உழைப்புக்குக் கிடைத்த வெற்றி

மாநாட்டுப் பொறுப்பாளர்கள் காரைக்குடி இளங்கோ, பெரியார்முத்து விடுத்துள்ள அறிக்கை.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் “வாழ்வியல் மாற்றத்திற்கான பரப்புரைப் பயணத்தின்” நிறைவு மாநாடு, 12.08.2026 அன்று காரைக்குடியில் எழுச்சியுடனும், சிறப்புடனும், வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையிலும் நடைபெற்று முடிந்துள்ளது.

தோழர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள தென் மாவட்டத்தில் இத்தகைய சிறப்பான மாநாட்டை நடத்த முடியும் என்பதை காரைக்குடி மாநாடு நிரூபித்துள்ளது. இது ஒரு மாநாட்டின் வெற்றி மட்டுமல்ல; சிவகங்கை மாவட்டத்தில் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் புதிய தொடக்கம்.

காரைக்குடியில் மாநாடு நடத்தப்படும் என்று தலைமைக்குழு அறிவித்தபோது, “இவ்வளவு பெரிய மாநாட்டை நம்மால் நடத்த முடியுமா?” என்ற தயக்கம் எங்களுக்குள் இருந்தது. ஆனால் தலைவர், தலைமைக்குழு மற்றும் முன்னணித் தோழர்களின் வழிகாட்டுதலும், மாவட்டத் தோழர்களின் அர்ப்பணிப்பும், தமிழகம் முழுவதிலுமிருந்து கிடைத்த ஒத்துழைப்பும், நன்கொடையாளர்களின் ஆதரவும் அந்தத் தயக்கத்தை நம்பிக்கையாக மாற்றின. நம்பிக்கை செயலாக மாறியது; செயல்பாடு வரலாற்று வெற்றியாக மாறியது.

மாநாட்டிற்கான நன்கொடை திரட்டும் பணிக்காக காரைக்குடியிலேயே தங்கி, இரவு பகல் பாராமல் உழைத்த அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், பெரியார் நம்பி, குமரேசன் ஆகியோருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி.

மாநாட்டு மேடை மற்றும் அரங்கின் வடிவமைப்பை நேர்த்தியாகவும், அழகியலுடன் உருவாக்கித் தந்த சென்னைத் தோழர்கள் அருண், குமார், எழிலரசன், பிரபாகரன், இளவரசன் மற்றும் அன்னூர் விஷ்ணு, படங்கள் எடுத்த கபிலன் ஸ்டுடியோ விஜி உள்ளிட்டோருக்கு நன்றி.

காரைக்குடியில் தொடர்ந்து களப்பணியாற்றிய தோழர்கள் பெரியார் முத்து, இளங்கோவன், ரமேஷ் உள்ளிட்ட தோழர்களுக்கும், மாநாட்டுப் பணிகளில் முன்னின்று செயலாற்றிய சரவணன், பாலச்சந்திரன், ஆறுமுகம், மணிமாறன், முத்துக்குமார், தாமரை, பொள்ளாச்சி தோழர்கள் உள்ளிட்ட எண்ணற்ற தோழர்களுக்கும் எங்களது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பல இரவுகளைக் கடந்து, தூக்கத்தையும் ஓய்வையும் பொருட்படுத்தாமல், தனிப்பட்ட பணிகளையும் ஒதுக்கி, இயக்கப் பணிக்காகத் தோழர்கள் உழைத்தனர். அந்த உழைப்பு சுமையாக அல்ல; சமூக மாற்றத்திற்கான மகிழ்ச்சியான பணியாகவே இருந்தது. காவல்துறை அனுமதி கடைசி நேரம் வரை சிக்கலாக இருந்த நிலையிலும், பேரணி தொடங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் அனுமதி கிடைத்த நிலையிலும், தோழர்களின் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமான பேரணியை காரைக்குடியின் வரலாற்றுப் பேரணியாக மாற்றியது.

காரைக்குடியில் புதிய வரலாறு படைத்துள்ள மாநாடும் பேரணியும் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், சனநாயக அமைப்புகள் என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்பது மிகையல்ல. இயற்கையின் இடையூறுகளையும் கடந்து மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஆனால் இது நமது பயணத்தின் முடிவல்ல.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். அவற்றை செயலாக்குவதற்கான களப்பணியைத் தொடர்ந்து முன்னெடுப்போம். இந்த மாநாடு தோழர்களுக்குள் உருவாக்கியுள்ள புதிய உற்சாகத்தை அமைப்பின் வளர்ச்சியாக மாற்றுவோம். தயக்கத்தோடு தொடங்கிய பயணம், தன்னம்பிக்கையோடு நிறைவடைந்துள்ளது. “முடியுமா?” என்று கேள்வி எழுந்த இடத்தில், “முடியும்” என்று நிரூபித்திருக்கிறோம்.

இந்த வெற்றிக்குப் பின்னால் உழைத்த ஒவ்வொரு தோழருக்கும், நன்கொடையாளர்களுக்கும், ஆதரவளித்த அனைவருக்கும், மாநாட்டில் பங்கேற்ற தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிவகங்கை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வெற்றி நிறைவு அல்ல – புதிய களப்பணிக்கான தொடக்கம்! தொடர்ந்து களத்தில் நிற்போம்; தீர்மானங்களைச் செயலாக்குவோம்; அமைப்பை வலுப்படுத்துவோம்; சமூக மாற்றத்திற்காகத் தொடர்ந்து போராடுவோம்.
பெரியார் முழக்கம் இதழ் 20082026

You may also like...