காவல் நிலையத்தில் கிடா வெட்டுவதா? கழகம் புகார்; அரசு உடனடி நடவடிக்கை!

சேலம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காக கிடாவெட்டி மாந்திரீக பூஜை போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் 26.06.2026 புகார் மனு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்தி விவரம்:

கடந்த 20.06.2026 ஞாயிறு அன்று சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் “குற்றங்கள் குறைய வேண்டும்” என்பதற்காக காவல்துறையினரே கிடாவை பலியிட்டு, அதன் ரத்தத்தை காவல் நிலைய கட்டிடத்தின் நான்கு மூலைகளிலும் பூசி, மாந்திரீக பூஜை நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு ஆணைப்படி, அரசு அலுவலகங்கள் , காவல் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டிடங்களிலும் மதச்சார்புடைய வழிபாடுகள், பூஜைகள், கடவுள் படங்கள், மாந்திரீக சடங்குகள் நடத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையே அரசு ஆணையை மீறி, மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் விலங்கு பலியிட்டு மாந்திரீக பூஜை செய்திருப்பது:
1.அரசியலமைப்பின் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரானது.
2.காவல்துறை நடத்தை விதிகள் மீறல்.
3.பொதுமக்கள் மத்தியில் காவல்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் செயல் என்பதனை தோழமையுடன் சுட்டிக்காட்டியும், கண்டித்தும் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் நேரில் புகார் அளிக்கப்பட்டது.
புகார் அளித்த அடுத்த சில நாட்களிலேயே சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவசண்முகம், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 02072026

You may also like...