யாத்திரையில் `மோட்சம்’ போன 198 பக்தர்கள்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடப்பு பருவத்தில் சார்தாம் யாத்திரை மேற்கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை 37 இலட்சத்தைக் கடந்துள்ளதாம். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் சார்தாம் யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. கேதார்நாத் கோயில் ஏப்ரல் 22-ஆம் தேதியும், பத்ரிநாத் கோயில் ஏப்ரல் 23-ஆம் தேதியும் திறக்கப்பட்டன. கேதார்நாத் கோயிலுக்கு 12.61 இலட்சம் பக்தர்களும், பத்ரிநாத் கோயிலுக்கு 11.67 இலட்சம் பக்தர்களும் வருகை தந்துள்ளனர்.
கங்கோத்ரிக்கு 6.17 இலட்சம் பேரும், யமுனோத்ரிக்கு 5.83 இலட்சம் பேரும், ஹேம்குண்ட் சாஹிப்பிற்கு 1.05 இலட்சம் பக்தர்களும் சென்றுள்ளனர். கவுமுக் பனியாற்றுக்கு 5,795 பக்தர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் பருவம் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 3.54 இலட்சம் வாகனங்கள் யாத்திரை பாதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநில அவசர கால செயல்பாட்டு மய்யத்தின் தரவுகளின்படி, கடந்த 17.6.2026 வரை மொத்தம் 37.35 இலட்சம் பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனராம்.
இதற்கிடையே, யாத்திரையின் போது உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது. இதில் 195 பேர் உடல்நலக் குறைவு மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாகவும், 3 பேர் இயற்கை காரணங்களாலும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கேதார்நாத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். பத்ரிநாத்தில் 59 பேரும், யமுனோத்ரியில் 26 பேரும், கங்கோத்ரியில் 18 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடவுளை நம்பியவர்கள் கைவிடப்பட்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 02072026
