‘சிட்டிசன்’ அடையாளம் ஏன் உறுத்துகிறது?

`இந்தியாவின் குடிமகன்/குடிமகள்’  என்பதற்கான சான்றாகவே  கடவுச்சீட்டு எனும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வந்தது. வெளியுறவுத் துறை அமைச்சகம் இப்போது அதை மறுக்கிறது; அது ஒரு பயண ஆவணம் தான் என்று கூறுகிறது. அதேபோல் ஆதார் அடையாளமும் குடிமகன் அல்லது குடிமகள் என்பதற்கான சான்று இல்லை என்றும் கூறுகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் குடிமகன் அல்லது குடிமகள் என்றே சட்டம் கூறுகிறது. ஆங்கிலத்தில் `சிட்டிசன்’என்று அழைக்கப்படும் இந்தச் சொல்லுக்கு ஜாதி, மத அடையாளங்கள் பாலின அடையாளங்கள் எதுவும் இல்லை. இதுதான் சங் பரிவாரங்களை உறுத்துகிறது.

இந்தியாவில் வாழும் எவரும் இந்துக்கள் என்ற அடையாளத்தோடு தான் வாழ வேண்டுமே தவிர, அதை மறுக்கும் `சிட்டிசன்’ என்ற அடையாளத்தை ஏற்க முடியாது என்பதுதான் அவர்களின் கொள்கை. இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்தும் குடிமக்கள் என்ற அடையாளத்தை அகற்றிவிட்டு இந்துராஷ்டிரத்துக்கான சனாதன அடையாளங்களை நோக்கி நாட்டை நகர்த்துகிறது சங்பரிவார்.

அரசியல் சட்டம் மத சுதந்திர உரிமையை உறுதி செய்கிறது. ஆனால் அந்த சுதந்திரம் சிறுபான்மையினருக்கு இல்லை என்கிறது ஆர்.எஸ்.எஸ் அதற்காக மதமாற்ற  தடைச் சட்டம் கொண்டு வருகிறார்கள். அதே போல்  ‘சூத்திர-பஞ்சமர்’களுக்கான கர்ப்பகிரக பூஜை உரிமையை தடுக்கிறார்கள்; கடவுளை நெருங்கும் உரிமையில் சூத்திரர்களை விலக்கி தீண்டாமையை நிலைநாட்டுகிறார்கள். தீண்டாமை ஒரு குற்றம்  என்ற அரசியல் சட்டம் கர்ப்பக்கிரகத்தில் செல்லாது என்கிறார்கள். அரசியல் சட்டத்தை விட ஆகமங்கள் உயர்வானவை என்று வாதாடுகிறார்கள். 

ஆண், பெண் பாகுபாடுகளை மறுக்கிறது அரசியல் சட்டம். ஆனால் மதத்துக்கான தனி உரிமைகளில் ஆண்,பெண் சமத்துவம் பொருந்தாது என்கிறது ஒன்றிய ஆட்சி. அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைய உச்சநீதிமன்றம் அனுமதித்தது. அனுமதி மறுப்பது மதத் தீண்டாமை என்று தீர்ப்பில் பதிவு செய்தது. ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய ஆட்சி வாதாடி வருகிறது. “The constitutional mandate under Article 25(1) entitling all persons equal, did not provide for gender equality” அனைவரும் சமம் என்ற அரசியல் சட்ட உரிமை இந்து மதத்துக்கு பொருந்தாது என்பதே ஒன்றிய ஆட்சியின் கொள்கை என்று வாதிடுகிறார் அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா.

குடிமக்கள் அனைவருக்கும் அரசியல் சட்டம் வழங்கும் பொது உரிமைகளை `இந்து’ சனாதனத்துக்கு எதிரானது என்பதால் சட்டத்தின் நோக்கத்தை திட்டமிட்டு சிதைக்கிறார்கள். குடிமக்கள் என்ற அடையாளத்தை ஏற்க மறுக்கிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள், மதமாற்ற தடைச் சட்டங்கள், பசு பாதுகாப்புச் சட்டம், சமஸ்கிருதம் மற்றும் வந்தே மாதரம் திணிப்பு, தொண்டு நிறுவனங்களை  ஒடுக்குதல் என்று அடுக்கடுக்கான திட்டங்கள் திணிக்கப்படுவதன் நோக்கம் குடிமக்களை இந்துக்களாக மாற்றுவதற்குத்தான்.

இஸ்லாம் மதத்துக்கு மாறினால் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு உரிமை வழங்கலாம் என்று திராவிட மாடல் ஆட்சியின் 2024-ஆம் ஆண்டு அரசாணையை மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பி.பி.பாலாஜி அமர்வு இப்போது ரத்து செய்திருப்பதும் இதே நோக்கத்தில் தான். ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் `இந்து’ என்ற அடையாளச் சான்றிதழை பெற்றால் மட்டுமே இந்தியாவில் குடி மக்களாக வாழ முடியும் என்ற ஆபத்தை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது.

பெரியார் முழக்கம் இதழ் 02072026

You may also like...