சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்; கழகத் தலைவர் பங்கேற்பு!
பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சேலம், டவுன் ரயில்நிலையம் பகுதியில் அமைந்துள்ள ஆர். பி. மஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மா. லெ. மா மாவட்டச் செயலாளர் மு. மாரியப்பன் வரவேற்புரையாற்றினார். மக்கள் தேசம் கட்சியின் மாநில செயலாளர் சி. சுலைமான் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சந்தியூர் இரா. பார்த்திபன் மார்க்சியத்தின் பார்வையில் அரசியல் அதிகாரம் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலன் மதவாத அரசியலும், மார்க்கியமும் சர்வதேச பாதையும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்திய ஒன்றியமும், மாநில சுயாட்சியும் என்ற தலைப்பில் பேசுகையில் இந்திய ஒன்றியம் என்பது பல்வேறு மாநிலங்களின் கூட்டமைப்பு பற்றியும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையைக் காக்க அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதையும் ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்பதே இதன் அடிப்படைக் கோட்பாடு என்பதை இளைஞர்களுக்கு எடுத்துரைத்தும், மேலும் “பேரறிஞர் அண்ணா” சொன்னது போல் பிரிவினை கோரிக்கையை கைவிட்டு விட்டோம்; ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே தான் இருக்கும் அதை விரைவில் தீர்க்கப்படாவிட்டால் அது வேறுவிதமான காரணங்களுக்கு போய் சேரும் எனவே அது விரைவில் தீர்க்கப்படவில்லை என்றால் அதற்கான தீர்வு என்ன? என்பதை நாம் எல்லாம் சிந்திப்போம்! அதற்கான குரலை எழுப்புவோம் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; என்று கூறி கருத்துரையாற்றினார்.
இறுதியாக புஇமு மாவட்டப் பொறுப்பாளர் வின்சென்ட் நன்றியுரையாற்றினார். கராத்தே மாஸ்டர் ராஜதுரை செல்வம், ஓமலூரில் 21 கி.மீ சிலம்பம் சுழற்றிக்கொண்டே நடந்தும், ஓடியும் உலக சாதனை படைத்துள்ளார், அவர் கழகத் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மாநகரச் செயலாளர் ஆனந்தி, மாநகர அமைப்பாளர் தேவராஜ், அவினாசி ஆகிய கழகத் தோழர்கள், தமிழ்நாடு கிக் பாக்சிங் அசோசியேசன் துணை பொதுச்செயலாளர் தனசேகரன், மக்கள் தேச கட்சியினர், தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னனியினர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 04062026
