‘தாய்மாமன்’ திட்டம் தேவையற்றது!
“தாய் மாமன்” தங்க மோதிரம் திட்டத்துக்காக ஆண்டு ஒன்றுக்கு தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.755.83 கோடி. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்படும் இவ்வளவு பெரிய தொகையை அரசு மருத்துவக் கட்டமைப்புகளுக்காக செலவிடப்பட வேண்டும் என்பதே நமது உறுதியான கருத்து!
ஏற்கனவே “டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவி” திட்டத்தின் கீழ் நலிவுற்ற பெண்களுக்கு 14,000 ரூபாய் ரொக்கமாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ரூ.4,000 மதிப்பில் சத்துணவுகளும் வழங்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 667 குழந்தைகள் பிறப்பதாக கணக்கிடப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 17,000 ரூபாய். கடும் நிதிச்சுமையை உருவாக்கும் இத்திட்டம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தையும் கேள்விக்குறியாக்குகிறது.
அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அவர்களுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்கப்படும் என்று இத்திட்டம் கூறுகிறது. தமிழ்நாடு பின்பற்றி வரும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் நோக்கத்தையே இத்திட்டம் சிதறடிக்கிறது. அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் உள் கட்டமைப்பு வசதிகள் மிகமோசமாக உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இங்கே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் குழந்தை நலபணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படுவது ரூ.4500 மட்டுமே!
அரசு மருத்துவமனைகளில் தரமான மருந்துகளை வாங்குவதற்காக 1990 இல் உருவாக்கப்பட்டது தான் அரசு மருத்துவ சேவை வாரியம்; மருந்துகளுக்கு பதிலாக தங்கம் வாங்கும் வேலை இந்த வாரியத்திடம் இப்போது ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் வீட்டில் பிரசவம் பார்த்த நிலை இப்போது மாறிவிட்டது. 99 விழுக்காடு குழந்தைப் பிறப்புகள் மருத்துவமனைகளுக்கு வந்துவிட்டன பிறகு எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் வந்திருக்கிறது? தமிழக முதலமைச்சருக்கு “தாய் மாமன்” பெருமை சேர்ப்பதற்காக மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
– “விடுதலை இராசேந்திரன்”.
பெரியார் முழக்கம் இதழ் 02072026
