ஆழ்ந்து உறங்கும் ஒன்றிய சுகாதாரத்துறை
கொரோனா பேரிடருக்குப் பிறகு உலக நாடுகள் அனைத்தும் சுகாதாரத்துறைக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலைக்கு வந்திருக்கின்றன. ஆனால் பாஜக ஆளும் இந்திய ஒன்றியம், கொரோனா பேரிடரில் இருந்து துளியும் பாடம் கற்கவில்லை. நடப்பு நிதியாண்டில் சுகாதாரத் துறைக்கான நிதியை 3 விழுக்காடு குறைத்திருக்கிறது ஒன்றிய அரசு. கடந்த நிதியாண்டில் மட்டும் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 10 விழுக்காடு பயன்படுத்தப்படவில்லை. பயன்படுத்தப்படாமல் விடப்பட்ட தொகை ரூ.8,550.21 கோடி.
இது மதுரை உட்பட 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய தொகையை விட அதிகம். ஒன்றிய அரசு 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு கடந்த நிதியாண்டில் ஒதுக்குவதாக, நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்ட தொகையே ரூ.6800 கோடிதான். வீணாய்க் கிடந்தாலும் பரவாயில்லை, மக்கள் நலனுக்குப் பயன்பட்டுவிடக்கூடாது என்பது மோடி அரசின் எண்ணமா?
பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்