‘கயிறு’ நாடகம் காலத்தின் தேவை!
பதிப்புத் துறையில் புரட்சி செய்து வரும் சீர் வாசகர் வட்டம் கலைத்துறையிலும் கால் பதித்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை தியாகராயர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட “கயிறு” நாடகம் மிகச்சிறப்பாக இருந்தது. பள்ளி மாணவர்களிடையே ஜாதி அடையாளத்தைத் திணிக்க ஜாதிச் சங்கங்கள் கட்டி வரும் ஜாதிக் கயிறுகளை மய்யமாகக் கொண்டு எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ‘கயிறு’ சிறுகதையை ஒரு ரூபாய் விலை நிர்ணயித்து லட்சக்கணக்கில் மக்களிடையே கொண்டு சேர்த்த சீர் பதிப்பகம், அதே கதையை இப்போது நாடகமாக அரங்கேற்றி இருக்கிறது.
பள்ளிகளில் தலித் மாணவர்கள் மீது ஜாதி வெறி ஆசிரியர்களின் பாகுபாடு; பள்ளிகளை சுத்தம் செய்யும் வேலைகளை, தலித் மாணவர்களுக்கு ஒதுக்கும் அவலம்; துரோணாச்சாரிகள் ஏகலைவன் கட்டை விரலை தட்சணைக்காக வெட்டி எடுப்பது; குடும்பங்களில் மறுக்கப்படும் பெண் உரிமை; தூய்மைத் தொழிலாளி பெண்ணின் மனிதநேயம் என்று ஒவ்வொரு காட்சியையும் நவீன நாடகத்துக்கு உரிய வடிவங்களோடு மிகச் சிறப்பாக நெறிப்படுத்தியிருக்கிறார் தோழர் அமலா இசடோரா. ஒவ்வொரு காட்சியிலும் அவரது ஆற்றல் வெளிப்படுகிறது.
நாடகத்தின் மய்யமான மிக முக்கிய காட்சி ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும்; ஜாதிக் கயிறுக்கான கருத்தியலை வழங்குவது “பிராமணியத்தை” உறுதிப்படுத்தும் பூணூல் கயிறுதான் என்று ஒரு பார்ப்பன கதாபாத்திரத்தின் வழியாக நாடகம் உணர்த்துகிறது. நாடகக் கதையின் மய்யம் இதுதான். ஜாதிக் கயிறுகளை எதிர்ப்பது என்பது ஏதோ ஒரு ஜாதிக்கான எதிர்ப்பு என்ற எல்லையோடு நின்று விடாமல் அது பார்ப்பனியத்தின் ஜாதி அமைப்புக்கான எதிர்ப்பு என்ற கருத்தை மிகச் சரியாக துல்லியமாக வெளிப்படுத்திய காட்சி இது! உண்மையை மிகத் துணிவோடு உரத்துக் கூறிய நாடகக் குழுவினரை பாராட்ட வேண்டும். கலை வடிவத்துக்கே உரிய உணர்வுகளோடு ஜாதி எதிர்ப்பை பார்வையாளர்களிடம் கடத்துவதில் மிகப்பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நாடகம் பார்வையாளர்களை இருக்கையில் கயிறுகளால் கட்டிப்போட்டு விட்டது.
தமிழ்நாடு முழுதும் இந்த நாடகம் மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டிய தேவை இருக்கிறது. பதிப்புத் துறையை மக்கள் இயக்கமாக மாற்றிவரும் சீர் குழுவினருக்கு என்றும் துணை நிற்போம்.
பெரியார் முழக்கம் இதழ் 24092026
