அவசர நிலையில் அஞ்சி நடுங்கிய ஆர்.எஸ்.எஸ்
மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என்ற கற்பனையை திட்டமிட்டு பரப்பி வருவது ஆர்.எஸ்.எஸ். அஇஅதிமுக மா.பா.பாண்டியராஜன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இதே கதையை அவிழ்த்து விட்டார். அப்போது ஆதாரப்பூர்வமாக மறுக்கப்பட்டது. பிறகு பாஜக அண்ணாமலை இதே பொய்யைப் பரப்பினார்; எடுபடவில்லை. இப்போது தவெகவில் இருந்து ஆர்.எஸ்.எஸ்-காரர் நிர்மல்குமார் இந்தப் பொய்யைச் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் ‘வீராதி வீரர்கள்’ அவசர நிலை காலத்தில் எப்படி சரணடைந்தார்கள்?
1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி அவசர நிலைப் பிரகடனம் வெளிவந்தது. ஏற்கெனவே பல வெளிநாடுகளில் “பாரதிய சுயம் சேவக் சங்” என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை அங்கு குடிபுகுந்த பார்ப்பனர்களைக் கொண்டு இவர்கள் துவக்கியிருந்தார்கள். அவசரநிலைப் பிரகடனம் வர இருக்கிறது என்பதை பார்ப்பன உயர் அதிகாரிகள் மூலம் ரகசியமாக முன் கூட்டியே தெரிந்துகொண்டு பலர் வெளிநாடுகளுக்கு ஓடினார்கள். ஏராளமான ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், அதிலிருந்து விலகிக் கொள்வதாக ராஜினாமா கடிதங்களையே அனுப்பி வைத்தார்கள்.
சஞ்சய் காந்தியின் இளைஞர் காங்கிரசிலே ஏராளமாக ஊடுருவினர். இதைப் பிரதமர் இந்திரா காந்தி பலமுறை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறார். இந்திராகாந்தியின் நெருக்கமான சகாக்கள் பார்ப்பனர்கள் தான்! ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் பெரும்பாலும் பார்ப்பனர்கள் தான்! எனவே அவசர நிலை காலத்திலே எதிர் எதிர் முகாமிலே இருந்தாலும் பார்ப்பனர்கள் இனப்பாலம் வழியாக அவர்கள் இணைந்து நின்றனர். மத்தியப் பிரதேச ஆர்.எஸ்.எஸ் தலைவர் சக்லேச்சா, அவசர நிலையில் 19 மாதகாலம் பரோல் விடுதலையில் வெளியே இருந்தார் என்றால் அதற்குக் காரணம் என்ன? இந்த ரகசிய பூணூல் பாசம்தான்! புனேயிலிருந்து வெளிவந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நாளேடான “தாருண்பாரத்” – இந்திராவின் மகனும், இளைஞர் காங்கிரஸ் தலைவருமான சஞ்சய் காந்தியை தலைமீது தூக்கி வைத்து புகழ்ந்து கொண்டிருந்தது.
மராட்டிய மாநிலம் ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர். எஸ்.எஸ் கைதிகளிடம் கீழ்க்கண்ட அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதிலே கையெழுத்துப் போடுவதற்கு அந்த ” வீராதி வீரர்கள்” போட்டி போட்டுக்கொண்டு முன்வந்தனர். இதோ அந்தப் படிவத்தின் நகல்:
Sri… Detenu class… Prison agress on affidavit that in case of my release, I shall not do anything which is detrimental to internal security and public peace. Similarly, I shall not do anything which would hamper the distribution of essential goods. So also I shall not indulge in any activities which is prejudicial to the present emergency.
தடுப்புக்காவல் கைதியாக நான் தரும் பிரமாண பத்திரம் இது. நான் விடுதலை செய்யப்பட்டால், உள்நாட்டு பாதுகாப்பையோ பொது அமைதியையோ குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன். அதேபோல் அத்தியாவசியப் பொருள் விநியோகத்தைத் தடுக்கும் எந்த முயற்சியிலும் ஈடுபட மாட்டேன். அதோடு, எந்த சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டேன். தற்போதுள்ள அவசர நிலை பிரகடனத்துக்கு எதிராக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன் இதுதான் அந்த மன்னிப்பு சாசனம். மராட்டிய அரசு இப்படி எழுத்துப் பூர்வமான மன்னிப்பைக் கோரியபோது R.S.S.காரர்கள் அவரவர் சொந்த முடிவோடு இதில் கையெழுத்துப்போட போட்டி போட்டு முன்வந்தனர். அதே சிறையில் இருந்த சோஷலிஸ்டுகளான பக்திகார், பாபுராவ் சாமந்த், தசரத்பட்டில் போன்றவர்கள் இதை எதிர்த்தனர். ஜனசங்கத் தலைவர் – மால்கி (Mhalg) யை சிறையில் சந்தித்து உங்கள் கட்சிக்காரர்களை, மன்னிப்புக் கேட்காமல் இருக்கச் செய்யுங்கள் என்று சோஷாலிஸ்ட் கட்சியினர் வற்புறுத்தினார்கள். அதற்கு அந்த ஜனசங்கத் தலைவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
“இது ஆர்.எஸ்.எஸ். பெருந்தலைவர்கள் எடுத்திருக்கும் முடிவு. எங்கள் ஜனசங்கம் இதில் ஒன்றும் செய்ய முடியாது” என்பதுதான்! இதிலே மிகவும் பரிதாபம் என்னவென்றால் – மன்னிப்புக் கடிதம் எழுதிய எல்லா ஆர்.எஸ். எஸ்.காரர்களும் விடுதலை செய்யப்படவில்லை ஒரு சிலர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அதே சிறையில் இருந்த சோஷலிஸ்ட் தலைவர்கள் – இந்த மன்னிப்புக் கடிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தது மட்டுமல்ல; இப்படி ஒரு அரசு கேட்பதே தங்களை அவமானப்படுத்தியதாகும் என்று மராட்டிய முதல்வருக்கு கண்டனம் தெரிவித்து கடிதமே எழுதினார்கள். ஆனால் வெளியே இருந்த ஆர்.எஸ்.எஸ். ஜனசங்க போராட்டக் கமிட்டி எடுத்த முடிவு – மன்னிப்புக் கடிதத்தில் கையெழுத்தே போடக் கூடாது என்பதுதான். எஸ்.எம். ஜோஷி மூலம், சிறையில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். காரர்களிடம் இந்தத் தகவல் சொல்லி அனுப்பப்பட்டாலும் அந்த `வீராதி வீரர்கள்’ அதற்கு செவிசாய்க்க தயாராக இல்லை எதைச் செய்தாவது வெளியே போய்விட வேண்டும் என்று துடித்தார்கள். இதை நாம் – இவ்வளவு விரிவாக எடுத்துக்காட்டி இருப்பதற்குக் காரணம் அவசர நிலையை எதிர்ப்பதிலே முன்னணியில் நின்ற மாவீர்ரகள் நாங்கள் தான் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் மார்தட்டுவதனால் தான்!
இவ்வளவுக்கும் பிறகு – ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், தேவரஸ் அவசர நிலையை ஒழித்துக்கட்டிய மாவீரர் போல நாடு முழுதும் பவனி வந்தார். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் “வீரத்திலகமிட்டு” “ஆரத்தி” எடுத்து வரவேற்புகளைக் கொடுத்தார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் அவசரநிலை காலத்தில் எப்படிப்பட்ட “வீரராக விளங்கினார் தெரியுமா? தேவரஸ் அடைக்கப்பட்டிருந்த – அதே சிறையில் பாபா ஆதவ் என்ற மராட்டிய சோஷலிஸ்ட் தலைவரும் அடைக்கப்பட்டிருந்தார். சிறைக்குள்ளே இந்த வீராதி வீரர்கள் – என்ன பாடுபட்டார்கள் என்பதை பாபா ஆதவ் படம் பிடித்துக்காட்டுகிறார்:
“உள்ளே வந்த பல ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், தாங்கள் அவசர நிலையை எதிர்க்கவே இல்லை என்றும், ஜெ.பி. இயக்கத்தில் பங்கு பெறவே இல்லை என்றும் கூறிக்கொண்டிருந்தனர். உண்மையைச் சொல்லப் போனால், பல ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அவசரநிலைப் பிரகடனம் செய்ததை ஆதரித்தனர்! ஜெ.பி. ராணுவத்தையே பிளவுபடுத்த முயலலாமா என்று ஜெ.பி. மீது குற்றம் சாட்டினர்.” என்று எழுதுகிறார்! தேவரஸ் கதையையும் அவர் வெட்ட வெளிச்சமாக்கினார்!.
ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் அவசரநிலைக்கு அடிபணியவில்லை என்று தேவரஸ் இப்போது கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. நானும் ஏர்வாடா சிறையில் தான் இருந்தேன். உள்ளே என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும்; தேவரஸ் இந்திரா காந்தியோடும், வினோபாவுடனும், மராட்டிய முதலமைச்சர் எஸ்.பி.சவானுடனும், சஞ்சய் காந்திக்கு நெருக்கமானவர்களுடனும் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். 1976ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திரா பம்பாய் வந்தார். அப்போது இந்திராவை சந்திப்பதற்காக தேவரஸ் சிறையிலிருந்த தன்னை பம்பாய் மருத்துவமனையில் அனுமதித்துக் கொண்டார். வெளியில் இருந்த ஜனசங்க எம்.எல்.ஏ. ஒருவர் இந்த ஏற்பாடுகளை -தேவரஸ் உத்தரவுப்படி செய்தார். எஸ்.பி.சவான் மூலம் இந்திராவை சந்தித்துவிட ஏற்பாடுகள் செய்தும், முயற்சி பலிக்கவில்லை. என்று பாபா ஆதவ் எழுதுகிறார். (ஆதாரம்: டி.ஆர் கோயல் எழுதிய “R.S.S.” நூல்) இவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் செயல்பட்டு பிறகு விலகியவர். அவசரநிலை காலத்தில் இவர்கள் ’அந்தர்பல்டி’ அடித்த விவகாரங்களை அடுக்கடுக்காக நம்மால் – ஆதாரங்களோடு சுட்டிக்காட்ட முடியும்.
இந்திராவை நாங்கள் தான் தீரத்தோடு எதிர்த்தோம் என்று அவர்கள் மீசை முறுக்கியபோது, ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான மதுலிமாயி -பேனாவைத் தூக்கினார். இந்த பொய்யர்களின் முகமூடிகளை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். மதுலிமாயி அவர்கள் எழுதிய அக்கட்டுரை – இந்த வீரர்களின் சுயரூபத்தை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டது! அதிலிருந்து ஒரு சில பகுதிகளை – இங்கே நாம் எடுத்துக்காட்டினால் வீரத்தின் உறைவிடங்கள் சோரம் போன சோகங்களின் கதை தெரியவரும்; இதோ மதுலிமாயி கட்டுரை
“அவசரநிலை எதிர்ப்புப் போர்க்களத்தில் – முன்னணியில் நின்றதாக ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் கூறுவதில் உண்மையே இல்லை! ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டவுடன் நடுங்கிப் போனார்கள். மன்னிப்புக் கடிதங்களை சிறையில் கைதான ஏராளமான ஆர்.எஸ்.எஸ்காரர்கள், சிறை அதிகாரிகளிடம் அளித்தனர் கைது செய்யப்படாதவர்கள், அதிலிருந்து தப்பிக்க தங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் ஜனசங்கத்துக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்று அறிவித்தனர். அழுத்தமான கொள்கைப் பற்றுள்ள தொண்டர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் நிலை இப்படித்தான் இருந்தது. இந்திராவின் தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன் – வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு, அப்பீல் செய்து சட்டத்தையே திருத்தி சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் இந்திரா வெற்றி பெற்றபோது இந்திராவுக்கு பாராட்டு செய்தி அனுப்பியவர்தான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ். தங்களின் சார்பாக தொடர்ந்து இந்திராவை சமாதானப்படுத்த தூதர்களை அனுப்பிக்கொண்டே இருந்தனர்.
பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக சஞ்சய் காந்தி கருத்துகளைத் தெரிவித்தபோது அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சஞ்சய் காந்தியை புகழ ஆரம்பித்துவிட்டனர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுப் பத்திரிகைகள் அரசாங்கத்திடம் சரணாகதியாகி, இந்திரா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதித் தள்ளின. எங்களுக்கும் ஜெ.பி.யின் முழுப்புரட்சி இயக்கத்துக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்று திரும்பத் திரும்ப அறிவித்துக்கொண்டே இருந்தனர். இன்னும் ஒரு படி மேலே போய் ஜெ.பி.யைக் கண்டிக்கவே ஆரம்பித்தனர்.
போலீசார், ராணுவத்தினர் தவறான அரசு உத்தரவுகளை செயல் படுத்தக்கூடாது என்று ஜெ.பி. கூறிய கருத்துகளைக் கண்டித்து அதைத் தாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பிரமாண வாக்கு மூலத்திலேயே குறிப்பிட்டிருந்தனர். இவ்வாறு இந்த மாவீரர்களின் வீரத்தை மதுலிமாயி பட்டியல் போட்டுக்கொண்டே போகிறார். (மதுலிமாயி எழுதிய இந்தக் கட்டுரை “Secular Democracy 1979 மார்ச் இதழில் வெளி வந்திருக்கிறது).ஏர்வாடா சிறையிலிருந்து – ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேவரஸ் பிரதமர் இந்திராவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். 10.11.1975 இல் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தின் வாசகமே இப்படித்தான் துவங்குகிறது.
“Let me congratulate you as five judges of the Supreme Court have declared the validity of your election”.
`சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் உங்கள் தேர்தலை செல்லும் என்று அறிவித்ததற்காக என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கடிதத்தைத் துவக்கி தாங்கள் ஒரு குற்றமும் இல்லாத நிரபராதிகள், அப்பாவிகள் என்பதை கடிதம் முழுதும் விளக்கிவிட்டு – இறுதியில் எங்களை விடுதலை செய்தால் உங்கள் பணிகளுக்கு முழு சேவை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்ற அடிமை சாசனத்தையும் எழுதித் தருகிறார்.
“Set free thousands of R.S.S.workers and remove the restrictions on “Sangh” If done so, power of self-less work on the part of lakhs of R.S.S.volunteers will be utilised for national upliftment (Government as well as non-Govemment) and, we all wish, our country will be prosperous.”
ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்கி ஆர்.எஸ்.எஸ்.காரர்களை விடுதலை செய்யுங்கள். லட்சோப லட்சம் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் தன்னலமற்ற சேவையை நாட்டின் முன்னேற்றத்துக்கு (அரசாங்கத்தில் பணிகளுக்கானாலும் அரசு சார்பில்லாத பணிகளுக்கானாலும்) பயன் படுத்திக் கொள்ளமுடியும்.”
தேவரஸ் அதோடு நிற்கவில்லை; ஆச்சார்ய வினோபாவுக்கு இரண்டு கடிதங்களை எழுதுகிறார். முதல் கடிதம் 12.1.76 இல் எழுதுப்படுகிறது. அதற்கு பதில் இல்லை; எனவே இரண்டாவது கடிதத்தை “பம்பாய் – ஜார்ஜ் மருத்துவமனை கைதிகள் வார்டு எண். 14” என்ற முகவரியிலிருந்து எழுதுகிறார். “பிரதமர் இந்திரா 24 ஆம் தேதி உங்களை ஆசிரமத்தில் சந்திக்க இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அப்போது பிரதமரிடம் எப்படியாவது எடுத்துச்சொல்லி, எங்களை விடுவிக்க வழி செய்யுங்கள். பிரதமரின் தலைமையிலேயே நாங்கள் பாடுபடத் தயாராக இருக்கிறோம் (The volunteers will participate in the planned programme of action under the leadership of Prime Minister) என்று எழுதுகிறார். இதுதான் ஆர்.எஸ்.எஸ் அவசரநிலையை எதிர்த்த ‘வீரம்’.
(ஆதாரம்: விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம்’ நூலிருந்து)
பெரியார் முழக்கம் இதழ் 17092026
