‘‘பெரியாரை படித்ததால் அம்மாவுக்கு மறுமணம் செய்தோம்!’’
கணவனை இழந்த அம்மாவுக்கு அவரது இரண்டு மகன்கள் மறுமணம் செய்து வைக்கும் நூறுசாமி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கணவனை இழந்த பெண் சமூகம் வழியாக சுமக்கும் வலிகளை பார்வையாளர்களிடம் உணர்வுபூர்வமாக கடத்துகிறது இப்படம். இது உண்மையில் நடந்த சம்பவம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வலையாம்பட்டு கிராமத்தைச் சார்ந்த சகோதரர்கள் சித்தார்த்தன் மற்றும் விவேக் இந்த புரட்சி திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.இந்தச் சிந்தனைக்கு காரணம் பெரியாரைப் படித்தது தான் என்கிறார் சித்தார்த்தன். இது குறித்து ‘ஆனந்த விகடனில்’ ஜூன் 26 ஆம் தேதி வெளிவந்த பேட்டியில் இருந்து…
அவள் விகடனில்தான் எங்கள் முதல் பேட்டி வெளிவந்துச்சு. அதைப் பார்த்த பிறகு நிறைய ஊடகங்களில் பேட்டி எடுத்தாங்க. அதையெல்லாம் படிச்சுட்டு டைரக்டர் சசி சார் என்னைக் கூப்பிட்டார். சென்னைக்கு வந்து சாரை சந்திச்சேன். “உங்கம்மாவோட கதையைப் படமா பண்ணலாமா?”ன்னு கேட்டார். அம்மாவுக்கு மகன்கள் கல்யாணம் பண்ணி வெச்சதைப் பலரும் ஒரு செய்தியா கடந்து போனாங்க. ‘அதை ஒரு சினிமாவா எடுக்க முடியும், மக்களைப் பார்க்கவெக்க முடியும்’னு சசி சார் நினைச்சதே எனக்கு வியப்பைக் குடுத்துச்சு. இதோ இன்னைக்கு அம்மாவோட வாழ்க்கைக்கு ‘நூறு சாமி’-ங்கிற பேர்ல சசி சார் உயிர் கொடுத்துட்டார்.”- சித்தார்த்தனின் வார்த்தைகளில் அவ்வளவு நெகிழ்ச்சி.
“எங்களுக்குச் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம், வலையாம்பட்டு. நான், தம்பி விவேக், அம்மா, அப்பான்னு சந்தோஷமா வாழ்ந்தோம். அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம் பண்ணவங்க. அம்மா பேரு செல்வி. பத்தாவது படிச்சிருக்காங்க. டெய்லரிங் பண்ணிக்கிட்டிருந்தாங்க. அப்பா கூலி வேலை பார்த்துக்கிட்டிருந்தார். 2009, டிசம்பர்ல உடல்நலம் சரியில்லாம அப்பா தவறிட்டார். அப்போ நான் முதல் வருஷம் இன்ஜினீயரிங் படிச்சுக்கிட்டிருந்தேன். தம்பி ப்ளஸ் ஒன் படிச்சான். அப்பாவோட இறப்புக்குப் பிறகு அம்மாதான் எல்லாப் பொறுப்புகளையும் சுமந்தாங்க.
காலேஜ் முடிச்சு, வேலைக்குப் போன பிறகு நானும் தம்பியும் பெரியாரைப் படிச்சோம். எங்களுடைய எண்ணங்கள் மாற்றங்கள் வந்தது. மத்தவங்களுக்கு அறிவுரை சொல்றது மட்டும் போதுமா, நம்ம அம்மாவுக்கு என்ன செஞ்சிருக்கோம்’னு யோசிக்கவெச்சுது. நானும் தம்பியும் படிப்பு, வேலைன்னு வெளியூர்கள்ல இருந்தோம். அம்மா தனியா இருந்தாங்க. அவங்களுக்கு ஏன் இன்னொரு கல்யாணம் செஞ்சு வெக்கக் கூடாதுன்னு தோணவே அது பத்தி அம்மாகிட்ட பேசினோம்
`உங்களுக்கென்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா… ஊர்,உலகம் என்ன பேசும், எப்படி ஏத்துக்கும்’னு கேட்டாங்க. ஒருகட்டத்துல இந்தப் பேச்சு அம்மாவோட பெற்றோர், கூடப் பிறந்தவங்கன்னு எல்லாருக்கும் தெரியவந்து எங்ககூட பேசுறதையே நிறுத்திட்டாங்க.
ஒருவழியா அம்மாவை சம்மதிக்கவெச்சோம். தெரிஞ்சவங்க மூலம் ஏழுமலைன்னு ஒருத்தரைப் பத்தித் தெரியவந்தது. பக்கத்து ஊர்தான். பத்து வருஷங்களுக்கு முன்னால் மனைவியை இழந்தவர். ‘நீங்க சந்திச்சுப் பேசுங்க. உங்களுக்குச் சம்மதம்னா நாங்க பேசுறோம்னு சொன்னோம். அம்மாவும் அவரும் சந்திச்சுப் பேசினாங்க.) அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. 2019-ம் வருஷம் எளிமையா கோயில்ல கல்யாணம் நடந்தது. அம்மாவுக்கு இப்படியொரு கல்யாணம் நடந்த விஷயம் தெரிஞ்சு ஊர்க்காரங்க நிறைய பிரச்னை பண்ணாங்க. வீட்டைப் பூட்டிவெச்சாங்க. எங்களை ஊருக்குள்ளயே விடக் கூடாதுன்னு பேசினாங்க. நானும் தம்பியும் அதுக்கெல்லாம் பயப்படலை. அந்த கிராமத்துல நல்லா படிச்சுட்டு வேலையில இருக்கிறவங்க நாங்கதான். அதனால மத்தவங்க பேச்சையோ நடவடிக்கைகளையோ பொருட்படுத்தலை. இப்போ நிலைமையெல்லாம் சகஜமாகி, சொந்தக்காரங்க, ஊர்க்காரங்க எல்லாம் வழக்கம்போல பேசறாங்க, பழகறாங்க…” நினைத்ததைச் சாதித்துவிட்ட திருப்தி ஒரு பக்கமும், அம்மாவின் முகத்தில் இழந்த புன்னகையை மீட்டெடுத்த மகிழ்ச்சி ஒரு பக்கமுமாக அண்ணனுக்கும் தம்பிக்கும் அப்படியொரு நிறைவு…”
இதுதான் `அவள் விகடனில்’ வெளிவந்த அந்தக் கட்டுரை. இவர்களின் கதையை அடிப்படையாக வைத்துத்தான் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி – ஸ்வாஸ்விகா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘நூறு சாமி’ படம் உருவாகியிருக்கிறது.
பெரியார் முழக்கம் இதழ் 09072026
