பரப்புரை தொடங்கியது
“நம்புங்கள்… அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை”என்ற முழக்கத்தை முன் வைத்து அச்சம் பேக்கும் அறிவியல் பரப்புரைப் பயணம், ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. அன்று மாலை இலாயிட்ஸ் சாலையில் நடந்ததொடக்க விழா, சம்பூகன் குழுவினரின் எழுச்சி இசையோடு தொடங்கியது. கழகத் தோழர் பிரகாஷ் தலைமையில் வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண், கவிஞர் செ.வை.ர. சிகாமணி, பகலவன் (வி.சி.), செல்லப்பா (வி.சி. மாவட்ட செயலாளர்) ஆகியோர் பயணத்தை வாழ்த்தி உரையாற்றினர். முனைவர் சுந்தர வள்ளி 45 நிமிடம் மூடநம்பிக்கைகளை தோலுரித்து எழுச்சி உரையாற்றினார்.
தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி தமிழ்ச் செல்வி -மூடநம்பிக்கைகள் குறித்து உரையாற்றினார். அவருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ரூ.8000-த்துக்கானகாசோலையையும் கழக வெளியீடுகளையும் பரிசாக வழங்கினார். இரண்டாம் பரிசு பெற்ற மாணவர் ஸ்டாலினுக்கு ரூ.4000-த்துக்கான காசோலையை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும், மூன்றாம் பரிசு பெற்ற மாணவி சிபியாவுக்கு ரூ.2000-த்துக்கான காசோலையை வழக்கறிஞர் திருமூர்த்தியும், 4ஆம் பரிசு பெற்ற மாணவி அய்ஸ்வர்யா வுக்கு ரூ.1000த்துக்கான காசோலையை வழக்கறிஞர் துரை.அருண் ஆகியோரும் வழங்கினர்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பயணத்தின் நோக்கங்கள் குறித்தும், ‘ஈஷா’ மய்யத்தில் நடக்கும் மோசடிகளை விளக்கியும் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் உமாபதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு பரப்புரைப்பயணக் குழுவினர் இராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து புறப்பட்டனர். தோழர் ஆனந்த் – வீதி நாடகக் குழுவினரும் பயணத்தில் முழுமையாகபங்கேற்று வீதி நாடகங்களை நடத்தி வருகின்றனர்.
முதல் பரப்புரை – தாம்பரத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு நிறைவடைந்தது. பெரியார் அங்காடி அருகே நடந்த பரப்புரையில் வீதி நாடகக் குழுவினர், பேய், பில்லி சூன்யம், ஜோதிடம், சாமியார்கள் மோசடி உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை மிகச் சிறப்பாக வீதி நாடகமாக நடத்தினர். மக்கள் கூட்டம் கூடி நின்று கருத்துகளைக் கேட்டது. தோழர் அய்யனார் உரையாற்றினார். இரண்டாவது பரப்புரைப் பயணம் படப்பையில் நடந்தது. வீதி நாடகத்தைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். மதிய உணவுக்குப் பிறகு வாலாஜாபாத்தில் பரப்புரை நடந்தது. வீதி நாடகத்தைத் தொடர்ந்து வழக்கறிஞர் திருமூர்த்தி உரையாற்றினார்.
இறுதி நிகழ்வாக காஞ்சிபுரம் பெரியார் சிலை அருகே பரப்புரை நடந்தது. வீதி நாடகத்தைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார்.
பயணத்துக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. துண்டறிக்கைகளை ஒவ்வொருவரும் கேட்டு வாங்கிப் படிக்கின்றனர். கழக வெளியீடுகளையும் வாங்குகிறார்கள். படப்பையில் கழகப் பொறுப்பாளர் இரவி பாரதி பயணக்குழுவினரை வரவேற்றதோடு, காஞ்சி மாவட்டத்தில் பயண ஏற்பாடுகளுக்கு பொறுப்பேற்றிருந்தார்.
மூன்றாம் நாள் பயணம் – வேலூர் மாவட்டம் நெமிலியிலிருந்து தொடங்கியது. மயிலாடுதுறை, சத்தியமங்கலம், திருப்பூரிலிருந்தும் பரப்புரைக் குழு ஆகஸ்ட் 7ஆம் தேதி பரப்புரை இயக்கத்தைத் தொடங்கியது.
பெரியார் முழக்கம் 11082016 இதழ்