பெரியார் அறிவுலகத்துக்கு ‘ஆயுத பூஜை’ விடுமுறையாம்!
ஆயுத பூஜையைக் கொண்டாடுமாறு சுற்றறிக்கை விட்ட தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்திலும் அதை முறையாகப் பின்பற்றிக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தலைமைச் செயலகத்தில் ஆயுத பூஜை போட்ட செய்தியை இதுவரை கேட்டதில்லை. புகை மூட்டத்தைத் தாங்க முடியாமல் அங்கே சென்சார் கருவியே எச்சரிக்கை மணி அடித்ததைத் தொலைக்காட்சிகளில் பார்த்தோம்! இதேபோல் தொழுகைகளையும் பிரார்த்தனைகளையும் நடத்தப் போகிறார்களா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும். அதற்காக சில அமைச்சர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
கோவையில் `பெரியார் அறிவுலகத்தை’ ஆயுத பூஜைக்காக இரண்டு நாட்கள் பூட்டுப் போட்டு விட்டார்கள். பண்டிகை கொண்டாட்ட `புனிதநாளில்’ பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பது இந்துக்களை புண்படுத்திவிடும் என்று அஞ்சுகிறார்களா? அல்லது ஆஸ்தான சோதிடர்கள் தந்த ஆலோசனையா? முதலமைச்சர் தலைமையிலான `மதச்சார்பற்ற’ கூட்டணித் தலைவர்களும் மவுனம் சாதிக்கிறார்கள்; ஆயுத பூஜையில் கலந்துவிட்டார்களா? அரசு நிறுவனங்களுக்கு காவி அடிப்பதுதான் மதச்சார்பின்மை என்ற மாற்றமா?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் ஆயுத பூஜை, அசோகர் காலத்து பவுத்த நெறி என்று பெண்கள் கருத்தரங்கில் பேசியிருக்கிறார். போரில் ரத்தம் சிந்த வேண்டாம் என்று முடிவு எடுத்த மன்னர் அசோகர் ஆயுதங்களைப் புறக்கணிக்க உருவாக்கியதுதான் ஆயுத பூஜை என்று விளக்கம் தருகிறார். இப்போது அதைக் கொண்டாடலாமா? வேண்டாமா? என்பது பற்றி எந்த விளக்கமும் தரவில்லை! ஆனால் புவுத்தம் தழுவிய அம்பேத்கர் எடுத்த உறுதிமொழிகளில் ஒன்று இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டாம் என்பதாகும். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன்முதலாக பவுத்த நெறியை ஏற்று ஆயுத பூஜை கொண்டாடிய ஒரே முதல்வர் விஜய் அவர்கள்தான் என்று பேசாத வரை நமக்கு மகிழ்ச்சியே!
இப்போது நமக்கு ஒரு அச்சம் வந்துவிட்டது. ஜோதிடர்களின் ஆலோசனையை ஏற்று `பெரியார் அறிவுலகத்தை’ இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவந்துவிடுவார்களோ என்பதுதான் நமக்கு எழுந்துள்ள அச்சம்!
பெரியார் முழக்கம் இதழ் 29102026
