தேவதாசி முறையை ஒழித்து பெரியார் போட்ட முதல் உத்தரவு
ஈரோடு தேவஸ்தானக் கமிட்டித் தலைவராக இருந்த போது தேவதாசி உரிமைகளை விற்பனைப் பொருளாக்கியதை பெரியார் தடை செய்தார். இதற்கு தேவதாசிகள் பெரியாரைக் கண்டித்தார்கள். இதுகுறித்து பெரியார் பேசிய உரையிலிருந்து…
பெண்களுக்குக் கடவுள் பேரில் பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடுவது என்று நேற்றுவரையில் இருந்து வந்ததே! கடவுள் காரியம் என்றும், சாஸ்திர முறைகள் என்றும் கூறிப் பொட்டுக்கட்டி விடப்பட்டவர்கள் எல்லாம் நம் அக்காள் தங்கைகள்தானே? நம் சூத்திர ஜாதித் தாய்மார்கள் தானே?
முதலாவது நான்தான் இந்த முறையை வெறுத்தேன். நான் 8 ஆண்டு தேவஸ்தான கமிட்டி செக்ரெட்டரியாகவும், 10 ஆண்டு தேவஸ்தான கமிட்டித் தலைவனாகவும் இருந்தேன். அப்போதுதான் இந்தக் கொடுமைகளை எல்லாம் படித்தேன். நான் எந்த ஊர்க் கோயிலுக்குப் போனாலும் 10, 20 தேவரடியார்கள் கோயில் மரியாதை மேளதாளத்துடன் வரவேற்கக் காத்துக் கிடப்பார்கள்! இவர்கள் எல்லாம் யார்? தேவடியாள் என்ற தனி ஒரு ஜாதியாக வந்தவர்களா? கொடுமுடியில் தேவடியாளுக்குக் கவுண்டர் என்ற பட்டம்! திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களில் பிள்ளை என்ற பட்டம்! சென்னையிலே முதலியார்! இப்படி நம்மவர்கள் தானே!
அந்தக் காலத்தில் தேவடியாள்கள் தங்களது கோயில் உரிமையை ரூ.15 முதல் ரூ.90 வரை வாங்கிக்கொண்டு விலைக்கு விற்றுவிடுவார்கள். அப்படி வாங்குகிறவளும் தேவடியாள் வாங்கமாட்டாள். மற்ற ஜாதிப் பெண்களும் அந்த உரிமையினை வாங்கிக் கொண்டு, அவர்களும் தேவடியாள் போல் காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஆட ஆரம்பித்தார்கள்.
நான்தான் முதல் முதல் இப்படி உரிமைகளை விற்றால் செல்லாது என்று உத்தரவு போட்டேன். அந்தக் காலத்தில் அப்பீல் எல்லாம் கலெக்டர் அளவோடு நின்றுவிடும். இப்போது போல அய்க்கோர்ட்டுக்கு எல்லாம் வராது. பிறகு தேவதாசிகளை நியமிக்கக்கூடாது என்றும், வாரிசு இல்லாவிட்டால், அந்தப்பதவி அத்தோடு முடிந்து விடும் என்றும் உத்தரவு போட்டேன்.
பிறகு சட்டசபையில் இதுபற்றிய தீர்மானங்கள் எல்லாம் வந்தது. பார்ப்பனர்களும், வைதிகர்களும் எதிர்த்ததோடு அல்லாமல் தேவடியாள்கள் என்பவர்கள் எல்லாம் கூட்டம் போட்டு என்னைக் கண்டித்தார்கள். எங்கள் பிழைப்புப் போய்விட்டால், நாங்கள் என்ன செய்வது என்றார்கள். எப்படியோ நம்ம உணர்ச்சி உடையவர்கள் ஏராளமாக இருந்ததால், இது சட்டமாகி விட்டது.
(26.08.1959- அன்று வாலி கண்டபுரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை. 31.08.1959- ’’விடுதலை”இதழில் வெளியானது)
பெரியார் முழக்கம் இதழ் 01102026
