பெண்களுக்கு இலவச விடுதி நடத்திய நாத்திகர்
வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். பெரியார் பெருந்தொண்டர் செ.தெ.நாயகம். குறித்து விவரிக்கிறது இக்கட்டுரை.
“கண்ணை மூடிக்கொண்டு, பெரியாரைப் பின்பற்றியவர் இவர். பெரியாருக்கும் அவருக்கும் எந்த விஷயத்திலும் ஒன்று போலவே கருத்து உதிக்கும். பெரியார் கருத்தைச் சொல்லிவிட்டால், பெரியாருக்கு மேலாக அதை விளக்கிச் சொல்லுவார். அதற்கு ஆதாரங்கள் விநாடியில் சேகரித்து விடுவார். எந்தப் பதவியும் உத்தியோகமும் செய்யும் தொண்டும் தமிழ் மக்களுக்குப் பயன்படுத்தப்பட முடியாவிட்டால், அது எவ்வளவு பெரிதாயினும் திரும்பிப்பாரார். மிகவும் கண்ணியமானவர். வேஷத்துக்கு என்று நடக்கும் காரியம் அவரிடம் இருந்ததில்லை” என்று 16.12.1944-இல் குடி அரசு இதழில், பாராட்டப்பட்ட பெரியார் பெருந்தொண்டர் செ.தெ.நாயகம். தான் சென்ற ஊரையெல்லாம், வாழ்ந்த பகுதியையெல்லாம் பெரியார் மண்ணாக ஆக்கிட பாடுபட்ட பகுத்தறிவாளர் அவர். அன்றைய நெல்லை மாவட்டம்-இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தை அடுத்த செட்டிகுளத்தில் நெல்லை நாயகம்- வள்ளியம்மை இணையருக்கு 07.10.1878-இல் பிறந்தவர் செ.தெ.நாயகம். குலசேகரப்பட்டினத்தில் உள்ள பள்ளியில் 12 வயது வரையும், பின்னர் பள்ளி இறுதி வகுப்பு வரை பாளையங்கோட்டையிலும் படித்தார். தாயம்மாள் என்பவரை மணம் முடித்து, 1901-ஆம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்த நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே தாயம்மாள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.
குடும்பத்தினர், பெரியோர்களின் வற்புறுத்தலில் அடுத்த ஆண்டில் தமிழ்ப்புலவர் இ.பொ.ஈசுவரமூர்த்தியின் மகள் சிதம்பரவடிவு அம்மையாரை மணம் முடித்தார். கல்விப்பணியில் இருந்துதான் அவரது பொதுச்சேவை தொடங்கியது. தாயம்மாளின் நினைவாக, 1904-ஆம் ஆண்டில் குலசேகரப்பட்டினத்தில் பெண்கள் பள்ளியைத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 26. எளிய மக்களின் கல்விக்காக கட்டணம் இல்லாமல், உணவு கொடுத்தும் இந்தச் சேவையைப் புரிந்தார். அதன்பிறகு, தன் தாய் வள்ளியம்மையார் பெயரில், `சிறார் இல்லம்’ ஒன்றைத் தொடங்கினார். வெளியூரில் இருந்து மாணவிகள் வந்து தங்கிப்படிக்க, இந்தச் சிறார் இல்லம் அன்றைக்குப் பேருதவி புரிந்தது. அதிலும் குறிப்பாக உணவு, கல்வி, இருப்பிடம் என அனைத்துமே இலவசமாக அங்கு வழங்கப்பட்டன.
1909-இல் சென்னை எழும்பூருக்குக் குடிபெயர்ந்த நாயகம் ஆசிரியர் பயிற்சி முடித்து, சென்னையிலேயே பணியாற்றத் தொடங்கினார். அந்தக் காலத்தில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் கூட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடம் மறுக்கப்பட்டதைக் கண்டு வேதனையடைந்த நாயகம், 1933-இல் `தியாகராய நகர் பள்ளி’யைத் தொடங்கினார். குலசேகரப்பட்டினத்தில் மனைவி பெயரிலும், தாய் பெயரிலும் பள்ளியைத் தொடங்கியவர், சென்னையில் நீதிக்கட்சித் தலைவர் தியாகராயர் பெயரில் உருவான ஊரில், அந்தப் பெயரிலேயே பள்ளியைத் தொடங்கினார். அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமைகள் பறிபோவதைக் கண்டு வெகுண்டெழுந்து தொடங்கினார். ஏனெனில், அப்போது அவர் நீதிக்கட்சியின் கொள்கைகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, அரசியல்மயமாகியிருந்தார். இங்கும் `தியாகராயர் இல்லம்’ ஒன்றைத் தொடங்கி, மாணவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிடத்தை இலவசமாக வழங்கினார்.
ஆச்சரியம் என்னவெனில், தாயம்மாள் நடுநிலைப்பள்ளி, வள்ளியம்மை மேல்நிலைப் பள்ளி, தியாகராய நகர் பள்ளி, வள்ளியம்மை கல்லூரி என செ.தெ.நாயகம் 120 ஆண்டுகளுக்கு முன் விதைத்த விதைகள்யாவும், ஆலமரமாக வளர்ந்திருக்கின்றன. அதன் கல்விச்சேவைகள் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. கல்விச்சேவை மட்டும் அவருடைய வரலாறு அல்ல. நீதிக்கட்சியின் மூலம் பெரியாரோடு நட்பை வளர்த்து, அரசியல் களத்திலும் தவிர்க்க முடியாத பங்காற்றியுள்ளார் செ.தெ.நாயகம்.
1919-இல் திருவல்லிக்கேணி கூட்டுறவுப் பண்டக சாலையின் செயலாளராகப் பணியில் இணைந்தார் செ.தெ.நாயகம். 1921-இல் கூட்டுறவுத் துறையின் துணைப் பதிவாளராகப் பொறுப்பேற்று, 13 ஆண்டுகள் அந்தப் பணியில் நீடித்தார். பணிக்காலத்தில், பல புதிய கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி, ஏற்கெனவே இருந்த சங்கங்களின் தரத்தை மேம்படுத்தினார். நீதிக்கட்சிக் காலத்தில், வகுப்புவாரி உரிமை முதன்முதலாக அமலானது, இவரது துறையில்தான் என்பது வரலாறு. வேலூரில் கூட்டுறவுப் பயிற்சிப் பள்ளி சரிவர இயங்காமல் இருந்ததால், அதன் முதல்வராக செ.தெ.நாயகம் நியமிக்கப்பட, ஆறு மாதங்களில் சரிசெய்தார்.
நீதிக்கட்சியின் மீதும் சுயமரியாதை இயக்கத்தின் மீதும் இவர் கொண்டிருந்த பற்று மிகத் துய்மையானது. இந்தக் கொள்கைப் பாதையில்தான் தன் வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டார். ஓய்வுபெற்ற பின்னர், முழுநேரமாகவே அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். தன் மனைவி, குழந்தைகளை நீதிக்கட்சி மாநாடுகள், கூட்டங்களில் பங்கெடுக்கச் செய்தார். அந்த வகையில், 1933-இல் ஈரோட்டில் நடந்த கோவை மாவட்டச் சுயமரியாதை இயக்கப் பெண்கள் மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் சிதம்பரத்தம்மையார்.
1934-இல் `சுயமரியாதை இளைஞர் மன்ற’த் தலைவரானார். 1935-ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்ற நிலையில், நீதிக்கட்சியை வலுப்படுத்த, ஊர்ஊராகச் சென்று கூட்டங்களில் பேசினார் பெரியார். அப்போது, சுற்றுப்பயணக் குழுவின் செயலாளர்களாக பெரியாருடன் செ.தெ.நாயகமும் இருந்தார். `திராவிடன்’ இதழின் ஆசிரியராகச் சில காலமும், `விடுதலை’ நாளிதழின் கெளரவ மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
1937-இல் முதல் இந்தி எதிர்ப்புப் போர் வெடித்தபோது, முன்னணி வீரராகத் தன்னையும் இணைத்துக்கொண்டவர் செ.தெ.நாயகம். சென்னையில் இந்தி எதிர்ப்புப் போரை நடத்தவும், அதற்கான நெறிமுறைகளை வகுத்துத் தரவும் பெரியாரால் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டவர் செ.தெ.நாயகம். தியாகராயர் நகரில் இவருக்குச் சொந்தமான இடத்தில் இந்தி எதிர்ப்பு தலைமை நிலையத்தை அமைத்தார். இங்கிருந்துதான் ஈழத்து அடிகள் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டு, முதல்வர் இல்லம் நோக்கி நகர்ந்தது. செ.தெ.நாயகம் கைதுசெய்யப்பட்டார். 16.12.1938 அன்று இவர் விடுதலை செய்யப்பட்ட போது, நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பெத்தநாயக்கன்பேட்டைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். வழியெங்கும் மக்கள் கூடி வரவேற்பு அளித்தனர். பாராட்டு விழாவும் நடைபெற்றது. பின்னர், குடும்பத்துடன் பெரியாரைச் சந்திக்க ஈரோடு புறப்பட்டார். அங்கும் ஈ.வெ.கிருஷ்ணசாமி, `விடுதலை’ ஆசிரியர் பண்டிதர் முத்துசாமி பிள்ளை ஆகியோர் தலைமையில் மக்கள் வரவேற்பு அளித்தனர்.
16.07.1939-இல் இராமநாதபுரம் மாவட்ட 3-வது தமிழர் மாநாடு அருப்புக்கோட்டையில் நடைபெற்றது. செ.தெ.நாயகம் திறந்துவைத்த இந்த மாநாட்டில், `இலங்கை அரசால் அங்கு தமிழர்களுக்குத் தொல்லை ஏற்பட்டால், அதன் விளைவுகளுக்கு இந்திய அரசும்தான் பொறுப்பு’ என்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து, 10.08.1939-இல் ஈரோடு பெரியார் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செ.தெ.நாயகம் பேசும்போது, “இலங்கையில் தமிழ் மக்கள் அரசால் கொடுமைப்படுத்தப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று பேசினார்.
`தமிழ்நாடு புரோகித மறுப்பு சங்க’த்தின் தலைவர், `நாத்திகர் இயக்க’த்தின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். பிறந்த மண்ணிலும் பணியாற்ற வந்த மண்ணிலும் கல்விச்சேவையைத் தொலைநோக்குச் சிந்தனையுடன் ஆற்றிய செ.தெ.நாயகம், ஓய்வுக்காலத்தில் தமிழ்நாடெங்கும் சுற்றிச்சுழன்று, இயக்கத்திற்காகவே வாழ்ந்து மறைந்தார். 13.12.1944-இல் செ.தெ.நாயகம் காலமானபோது, `ஆருயிர்த் தோழர் மறைந்தாரே’ என்று `குடி அரசு’ இதழில் தலையங்கம் தீட்டினார் பெரியார். `திராவிடம் பெற்ற வீரர்’ ஆரியத்தோடு தொடுத்த போர் முடியும் முன்னரே மறைந்தாரே’ என மனமுடைந்தார் அண்ணா.
குறிப்பு: இவரது சென்னை தியாகராயர் நகர் இல்லத்தில் தான் 09.07.1949 அன்று மணியம்மை-பெரியார் திருமணம் பதிவு செய்யப்பட்டது. (ஆசிரியர்).
பெரியார் முழக்கம் இதழ் 09072026
