சேலத்தில் கருப்பு உடையுடன் நடை பேரணி
இளைஞர்கள் மற்றும் மகளிர் படை சூழ, எழுச்சியுடன் பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் நிகழ்வாக இயக்கத்தின் 15 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் பெரியார் உருவம் பொறித்த பேட்ச் அணிந்து நடைபேரணி தொடங்கியது. இந்த பேரணியில் கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு கொள்கை முழக்கங்களை எழுப்பினர்.
தந்தை பெரியார் சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்தனர். கழகத் தோழர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை தலைமையில் கழக வெளியீடுகளான ’தடை அதை உடை’ என்ற தலைப்பில் – 300 புத்தகங்கள், ’பேய் – பில்லி-சூனியம் -ஜாதகம்- தீ மிதித்தல்’ 200, கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய ’EWS இட ஒதுக்கீடு 68 ஆண்டுகள் கழித்து வஞ்சம் தீர்த்த உயர்ஜாதியினர்’ – 100 புத்தகங்கள், பெண் ஏன் அடிமையானாள் -20 புத்தகங்கள் என 4 தலைப்பில் மொத்தம் 620 புத்தகங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
சேலம் கிழக்கு மாவட்டம் முழுவதும் 1000 துண்டறிக்கைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. விழாவிற்கு வருகை புரிந்த அனைத்து தோழர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. பெரியாரின் பொன்மொழிகள் மற்றும் சமூக நீதி நாள் உறுதிமொழி துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. பல்வேறு இயக்கத் தோழர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கழக வெளியீடுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
அமைச்சர் தமிழன் பார்த்திபனுடன் சந்திப்பு
இந்நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த நேரம் அங்கு வந்த போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் அவர்கள் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் அவர்களை சந்தித்து அவருடனான 25 வருட நட்பு குறித்தும் இயக்கங்களின் போராட்டங்கள் குறித்தும் தோழர்களுடன் கலந்துரையாடினார். அவருக்கு கழக வெளியிடுகள் வழங்கப்பட்டது. கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் மற்றும் மாநகரத் தலைவர் பாலு மற்றும் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.
பிரபாத் பகுதியைச் சேர்ந்த கலைவாணன் என்ற தோழர் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் முன்னிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பெரியார் சிலையிலிருந்து வாகனப் பேரணியை மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் தொடங்கி வைத்தார். வாகனப் பேரணி சேலம் மாநகரம், கே.ஆர்.தோப்பூர், பவளத்தானூர், தாரமங்கலம் வழியாக இளம்பிள்ளையில் நிறைவடைந்தது. சேலம் மாநகரத்தில் மொத்தம் ஒன்பது இடங்களில் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
தேநீர் விருந்தை வீரமணி வழங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றி முருகன் ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில் சேலம் நெத்திமேடு துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
சேலம் மாநகரம்: அம்மாபேட்டை பகுதியில் உள்ள பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்தனர். பிரபாத், அருணாச்சலம் மெயின் ரோடு, அன்னதானப்பட்டி, உத்திரப்பன் நகர், மணியனூர், நெத்திமேடு, குரங்கு சாவடி , சேலம் ஜங்சன் ஆகிய பகுதிகளில் பெரியாரின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. தமிழீழ மக்களுக்காக தன்னுயிர் தந்த தியாகச் சுடர் விஜயராசு படத்திறப்பு மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
சிந்தாமணியூர் நகரம்: சிந்தாமணியூர் பகுதியில் பாரப்பட்டி முருகேசன் கழகக் கொடியை ஏற்றினார். பாரப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தனர்.
தாரமங்கலம் ஒன்றியம்: கே.ஆர்.தோப்பூர், பவளத்தானூர் ஆகிய பகுதிகளில் பெரியாரின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. தாரமங்கலம் ஒன்றியச் செயலாளர் சரவணன் தோழர்கள் அனைவருக்கும் தேநீர் மற்றும் பழச்சாறுகள் வழங்கினார். தாரமங்கலம் அண்ணா சிலை அருகில் அமைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. மதிய உணவாக மாட்டுக்கறி பிரியாணியை இளம்பிள்ளை நகர கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இளம்பிள்ளை நகரம்: கோனேரிப்பட்டி பகுதியில் சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் ,கறிக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் இளம்பிள்ளை மோகன்ராஜ் ஆகியோர் கழகக் கொடியினை ஏற்றினர். இளம்பிள்ளை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. முருங்கப்பட்டி, பெத்தாம்பட்டி, நல்லாக்கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்தனர். இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வெற்றி முருகன் நன்றி கூற விழா நிறைவடைந்தது. அனைத்து தோழர்களுக்கும் இளம்பிள்ளை நகரத் தலைவர் ரமேஷ் தேநீர் விருந்து அளித்தார்.
குடிநீரை தனியார் மயமாக்காதே
குடிநீரை தனியார் மயமாக்கும் சேலம் மாநகராட்சியைக் கண்டித்து கழகத் தலைவரின் ஒப்புதல் பெற்று இம்மாத இறுதிக்குள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து தோழர்களும் ஒருங்கிணைந்து முடிவெடுத்தனர்.சேலம் கிழக்கு மாவட்ட நகர, ஒன்றிய, கிளைக் கழகங்கள் முழுவதும் பெரியார் பிறந்தநாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் கிழக்கு மாவட்ட தோழர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 24092026
