி கேள்வி எழுப்பினார். தங்கள் பகுதியில் அஞ்சல் துறைக்கு கடிதம் எழுதியதால் சிக்கல் தீர்ந்தது பற்றியும், மாற்று ஏற்பாட்டுக்கான சிரமம் குறித்தும் பொள்ளாச்சி விஜயராகவன் பதிலளித்தார்.

மாற்று அமைப்பு தோழர்களை நமது மேடையில் பேச அழைப்பது குறித்து ஜீவாநகர் குமார் கேள்வி எழுப்பினார். விஜயன், பன்னீர்செல்வம், முகில்ராசு, துரைசாமி ஆகியோர் இது குறித்து சிறிது நேரம் விவாதித்தனர். பெரியார் முழக்கம், மக்கள் சந்திப்பு இயக்கம் ஆகிய வேலைகளை சரியாக செய்யாமல் விட்டதற்காக வருத்தம் தெரிவித்த உக்கடம் கிருஷ்ணன், இனி அதிக ஈடுபாடு காட்டுவதாக உறுதி அளித்தார். மக்கள் சந்திப்பு இயக்கத்திற்கு அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கையில் குறைவான செய்திகள் இருப்பதாகவும், செய்திகள் விரிவாக்கப்பட வேண்டும் என்றும் பல்லடம் வடிவேல் கருத்து கூறினார். தோழர்கள் நேருதாஸ், பத்மநாபன் ஆகியோர் நடைமுறையில் இருக்கும் சிக்கல்கள் குறித்து கருத்து தெரிவித்தனர்.

இன்று சில பொறுப் பாளர்களே கலந்து கொள்ள வில்லை, எனவே பொறுப் பாக செயல்படுபவர் களுக்கே பொறுப்பு வழங்கப்பட வேண்டும்; பெரியார் முழக்கத்திற்கான சந்தா தொகையை அவரவர் களே செலுத்துவதற்கு வாய்ப்பாக வங்கி கணக்கு எண் பெரியார் முழக்கத்தில் வெளியிடப்படவேண்டும்; பெரியார் முழக்கத்திற்கு என தனியாக ஒரு பொறுப்பாளர் நியமித்தால் சிறப்பாக இருக்கும் என்று சூலூர் பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்தார். காதலர் தினத் தில் காதலை எதிர்ப்பவர் களுக்கு எதிராக நாம் அடையாள போராட்டங்களை நடத்தவேண்டும் என தண்டபாணியும், மேலும் குணா, ஆண்ட்ரூஸ், தனகோபால் ஆகியோரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

நமது கொள்கைகளை கலை வடிவங்களில் கொண்டு செல்லவேண்டும் என்று கவிதாவும், பறை முழக்கம், சிலம்பாட்டம் போன்ற பயிற்சிகளை பெண்களுக்கு வழங்கவேண்டும் என்று இராஜாமணியும் கருத்து தெரிவித்தனர். கழகத்திற்கான புதிய பத்து பாடல்களுக்கு மெட்டு தயார் செய்துள்ளதாக இசைமதியும், குறும்படம் எடுப்பதற்கான கருத்துருவாக்கங்கள் சு.க.ப.க சார்பாக தயார் நிலையில் உள்ளதாக அ.பா.சிவாவும் தெரிவித்தனர். பெரியார் முழக்கத்திற்கான எட்டு ஐந்தாண்டு சந்தாக்களும், எட்டு ஓராண்டு சந்தாக்களும் கோவை மாநகர் மாவட்டக் கழகம் சார்பாக வழங்கினர்.

இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை ஆற்றினார், அவர் தனது உரையில் “ஜாதி ஒழிப்புக்காக கடவுள் மறுப்பு என்பது தான் நமது நிலைப்பாடு. நமது அமைப்பின் பெயர் ஊடகங்களில் வரவேண்டும் என்பதற்கான எந்த வேலைகளையும் நாம் செய்ய தேவையில்லை; சில இந்துத்துவா அமைப்புகளின் பெயர்கள் எப்போதும் ஊடகங்களில் வருவதில்லை, ஆனால் அந்த அமைப்புகளில் கணிசமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. தோழர்கள் தங்களை முழுமையாக தெளிவுப்படுத்திக் கொள்ள பயிற்சி வகுப்புகள் அவசியம் என்று விளக்கிப் பேசிய கழகத் தலைவர், ஒத்த கருத்துள்ள அமைப்புகளோடு இணைந்து போராடுவதில் நமது நிலைப்பாடு குறித்தும் விளக்கமளித்தார். மேலும் இந்துத்துவா அமைப்புகள் பெரும்பாலும் கோவையில் இருந்தே துவங்குவதால், நாம் கோவை மாவட்டத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்; அதனால் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளவும் நாம் தயாராக இருக்கவேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்

கோவை மாவட்டத்தை, கோவை மாநகர், புறநகர், பொள்ளாச்சி என மூன்று மாவட்டங்களாக பிரித்து இயங்குவது என்றும் கீழ்கண்டவர்கள் பொறுப் பாளர்களாக செயல்படுவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.

கோவை மாநகர் மாவட்டத் தலைவர் மா.நேருதாஸ், செயலாளர் சு.பத்மநாபன், அமைப்பாளர்கள் கி.இராஜாமணி மற்றும் வழக்குரைஞர் பன்னீர்செல்வம்.

கோவை புறநகர் மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், செயலாளர் சி.பிரசன்னா, அமைப்பாளர் பெ.அய்யாசாமி.

பொள்ளாச்சி மாவட்டத் தலைவர் ச.விஜயராகவன், செயலாளர் நா.வே.நிர்மல்குமார்.

 

You may also like...