வி.பி.எஸ்.ஏ ஆபத்து

உயர் கல்வியை முழுமையாக மாநிலக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்து தனது ஆளுகைக்குக் கீழே கொண்டு வரும் மசோதா ஒன்றை ஒன்றிய ஆட்சி 2025-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த மசோதா கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானதால் நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு வந்துள்ளது. 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். குழுவின் தலைவர் பாஜகவைச் சேர்ந்த டி.குடந்தீஸ்வரி.

உயர் கல்விக்கான பல்கலைகழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆகிய அமைப்புகள் கலைக்கப்படுகின்றன. வி.பி.எஸ்.ஏ (விக்சித் பாரத் சிக்க்ஷா ஆதிஷ்டான்) என்ற ஒரே அமைப்பின் கீழ் இந்த அனைத்து அமைப்புகளையும் கொண்டு வருகிறது இந்த புதிய சட்டம். இதன் வழியாக உயர்கல்வியின் முழுமையான அதிகாரத்தை ஒன்றிய ஆட்சி எடுத்துக் கொள்கிறது. மாநிலங்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகங்களை நடத்தும் உரிமை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆபத்தான சட்டத்தை பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களே கடுமையாக எதிர்க்கின்றன. ஒன்றிய ஆட்சியின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்குதேசம் ‘இந்தச் சட்டத்தின் பிரிவுகள் மாநிலங்களின் சட்டம் இயற்றும் அதிகாரங்களைப் பறிப்பதோடு மாநில உரிமைக்கு மரண பத்திரம் எழுதுகிறது’ என்று கூறியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் உரிமைகள் மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கப்பட்டு ஒன்றிய ஆட்சியின் ஒழுங்குமுறைக் குழுவிடம் இந்தச் சட்டத்தின் வழியாக ஒப்படைக்கப்படுகிறது. இது அரசியல் சட்டத்திற்கே எதிரானது என்று ஆந்திராவின் தெலுங்தேச கட்சி தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இதேபோல் பாஜக ஆட்சி நடத்தும் மத்திய பிரதேசம், மேகாலயா மாநிலங்களும் இந்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளனர். மாநில ஆட்சிகள் மட்டுமல்ல காசி இந்து பல்கலைக்கழகம், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், சித்தூர் அய்.அய்.டி மற்றும் அசாம், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக சுதந்திரத்தையும் தனித்துவத்தையும் இந்த மசோதா பறிக்கிறது என்று எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமலே ஒன்றிய ஆட்சி இந்தச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி பல்கலைக்கழகங்களுக்கான கொள்கை முடிவுகளையும், பாடத்திட்டங்களையும், கல்வித் தரத்தையும் நிர்ணயிக்கும் உரிமை இந்த வி.பி.எஸ்.ஏ சட்டத்திற்கு மட்டுமே உண்டு. இந்தச் சட்டம் அமலுக்கு வந்து விட்டால் தேசியமொழிக் கொள்கையையும் அதன் வழியாக சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டு கல்லூரிகளில் பல்கலைக்கழகங்கள் வழியாகத் திணிக்கப்படும் ஆபத்து உருவாகியிருக்கிறது.

நிதி ஒதுக்கும் அதிகாரம் அதிகாரிகளிடமிருந்து பறிக்கப்பட்டு அமைச்சர்களுக்குப் போகிறது. எனவே அமைச்சர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கிடும் ஆபத்துகள் உருவாகி உள்ளன.

ஒன்றிய ஆட்சி தொடர்ந்து கல்வித் துறையில் குறுக்கிட்டு வருகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வைத் திணித்தார்கள். இப்போது அந்தத் தேர்வு மோசடிகளுக்கு உள்ளாகி மாணவர்களின் தற்கொலைகளுக்குக் காரணமாகி வருகிறது. தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் இருமுறை தீர்மானங்கள் நிறைவேற்றியும் கூட ஒன்றிய ஆட்சி மறுத்துக் கொண்டிருக்கிறது.அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு க்யூட் (CUET) என்ற நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு இதிலிருந்து விலக்கு கேட்கப்பட்டது; ஆனால் ஒன்றிய அரசு மறுத்துவிட்டது.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் பல்கலைக் கழகங்களுக்கான நிதியைத் தருவோம் என்கிறார்கள்; தேசியக் கல்விக் கொள்கையின் மாதிரிப் பள்ளியான பி.எம்.ஸ்ரி பள்ளிகளை அனுமதித்தால்தான் சட்டப்படி தரவேண்டிய தமிழ்நாட்டுக்கு உரிமையான கல்வி நிதியை வழங்க முடியும் என்று ஒன்றிய அரசு மிரட்டுகிறது.

கல்வி பொதுப்பட்டியலில் இருந்தாலும் மாநில அரசுக்கும் உரிமை உண்டு. இந்த உரிமையை ஒன்றிய ஆட்சி புறக்கணித்து தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ பள்ளி தொடங்குவதற்கு மாநில அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று அண்மையில் ஒன்றிய ஆட்சி அறிவித்தது. பாடத்திட்டத்திலும் மும்மொழிக் கொள்கையைத் திணித்து அதிலும் குறிப்பாக சமஸ்கிருத வகுப்புகளைக் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இப்போது உயர்கல்வி முழுவதையும் ஒன்றிய ஆட்சி பறிக்கப் போகிறது.

துணைவேந்தர் நியமனக்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை அனுமதித்து விட்டது தமிழ்நாட்டில் நடக்கும் தவெக ஆட்சி. இப்போது உயர் கல்வியை பறிக்கும் இந்த முயற்சியைத் தடுக்க தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடுமையாக எதிர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

பெரியார் முழக்கம் இதழ் 16072026

You may also like...