ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் குளறுபடி
ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் முதன்மையான நோக்கம் சமூகநீதிக் கொள்கைகளை வளர்த்தெடுப்பதுதான். உண்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப இடஒதுக்கீட்டு எண்ணிக்கையை உயர்த்த முடியும்; நலத்திட்டங்களை உருவாக்க முடியும்; இதன் வழியாக சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை அகற்ற முடியும். இந்த நோக்கம் இப்போது திசை மாற்றப்படுகிறது.
பாஜக ஆட்சி நீண்ட காலமாக ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்து வந்தது. இந்துக்களை மத அடிப்படையில் அணிதிரட்டும் தனது ‘இந்துத்துவ’ அரசியலுக்கு உட்ஜாதிப் பிளவுகள் தடையாக வந்து நிற்கும் என்ற அச்சமே அதற்குக் காரணம். அதே நோக்கத்தில் ‘இந்துத்துவ’ அரசியலில் ஜாதிகளுக்கு இடமில்லை; அது ஒழிக்கப்பட வேண்டும் என்ற நிலையை எடுக்க அவர்கள் தயாராக இல்லை. ஜாதிப் பிரிவுகளும் வேண்டும்; அதே நேரத்தில் இந்து ஒற்றுமையும் வேண்டும் என்பதே பாஜகவின் இரட்டை நிலைப்பாடாக இருந்தது. இந்துத்துவ அரசியலை வடிவமைத்தவர்களின் நோக்கம் பார்ப்பன மேலாண்மைக்கு அடங்கிய பார்ப்பனரல்லாத இந்துக்கள் அடங்கி வாழும் வேதகால ஆட்சியைத் தொடரச் செய்வதுதான்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தனது நிலையை திடீரென்று மாற்றிக்கொண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியையும் சேர்த்துக் கொள்வதாக அறிவித்தது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று போராடியவர்கள் தங்கள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகவே இதை வரவேற்றனர். ஆனால் ஆட்சியாளர்களின் நோக்கம் வேறு.
இப்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்புப் படிவங்களில் ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்ற சொற்றொடர் நீக்கப்பட்டுவிட்டது. விருப்பமுள்ளவர்கள் தாங்களாக முன்வந்து தங்கள் ஜாதிப் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களா? என்பதைக் கண்டறிய முடியாது. அது மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் ‘வகுப்பினர்’ (Class) தான். ஜாதியினர் (Caste) அல்ல என்று ஒன்றிய ஆட்சி கூறிவிட்டது. அதாவது ஜாதி அடிப்படையிலான மதிப்பீடு பொருளாதார அடிப்படைக்கு மாற்றப்பட்டுவிட்டது. (ஒரு காலத்தில் பொதுவுடைமைக் கட்சியினர் முன்வைத்த இந்தக் கோரிக்கையை இப்போது பாஜக தனது கருத்தாக ஏற்றுக் கொண்டு விட்டது. மண்டல் கமிஷன் அமலாக்கத்திற்குப் பிறகு பொதுவுடமைக் கட்சிகளின் பார்வையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது). ஜாதி என்பதும் குடிமக்களின் ஒரு வகுப்பே ஆகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஒரு வகுப்பு ஒட்டுமொத்தமாகச் சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய நிலையில் இருந்தால், அரசியலமைப்பின் 15(4)-ஆவது பிரிவின் பொருளில் அது சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய குடிமக்கள் வகுப்பாகக் கருதப்பட்டு, அந்த ஜாதிக்கு இடஒதுக்கீடு வழங்கப்படலாம்”(ராஜேந்திரன் எதிர் இந்திய ஒன்றியம் (1968) வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக விளக்கியுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிப் பட்டியல் இருக்கிறது. அந்தப் பட்டியலைக் கேட்டுப் பெற்று மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து ஜாதிவாரியான கணக்கெடுப்பை நடத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். ஆனால் ஒன்றிய பாஜக ஆட்சி அதற்குத் தயராக இல்லை.
மண்டல் குழு பரிந்துரையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை சமூக நீதிக்குப் பயன்படுத்தியது. பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 52 விழுக்காடாக இருந்தாலும், அதே அளவு இடஒதுக்கீடு வழங்க மண்டல் ஆணையம் முன்வரவில்லை. காரணம் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு எண்ணிக்கையோடு இணைத்தால் மொத்த ஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் அதிகரிக்கும். அது உச்ச நீதிமன்றம் வகுத்த வரம்பின் எல்லையைத் தாண்டி இடஒதுக்கீடு முடக்கப்படலாம் என்ற கவலையால் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையை 27 விழுக்காடாக வரையறுத்தது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அரசு; இப்போது தரவுகளின் அரசாக (Data State) உருமாற்றம் பெற்றுள்ளது. ஆதார், டிஜிட்டல் சேவை தேர்வுத் தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகள், இப்போது வந்துவிட்டன. இந்த நிலை வரும் என்று அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
இந்தப் பின்னணியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சமூகத்தை மட்டும் படம் பிடிப்பதில்லை. பல்வேறு தரவுகளுடன் இந்தத் தகவல்களை இணைத்து மக்களைத் துல்லியமாக வகைப்படுத்தி தங்களுக்கான தனித்தனி வாக்குத் தொகுதிகளாக மாற்றி அமைப்பதற்கு இந்தத் தரவுகள் ஆளுங்கட்சிக்குத் தேவைப்படுகின்றன. உ.பி மாநிலத்தில் ஒன்றுபட்ட பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் எழுச்சி தங்களுக்குத் தந்த தோல்வியை உணர்ந்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தைக் கூறுபோடத் திட்டமிடுகிறார்கள்.
பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களை அடிமைப்படுத்தியிருக்கும் ஜாதி அமைப்பு அடையாளத்திலிருந்து விலக்கி வைத்து தரவுகளின் அடிப்படையில் புதிய கூறுகளாக பிளவுப்படுத்துவதே இதன் நோக்கம் என்று சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஜாதி அடையாளத்தையும் காப்பாற்றிக் கொண்டு அதே நேரத்தில் சமூகநீதிக்கான தளத்தில் ஒன்று சேர விடாமல் பிரித்தாளும் சூழ்ச்சி இதில் அடங்கியிருக்கிறது.
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்ற இயக்கத்தை பாஜக ஆதரவு மாணவர்கள் இப்போதே தொடங்கி விட்டார்கள். அதே நேரத்தில் மனுசாஸ்திர பெருமைகளையும், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பல பாஜக தலைவர்களும் பேசுகிறார்கள். சமூகநீதிக்கு போராபத்து சூழ்ந்து நிற்கிறது. இந்த நிலையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை முறையாக நடத்து என்ற குரல் ஓங்கி ஒலிக்க வேண்டிய தேவையும் அவசியமும் எழுந்திருக்கிறது.
பெரியார் முழக்கம் இதழ் 10092026
