இட ஒதுக்கீடு பகிரப்பட்ட வரலாறு-குமாரபாளையம் கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு (3)
செப்-29 அன்று குமாரபாளையத்தில் கழகம் நடத்திய பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ‘பெரியாரின் போராட்டங்களும், மனித நேயமும்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை கடந்த இதழின் தொடர்ச்சி…
நம்முடைய அரசர்கள் இருந்த காலத்தில் தமிழ்ச் சமூகம் எப்படி இருந்தது என்பதைப் பார்க்க வேண்டும். சங்க இலக்கியங்களைப் படித்தவர்களுக்கு இது தெரியும். சங்க இலக்கியங்களைப் படைத்த புலவர்களில் நான்கைந்து பேருடைய பெயர்களைச் சொன்னாலே தமிழ்ச் சமூகம் எப்படி இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். கொல்லன் அழிசி என்பவரும், கூலவாணிகள் சாத்தன் என்பவரும் பாடல்களை எழுதியுள்ளனர். கூலவாணிகன் என்றால் தானிய வணிகர், பேரையூர் பெருந்தச்சன் பாடல் எழுதியிருக்கிறார். வெண்ணிக் குயத்தியார் பாடல் எழுதியிருக்கிறார். குறமகள் இளவெயினி பாடல் எழுதியிருக்கிறார்.
இவர்களெல்லாம் யார்? கொல்லர் தொழில் செய்பவர்கள், தானிய வணிகர்கள், தச்சுத் தொழில் செய்பவர்கள், குயவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், இப்படிப் பல்வேறு தொழில்களைச் செய்தவர்களும் இலக்கியங்களைப் படைத்திருக்கிறார்கள். பெண்களும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? உயர்ந்த இலக்கியங்களைப் படைக்கக்கூடிய கல்வியறிவு எல்லாச் சமூக மக்களிடமும் இருந்திருக்கிறது.
ஆண், பெண் என்ற வேறுபாடின்றி அனைவரிடமும் கல்வியறிவு இருந்திருக்கிறது. அப்படியானால், ஒரு கேள்வி எழுகிறது. இவ்வளவு உயர்ந்த கல்வியறிவைப் பெற்றிருந்த தமிழ்ச் சமூகத்தில், நம்முடைய தாத்தாக்கள் ஏன் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தார்கள்? இது எப்படி நடந்திருக்க முடியும்? சங்ககாலத்தில் கல்வியறிவு பெற்றிருந்த சமூகம் தொடர்ந்து வளர்ந்துகொண்டுதாளே வந்திருக்க வேண்டும்? ஆனால், இடையில் ஏதோ ஒரு தத்துவம் நுழைந்திருக்கிறது. அந்தத் தத்துவம் நம்மை மயக்கியிருக்கிறது. குழப்பியிருக்கிறது. நம்மிடமிருந்த கல்வி உரிமையைப் பறித்திருக்கிறது.
அதனால்தான் தமிழ்ச் சமூகம் கல்வியறிவை இழந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த நிலையிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காகத்தான் கயமரியாதை இயக்கம் தோன்றியது. பார்ப்பனரல்லாதார் இயக்கமும் பிற சமூகநீதி இயக்கங்களும் தோன்றின.
பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் சார்பில் நீதிக்கட்சி தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தது. 1920ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. அப்போது இரட்டை ஆட்சி முறை நடைமுறையில் இருந்தது. அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அமைச்சர்களுக்கு முழுமையான அதிகாரம் கிடையாது. குறிப்பிட்ட சில துறைகளின் அதிகாரங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. இப்போதும் ஏறக்குறைய அப்படிப்பட்ட நிலைதான் இருக்கிறது. அன்றைக்கு நிதித்துறை, காவல்துறை போன்ற முக்கியமான அதிகாரங்கள் ஆங்கிலேயர்களிடம்தான் இருந்தன. நிதி அவர்களுடைய கையில் இருந்தது. காவல்துறை அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தது. முக்கியமான நிர்வாக அதிகாரங்களும் அவர்களிடம்தான் இருந்தன.
நம்முடைய அமைச்சர்களுக்கு என்னென்ன துறைகள் இருந்தன? பள்ளிக்கூடங்கள், கல்வி, சாலை வசதிகள், பதிவுத்துறை போன்ற சில துறைகள்தான் இருந்தன. இதைத்தான் இரட்டை ஆட்சி என்று அழைத்தார்கள். 1935ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் கூடுதலான அதிகாரங்கள் இந்தியர்களிடம் வந்தன. இப்படிப்பட்ட வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் நடைபெற்ற தேர்தலில்தான் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு, அனைத்துச் சமூக மக்களுக்கும் உரிய வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று நீதிக்கட்சித் தலைவர்கள் சிந்தித்தார்கள். அதற்காக ஒவ்வொரு கட்டமாக முயற்சிகளை மேற்கொண்டார்கள், அனைவருக்கும் உரிய பங்கை வழங்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். அதை எப்படிப் பகிர்ந்தளிப்பது ? இப்போது ஒரு பொருளைப் பல கூறுகளாகப் பிரித்துப் பங்கிடுவதைப் போல அரசுப் பதவிகளையும் வாய்ப்புகளையும் அனைத்துச் சமூகத்தினருக்கும் உரிய முறையில் பிரித்தளிக்க வேண்டும் என்று கருதினார்கள்.
அந்தக் காலத்தில் இடஒதுக்கீட்டை எப்படிப் பிரித்துக் கொடுத்தார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.கடைகளில் இறைச்சியைப் பன்னிரண்டு கூறுகளாகப் பிரித்து விற்பதைப் போல, மொத்த வாய்ப்புகளையும் பன்னிரண்டு பங்குகளாகப் பிரித்தார்கள். அதில் இரண்டு பங்குகளைப் பார்ப்பனர்களுக்கு வழங்கினார்கள். பன்னிரண்டு பங்குகளில் ஒரு பங்கு என்பது 8.3 விழுக்காடு. தோராயமாக எட்டு விழுக்காடு என்று வைத்துக்கொள்ளலாம். அப்படியானால், இரண்டு பங்குகள் என்பது ஏறத்தாழ 16 விழுக்காடு. அடுத்ததாகப் பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஐந்து பங்குகள் வழங்கப்பட்டன. அது ஏறத்தாழ 40 விழுக்காடு, சில்லறைக் கணக்கையும் சேர்த்தால் 44 விழுக்காடு என்று சொல்லலாம்.இஸ்லாமியர்களுக்கு இரண்டு பங்குகள், கிறிஸ்தவர்களுக்கு இரண்டு பங்குகள், அன்றைக்குத் ‘தீண்டத்தகாத மக்கள்’ என்று பிரித்து வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு ஒரு பங்கு என ஒதுக்கினார்கள். அந்த ஒரு பங்கு என்பது 8.3 விழுக்காடு. பின்னர் காலப்போக்கில் இந்த முறை மாற்றப்பட்டது. பன்னிரண்டு பங்குகளாக இருந்ததைப் பதினான்கு பங்குகளாக மாற்றினார்கள்.
ஏன் மாற்றினார்கள்? இன்றைக்கு நாம் உள் இடஒதுக்கீட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் அல்லவா? அதுபோன்ற ஒரு பிரச்சினை அன்றைக்கும் இருந்தது. முதலில் பார்ப்பனரல்லாத இந்துக்கள் அனைவரையும் ஒரே பிரிவாக வைத்திருந்தார்கள். ஆனால், அந்தப் பிரிவில் இருந்த ஆறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களே பெரும்பாலான இடங்களைப் பெற்றுக்கொண்டார்கள். பெரியார் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, ஆறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களே அந்த இடஒதுக்கீட்டு வாய்ப்புகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டார்கள் என்று கூறுவார்.
எனவே, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில் பன்னிரண்டு பங்குகள் பதினான்கு பங்குகளாக மாற்றப்பட்டன. பார்ப்பனர்களுக்கு இரண்டு பங்குகள் வழங்கப்பட்டன. பதினான்கு பங்குகளில் இரண்டு பங்குகள் என்பது ஏறத்தாழ 14 விழுக்காடு, அதனால், அவர்களுடைய இடஒதுக்கீட்டு விழுக்காடு குறைந்தது. பார்ப்பனரல்லாத மக்களுக்கு முன்புபோலவே ஐந்து பங்குகள் வழங்கப்பட்டன. பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தனியாக இரண்டு பங்குகள் வழங்கப்பட்டன. இஸ்லாமியர்களுக்கு ஒரு பங்கு, கிறிஸ்தவர்களுக்கு ஒரு பங்கு,தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு பங்குகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் அந்த மக்களுக்கு ஏறத்தாழ 14 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்தது.
நீதிக்கட்சி ஆட்சியிலும் அதைத் தொடர்ந்து ஆளும் தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்பட்ட மக்களுக்கு 14 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 1943ஆம் ஆண்டில் அம்பேத்கர் வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினராக இருந்தபோதுதான் இந்திய அளவில் பட்டியலின மக்களுக்கு 8.3 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தர முடிந்தது. ஆனால், இங்கே நாம் அதற்கு முன்பே 14 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்றிருந்தோம். இப்படித்தான் இடஒதுக்கீட்டு முறை வளர்ந்துகொண்டிருந்தது.
அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் தொடர்பாகப் பல்வேறு சிக்கல்கள் நிலவின. அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்து விரிவாகப் பேசுவதற்கு இங்கு நேரமில்லை. எனினும், அம்பேத்கர் மற்றும் பெரியார் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் ஓர் உரையாடல், அன்றைய சூழலைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
பெரியாரும் அம்பேத்கரும் புத்தர் மாநாட்டுக்காகச் சென்றிருந்தபோது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இடம் வழங்கப்படாதது குறித்து பெரியார் அம்பேத்கரிடம் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அம்பேத்கர், அரசியல் சட்டத்தை எழுதும்போது தாம் எதிர்கொண்ட நெருக்கடிகளை விளக்கியதாக அந்த நிகழ்வு எடுத்துரைக்கப்படுகிறது. அத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது என்பதை இந்த உரையாடல் உணர்த்துகிறது.
அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு விழுக்காடு அடிப்படையில் அமைந்தது. அதற்கு முன்பு சென்னை மாகாணத்தில் 100 இடங்களையும் பிரித்துக் கொடுக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை நடைமுறையில் இருந்தது. ஆனால், அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது இடஒதுக்கீடு விழுக்காடு அடிப்படையில் அமைந்தது. அப்போது, இடஒதுக்கீடு அதிகமாக இருந்தால் தகுதி குறைந்துவிடும் என்ற அச்சத்தைப் போக்குவதற்காக, குறைவான இடங்களே வழங்கப்படும் என்றும் அதனால் தகுதி பாதிக்கப்படாது என்றும் அம்பேத்கர் சமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்தச் சூழலில் கூறப்பட்ட கருத்துகளை எடுத்துக்கொண்டு, இன்றுவரை 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். அம்பேத்கர் கூறிய அனைத்தையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள், தங்களுக்கு வசதியான ஒரு கருத்தை மட்டும் தொடர்ந்து மேற்கோள் காட்டுகிறார்கள். அம்பேத்கர் கூறியவற்றில் எத்தனையை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டு முறையைப் புரிந்துகொள்வது அவசியம். ஒரு காலத்தில் மொத்தம் 330 மருத்துவக் கல்லூரி இடங்கள் இருந்தன. அவற்றில் 17 இடங்கள் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் வெளிமாநிலங்களில் வாழ்ந்த தமிழர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. மேலும், 13 இடங்களை முதலமைச்சரோ மருத்துவக் கல்வி இயக்குநரோ இணைந்து தங்களுக்குரிய விருப்ப அதிகாரத்தின் அடிப்படையில் வழங்க முடியும் என்ற நடைமுறையும் இருந்தது.
காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் மருத்துவக் கல்வி இயக்குநர் மாணவர் சேர்க்கைப் பட்டியலை அவரிடம் கொண்டு சென்றபோது, காமராசர் அதை உடனடியாகப் பார்த்து ஒப்புதல் அளித்ததாக ஒரு நிகழ்வு கூறப்படுகிறது. பட்டியலைக் கொடுத்துவிட்டு மீண்டும் எப்போது வர வேண்டும் என்று அதிகாரி கேட்டபோது, காமராசர், “உட்காருங்கள்; வாங்கிக்கொண்டு போங்கள்” என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.
பெற்றோரின் கையொப்பம் இட வேண்டிய இடங்களில் கையொப்பமிடத் தெரியாதவர்களின் பிள்ளைகளும் மருத்துவராக வர வேண்டும் என்பதற்காகவே அந்த இடங்களை வழங்கியதாக அவர் விளக்கியதாகக் கூறப்படுகிறது. கல்வி வாய்ப்பு என்பது ஏற்கெனவே வசதி பெற்றவர்களுக்கு மட்டும் உரியதல்ல; கல்வி மறுக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற சமூகநீதிப் பார்வை அதில் வெளிப்படுகிறது.
காமராசர் பள்ளிகளைத் திறந்தார் என்று பாராட்டும்போது, அதற்கு முன்பு மூடப்பட்ட பள்ளிகள் பற்றியும் பேச வேண்டும். ராஜாஜி ஆட்சியில் மூடப்பட்ட பள்ளிகளைப் பெரியார் எதிர்த்தார்; பின்னர் காமராசர் ஆட்சியில் கல்வி வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டன என்ற வரலாற்றுப் பின்னணியையும் மறந்துவிடக் கூடாது.மீதமிருந்த 300 மருத்துவக் கல்லூரி இடங்களும் சென்னை போன்ற நகரங்களுக்கே சென்றுவிடக் கூடாது என்பதற்காக, சென்னை மாகாணம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் 75 இடங்கள் என ஒதுக்கப்பட்டன. அதிலும் பெண்களுக்கு 20 விழுக்காடு இடங்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. தேவைப்பட்டால் தகுதியில் தளர்வு அளித்தாவது பெண்களுக்கு அந்த இடங்களை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாடும் முன்வைக்கப்பட்டது.
இன்று பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்படும் முடிவுகளுக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு இடம் வழங்குவதற்கான நடைமுறைகளை உருவாக்கிய சமூகநீதிப் போராட்டங்களையும் நினைவுகூர வேண்டும்.வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றில் செண்பகம் துரைராஜன் வழக்கு முக்கியமாகப் பேசப்பட்டது. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை மற்றும் அரசுப் பணித் தேர்வு தொடர்பாகப் பார்ப்பனர்களால் தொடரப்பட்ட வழக்குகள், அன்றைய சமூகநீதிப் போராட்டத்தின் தீவிரத்தை வெளிப்படுத்தின. வழக்குத் தொடர்ந்தவர்களுக்காகவும் அரசின் சார்பாகவும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இடம் ஒதுக்கி வைக்கப்படும் என்ற உறுதிமொழிகளும் வழங்கப்பட்டன. பின்னர் வழக்கு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றபோது, விண்ணப்பமே செய்யாதவருக்காக இடத்தை ஒதுக்கி வைப்பது உள்ளிட்ட நடைமுறைகள் குறித்த கேள்விகள் எழுந்தன. வயது வரம்பு போன்ற நிபந்தனைகளும் அந்த வழக்கில் விவாதிக்கப்பட்டன.
1921ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே நடைமுறையில் வலுப்பெற்றது. அரசியல் சட்டத்தின் பெயரால் அந்த உரிமை பறிக்கப்பட்டதாகப் பெரியார் கருதினார். பல ஆண்டுகளாக மக்கள் அனுபவித்த உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து அவர் போராட்டங்களை அறிவித்தார். வகுப்புரிமை மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தலையங்கங்கள், போராட்டங்கள் எனத் தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தொடரும்…….
பெரியார் முழக்கம் இதழ் 12112026
