சூழ்ச்சிகர பாஜக அரசியல்

ஜெயலலிதா மறைந்த உடன் அக்கட்சியை இரண்டாக உடைத்து மாறி மாறி உதவிகளை செய்து அதிமுகவின் ரிமோட் கண்ட்ரோலை தன்வசம் வைத்துக் கொண்டது ஒன்றிய பாஜக ஆட்சி. திமுக எதிர்ப்பு என்ற ஒரே கொள்கையோடு எம்.ஜி.ஆர் உருவாக்கிய அஇஅதிமுக திராவிட இயக்கத்தின் கொள்கை அடையாளங்களை படிப்படியாக கைவிட்டு அதிகார அமைப்பாக மட்டும் மாறியது.

இந்துத்துவா உணர்வில் ஊறிப்போன ஜெயலலிதா சமூக நீதி மற்றும் மாநில உரிமை என்ற இரண்டு அடையாளங்களை உறுதியாக பின்பற்றி வந்தார். எடப்பாடி பழனிச்சாமி அந்த அடையாளங்களையும் தனது பதவி அதிகாரத்துக்காக கைவிடத் துணிந்தார். ஒன்றிய பாஜக ஆட்சி கொண்டு வந்த அனைத்து மாநில உரிமைப் பறிப்பு சட்டங்களுக்கும், இந்துத்துவ சட்டங்களுக்கும் அஇஅதிமுக பச்சைக்கொடி காட்டியது. முதல்வர் பதவிக்காகவும், கட்சித் தலைமை பதவிக்காகவும் எஞ்சி இருந்த கொள்கை அடையாளங்களையும் எடப்பாடி காவு கொடுத்ததன் விளைவுகளைத்தான் இன்று பார்க்கிறோம். கொள்கை அடையாளங்களை இழந்து பதவி அதிகாரங்களுக்காகவே கட்சி மாறிப் போனதால் இன்று வேகம் வேகமாக அஇஅதிமுக கரைந்து கொண்டிருக்கிறது. கொள்கை அடையாளம் இருந்திருந்தால் இந்த சீரழிவுகள் நடந்திருக்காது!

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை வீழ்த்துவதன் மூலம் தான் இந்துத்துவ சக்திகள் காலூன்ற முடியும் என்று பாஜக உருவாக்கிய சதியை இப்போது தெரிந்தோ அல்லது தெரியாமலோ விஜய் கட்சி வேகம் வேகமாக செயல்படுத்தி வருகிறது. கடும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கும் பலரையும் தூய சக்தியாக தனக்குத் தானே அறிவித்துக் கொண்ட விஜய் கட்சி இருகரம் கூப்பி விருந்து வைத்து வரவேற்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதற்காக அந்தக் கட்சி வெட்கப்படவில்லை! பாஜகவின் கனவுத் திட்டப்படி அஇஅதிமுக கரைந்து கொண்டிருப்பது உண்மையில் கவலைக்குரியது; வலிமையான கட்டமைப்பைக் கொண்ட கட்சியாக அது இருந்தது. இப்போது பதவிக்கு வந்திருக்கும் தவெகவுக்கு கட்சிக் கட்டமைப்பே இல்லை. கட்சியினருக்கும் விஜய் பிம்ப மாயை என்ற ஒன்றைத் தவிர வேறு எந்தக் கொள்கை அடையாளமும் இல்லை! சில அமைச்சர்கள் மட்டும் கொள்கைகளைப் பேசுகிறார்கள்; அதன் உறுதியும் நம்பகத் தன்மையும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. கொள்கைகளில் உறுதிவேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கிறோம்!

அனைத்து மாநிலங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் ஒன்றிய பாஜக ஆட்சி கொண்டு வந்து விட்டது. தன் கைவசம் இருக்கும் சி.பி.அய் அமலாக்கத்துறை உருட்டல் மிரட்டல்கள் அத்தனையையும் ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறது. இந்த உருட்டல் மிரட்டல்களுக்கு திராவிட மாடல் ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின் போல் தவெக உறுதியாக எதிர்த்து களமாடும் என்பதற்கான அறிகுறிகள் இல்லை. பாஜகவின் மாநில கட்சி முகமாக அண்ணாமலை களம் இறங்கி இருக்கிறார். இந்த பின்னணியில் தமிழ்நாட்டின் தனித்துவமான சமூக நல்லிணக்கம், இந்துத்துவ அரசியல் எதிர்ப்பு அடையாளங்கள் கடும் நெருக்கடிக்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

கடும் விமர்சனங்கள் இருந்தாலும் திராவிட இயக்க இலட்சியம் என்ற உறுதியான அடையாளத்துடன் செயல்படும் ஒரே இயக்கம் திமுக மட்டும் தான்! கட்சி கட்டமைப்பில் ஊடுருவி இருந்த குறைபாடுகளை சரி செய்யும் முயற்சிகளில் திமுக இப்போது இறங்கி இருக்கிறது. அதிகாரத்தை இளைஞர்களிடம் மாற்றும் முயற்சிகள் நடப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்! சூழல் நெருக்கடிக்களுக்கு ஏற்ப திமுகவின் அரசியல் பாதை திசைதிரும்பி விடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டுவது நமது கடமை. திசைதிரும்பாது என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.

பாஜகவின் தற்காலிக ஊடுருவலைத் தடுக்க விஜய் ஆட்சிக்கு இடதுசாரிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் ஆதரவுக் கரம் நீட்டியது. வரவேற்கத்தக்கதுதான்! அதற்காக திமுகவின் மாற்றாக தவெக உருவெடுத்து இருப்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்குவதும் அந்த அடிப்படையில் திமுக மீது கண்டனங்களைத் தெரிவிக்க வாய்ப்புகளைத் தேடி நிற்பதும் விரும்பத்தக்கது அல்ல.

பாஜகவின் ஒடுக்குமுறை அரசியலை எதிர்த்து துணிந்து களமாடிய ஒரே கட்சியான திமுகவைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளில் இறங்குவது மறைமுகமாக பாஜகவுக்கு தமிழகத்தில் களம் அமைத்து தரும் ஒரு செயல்பாடு என்பதை உண்மையான பாசிச எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சி அமைக்கும் வலிமையும் கட்டமைப்பும் உள்ள ஒரே கட்சி திமுக தான். ஜெயலலிதா ஆட்சியைப் போல் பழிவாங்கும் அரசியலை முற்றாகப் புறந்தள்ளி ஆக்கபூர்வமான வளர்ச்சி அரசியலை முன்னெடுத்தார் முதல்வராக இருந்த மு.க ஸ்டாலின்.

இப்போது இந்த ஆட்சி பழிவாங்கும் அரசியலைத் தொடங்கி விட்டது. 41 உயிர்களைக் கரூர் கூட்ட நெரிசலில் பறிகொடுத்தது, அப்போதே இதற்கு காரணமான ஆனந்தையும் விஜய்யையும் மு.க.ஸ்டாலின் அடுத்த நாளே கைது செய்திருக்கலாம்; ஆனால் அதை அவர் செய்யவில்லை; மாறாக எந்த ஒருகட்சித் தலைவரும் தனது தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார் என்று பெருந்தன்மையோடு பேசினார். இப்போது திமுக மீது மனசாட்சி இன்றி குற்றம் சாட்டுகிறார்கள்; சவால் விடுகிறார்கள் இதுதான் இவர்கள் நடத்தும் அரசியலின் தரம்!

அப்போது விஜயைக் கண்டித்த கட்சிகள் இப்போது இந்தப் பிரச்சனையின் பழிவாங்கும் படலம் துவங்குகிறபோது அதை எதிர்க்காமல் வாய் மூடி மவுனம் சாதிப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியிருக்கிறது. அஇஅதிமுக இடத்தில் தவெக‌வை நிறுத்தி அதன் வலிமையற்ற கட்டமைப்பை எந்த நேரத்திலும் சீர்குலைத்து அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் சூழ்ச்சிகரமான பாஜக அரசியலை உண்மையான இந்துத்துவ அரசியல் எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியார் முழக்கம் இதழ் 09072026

You may also like...