தேர்தல் ஆணையரின் சட்டமீறல் மோசடிகள்!
தேர்தல் ஆணையர்கள் ஆளும் கட்சியின் கைப்பாவைகளாக இருந்துவிடக் கூடாது என்பதில் அரசியல் நிர்ணய சபையில் புரட்சியாளர் அம்பேத்கர் மிகவும் உறுதியாக இருந்தார். இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு அந்தச் சட்டத்தின் வழியே தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட வேண்டுமே தவிர, ஆட்சியாளர்களின் வழிகாட்டுதலில் செயல்படக் கூடாது என்பதற்காகவே ஒரு சட்டத் திருத்தத்தையும் அவர் முன்மொழிந்தார். அதுதான் 324(2) திருத்தம்!
ஆனால் அப்படி ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் 74 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவே இல்லை என்பது தான் வரலாற்று சோகம்! அம்பேத்கர் அஞ்சியது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் வாக்குரிமையைத் திருடிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஞானேஷ் குமார் இப்போது வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார். அவர் பதவி விலக வேண்டும்; கைது செய்யப்பட வேண்டும் என்ற குரல் நாடு முழுதும் ஓங்கி ஒலிக்கிறது. மோடியும் அமித் ஷாவும் வளர்த்து வரும் செல்லக் குழந்தைதான் ஞானேஷ் குமார்.
ஆணையத்தின் மற்ற இரண்டு உறுப்பினர்களான சுக்பிர்சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷியும் பாஜகவின் நம்பிக்கைக்கு உரியவர்கள் தான் என்றாலும், அவர்களாலேயே சட்டமீறலை சகிக்க முடியாமல் கடந்த 10 மாதங்களில் ஞானேஷ் குமாருக்கு எதிராக 14 கடிதங்களை எழுதி இருக்கிறார்கள். பாஜகவின் அகில இந்திய தேர்தல் பொறுப்பாளராகவே தேர்தல் ஆணையத் தலைவர் செயல்பட்டிருக்கிறார்.
வாக்காளர்களின் வாக்குரிமையை உறுதி செய்வதும் அதற்கான பட்டியலைத் தயாரிப்பதும் தான் தேர்தல் ஆணையத்தின் வேலை; ஆனால் குமார் தனது சட்ட வரம்புகளை மீறி குடியுரிமையை உறுதிப்படுத்தும் வேலைகளில் இறங்கி இருக்கிறார். இது பாஜகவின் இந்துத்துவ செயல்திட்டம்.
புதிய வாக்காளர் சேர்ப்புக்கான எண்-6 படிவத்தில் வாக்காளர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகள் அதற்கு முன் நடந்த தேர்தலில் வாக்களித்த விவரங்களைப் பதிய வேண்டும் என்ற புதிய பகுதியைத் திணித்து திக்கு முக்காட வைத்து விட்டார் . இப்படி எந்த ஒரு புதிய பகுதியும் சேர்ப்பதற்கு 1960-இல் உருவாக்கப்பட்ட தேர்தல் விதிகளே அனுமதிக்கவில்லை. இந்த சட்ட விரோதமான திணிப்பை உடனே நீக்க வேண்டும் என்று மற்றொரு தேர்தல் ஆணையர் டாக்டர் சந்து வலியுறுத்தி இருக்கிறார் குமார் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
வாக்காளர்கள் பட்டியலைத் தயாரித்து சரி பார்க்கும் சட்டபூர்வமான உரிமை மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே உண்டு. ஆனால் இந்த அதிகாரத்தை மாநில தேர்தல் அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே “இ.ஆர் ஓ.நெட்” என்ற மென்பொருளை உருவாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். மாநில உரிமை மய்யத்திற்குப் போய்விட்டது.
இந்த மென்பொருளை தேர்தல் ஆணையம் மோசடியாக அவ்வப்போது தனது வசதிக்கேற்ப மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் ‘ஆதார்’அடையாளத்தை பதிவேற்ற முடியாமல் திடீரென்று அறிவிப்பு ஏதுமின்றி முடக்கியது.
உயர் அதிகார மட்டங்களில் உள்ள பாஜக ஆதரவு அதிகாரிகளின் பட்டியலையும் இந்த இணையத்தில் இணைத்து அவர்களுக்கு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு நீண்ட வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்குவதற்கு தேர்தல் ஆணையத்தின் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக “ரிப்போர்ட்டர்ஸ் கலெக்ட்” என்ற இணைய இதழ் ஆய்வு செய்து அம்பலப்படுத்தியிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த போது இந்த மென்பொருளை சமர்ப்பிக்க மறுத்த ஆணையம் அது பழுதுபட்டு திறம்பட செயல்படாமல் போயிற்று என்று காரணம் கூறியது.
பல லட்சம் வாக்காளர்களின் உரிமையைப் பறிப்பதற்கு இந்த மென்பொருளை மோசடியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக மேற்கு வங்கத்தில் வாக்குரிமை பறிக்கப்பட்ட 38 லட்சம் வாக்காளர்கள் நீதிமன்றம் சென்று நீதிமன்றத்தின் வழியாக வாக்குரிமையை மீட்டார்கள். நீதிமன்றம் வழியாக வாக்காளர்கள் பெற்ற உரிமையை எதிர்த்து மேற்குவங்க அதிகாரிகள் மேல்முறையீடு செய்தார்கள்; இந்த உரிமைக்கு ஆணையத்தின் அனுமதியே பெறவில்லை என்று உறுப்பினர் சந்து விளக்கம் கேட்டார். வாக்களிக்கும் உரிமை நீதிமன்றம் அனுமதி அளித்தும் மறுக்கப்பட்டது.
கோவாவில் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட 97 வாக்காளர்களின் பெயர்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மென்பொருளில் இடம் பெற்ற வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இத்தனைக்கும் இந்த வாக்காளர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று தங்கள் வாக்குரிமையை மீட்டவர்கள். தலைமைத் தேர்தல் ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தச் செயலி மாநில தேர்தல் அதிகாரிகளின் கருத்துக்களை பதிவேற்ற முடியாமல் நிராகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது தான் மிகப்பெரும் கொடுமை! தேர்தல் அதிகாரிகளுக்கு சட்டம் வழங்கிய உரிமைகளும் திருடப்பட்டன.
இதை உணர்ந்த கோவா மாநிலத் தேர்தல் அதிகாரி இணையத்தைப் பயன்படுத்தாமல் 18 முறை கடிதம் வழியாக இந்த வாக்காளர்களின் பெயர்களை இணைக்கக் கேட்டும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை.இந்த மென்பொருளை வடிவமைத்த நிறுவனத்தின் பெயரையும் ஆணையம் ரகசியமாகவே வைத்திருக்கிறது.
தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் முறை குறித்து அம்பேத்கர் வலியுறுத்தியபடி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றாத நிலையில் 2015-ல் அணூப் பரன்வால் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் காலம் வரை தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்க பிரதமர்; எதிர்க்கட்சித் தலைவர்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்கலாம் என்ற யோசனையை முன் வைத்தது.
எட்டு ஆண்டு காலம் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களை இந்த மூவர் குழுவே இறுதி செய்தது.தலைமை நீதிபதியும் எதிர்க்கட்சி தலைவரும் உறுப்பினராக இருக்கும் குழுவில் தங்கள் ஆதரவாளர்களை தலைவராக்க முடியாது என்பதால், 2023-ஆம் ஆண்டில் ஒன்றிய பாஜக ஆட்சி நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டு வந்து குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கியது.
பிரதமரும் அவரால் நியமிக்கப்படும் ஒரு மத்திய அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் குழுவில் இடம் பெறுவார்கள் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் வழியாக மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியை ஒன்றிய ஆட்சி தன் வசம் வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களைத் தேர்தல் ஆணையர்களாக நியமித்தார்கள். அம்பேத்கர் கொண்டுவந்த சட்டத் திருத்தத்தின் நோக்கத்தையே சாகடித்தது ஒன்றிய ஆட்சி.
ஒன்றிய ஆட்சியில் உள்துறை இணைச் செயலாளராகப் பணியாற்றிய ஞானேஷ் குமார் ஏன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 370வது சிறப்புரிமை பறிப்புக்கான பொறுப்பு இவரிடம் தான் ஒப்படைக்கப்பட்டது; அதைச் சிறப்பாக செய்து முடித்தார்.
அயோத்தி ராமன் கோயில் கட்டுமானத்திலும் இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு; அறக்கட்டளை உருவாக்குவதில் இவர் தான் மூளையாக செயல்பட்டார்.
கேரள மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ஜி.ஜி தாம்சன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். ஞானேஷ் குமார் தன்னை பாஜக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வற்புறுத்தியதாகவும் அதைத்தான் மறுத்ததாகவும் கூறியுள்ளார் அந்த அளவுக்கு பாஜகவின் தீவிர விசுவாசி.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே இல்லாத மிகப் பெரிய மோசடி இப்போது அரங்கேறி இருக்கிறது. மக்கள் வாக்குரிமை திருடப்பட்டு இருக்கிறது. அரசியல் சட்டத்தின் 16வது பிரிவு தேர்தல் ஆணையர் மீது வழக்கு தொடர்வதிலிருந்து பாதுகாப்பு தருகிறது என்றாலும், முறைகேடு நிரூபிக்கப்படும்போது கைது செய்வதற்கு அந்தப் பிரிவு தடை போடவில்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வாக்குரிமை பறிக்கப்பட்டவர்கள் மீண்டும் உரிமை கோரலாம் என்று ஆணையம் சரிக்கட்டும் வேலையில் இறங்கி இருக்கிறது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி கெடு விதித்திருக்கிறது. தேர்தல் ஆணையத் தலைவர் மட்டுமல்ல அவரை முறைகேடாக செயல்பட வைத்த ஒன்றிய பாஜக ஆட்சியும் இதில் குற்றவாளி தான்! தேர்தல் ஆணையர் இவ்வளவுக்குப் பிறகும் பதவியில் தொடர்ந்தால் உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை உலகமே கைகொட்டிச் சிரிக்கும்!
விடுதலை இராசேந்திரன்.
பெரியார் முழக்கம் இதழ் 01102026
