கருத்து செறிவுடன் நடந்த கழக இளைஞரணி பயிலரங்கம்
சேலம் மாவட்டக் கழக இளைஞரணி நடத்திய இரண்டு நாள் பயிலரங்கத்தில் எண்பது இளைஞர்கள் பெண்களும், ஆண்களுமாய் பங்கேற்றனர். கால மாற்ற சூழலில் பெரியார் கருத்தியல் மற்றும் பெரியார் இயக்கத்தின் தேவை குறித்து பயிலரங்கம் விரிவாக விவாதித்தது.
சேலம் மாவட்ட இளைஞர் அணி பயிலரங்கம் ஜூன்20,21 தேதிகளில் சேலம் நிலாச்சோறு உணவக அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. 20.06.2026 சனிக்கிழமை இளைஞர்களின் எழுச்சியோடு தொடங்கியது. தோழர்கள் லதா, சத்யா, பொன்ராஜ், உமாபதி குழுவினரின் கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு தொடங்கியது.
தொடர்ந்து “இன்றைய சமூக அரசியல் சூழலில் பெரியாரியத்தின் தேவை” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முதல் வகுப்பினை தொடங்கினார்.
தேநீர் இடைவேளைக்கு பிறகான இரண்டாவது அமர்வில் “சமூக ஊடகங்கள் – பயன்படுத்தல்” என்ற தலைப்பில் ( Wild South Raiders podcast) தோழர் கக்காஷி காணொளி மூலமாக விளக்கி வகுப்பெடுத்தார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகான மூன்றாவது அமர்வில் “ஜாதியத்தின் புதிய வடிவம்: சுயஜாதி மறுப்பு பார்ப்பனிய எதிர்ப்புடன் ஜாதி மறுப்பு இயக்கம்” என்ற தலைப்பில் கழக தாம்பரம் நகர அமைப்பாளர் அருண்கோமதி வகுப்பெடுத்தார்.
மாலை தேநீர் இடைவேளைக்குப் பிறகான நான்காவது அமர்வில் “வாழ்க்கை முறையில் சடங்குகளின் தாக்கம்: அதன் வழியே நிலை நிறுத்தப்படும் மடமை,இழிவு” என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி வகுப்பெடுத்தார். முதல் நாள் கடைசி அமர்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி “பெரியாரின் போராட்டங்கள் – இலக்கு – அணுகுமுறை” என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
முதல் நாள் வகுப்பில் 80 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட புதிய தோழர்கள் பங்கேற்றனர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி 79-வது பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
2-ம் நாள்: தோழர்கள் லதா, சத்யா, பொன்ராஜ், உமாபதி குழுவினரின் கலை நிகழ்ச்சிகளுடன் வகுப்பு தொடங்கியது. தொடர்ந்து “பார்ப்பனியம்: தத்துவமாய், அதிகார மையமாய் ஊடகங்களில், அரசாங்கத்தில், மதத்துறையில் செலுத்தும் ஆதிக்கம் -கோட்பாடாக புரிந்துகொள்ளல்” என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முதல் வகுப்பினைத் தொடங்கினார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகான இரண்டாவது அமர்வில் “பெரியாரும், தேர்தல் அரசியலும் – சமூக மாற்றத்தின் வழியாக அரசியல் மாற்றம்” என்ற தலைப்பில் திருப்பூர் மகிழவன் உரை நிகழ்த்தினார். மதிய உணவு இடைவேளைக்கு பிறகான மூன்றாவது அமர்வில் “திராவிடர் விடுதலைக் கழகம் – 2012 முதல் இன்று வரை செயல்பாடுகள் – முன்னெடுப்புகள்” என்ற தலைப்பில் கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் உரை நிகழ்த்தினார். தேநீர் இடைவேளைக்கு பிறகான கடைசி அமர்வில் “சுயமரியாதை இயக்கம்: செயல்பாடு – அணுகுமுறை” என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வகுப்பெடுத்தார்.
நிறைவாக, “அய்யம் களைதலில்” தோழர்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் ஆதாரத்துடன், வரலாற்றுக் குறிப்புகளுடன், எளிமையான விளக்கத்துடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறந்த முறையில் பதிலளித்தார்.
சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன் நன்றி கூற பயிலரங்கம் நிறைவு பெற்றது. பயிலரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கு உழைத்திட்ட சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் தங்கதுரை, சிவ சண்முகம், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், தமிழ்நாடு மாணவர் கழகம் நாகராஜ், கவியரசு, கொங்கணாபுரம் கோகுலக் கண்ணன், மேட்டூர் முத்துராஜ், இரண்யா, மேச்சேரி சபரி குறிப்பாக இவ்வளவு சிறப்பான நிகழ்வு நடைபெற காரணமாக இருந்த நிலாச்சோறு உரிமையாளர் ரகுநாத் – கவிதா ஆகியோருக்கும் மற்றும் கழக தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் கலந்து கொண்ட அனைத்து புதிய தோழர்களுக்கும் சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பயிலரங்கில் உணர்வூட்டிய புரட்சிப் பாடல்கள்
தோழர்கள் லதா, சத்யா, பொன்ராஜ், உமாபதி குழுவினர் பயிலரங்கத்தில் உணர்வூட்டும் கொள்கைப் பாடல்களை பாடினர். ஒவ்வொரு உரையின் இடைவெளியில் பாடப்பட்ட பாடல்கள் பயிரங்கில் பெரும் வரவேற்பை பெற்றன.
உணவக உரிமையாளரின் பேருதவி
நிலாச்சோறு உணவகம் திறந்த வெளியில் அழகிய குடில்களாக கலை உணர்வுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. பயிலரங்க அரங்கு எதிரொலி சிறிதும் இன்றி மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.
உணவக உரிமையாளர் ரகுநாத் இரண்டு பயிலரங்கிலும் முழுமையாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்தார். இந்த பயிலரங்கம் தனது உணவகத்தில் நடப்பது எனக்கு பெருமை சேர்த்துள்ளது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
வாஸ்து மடமையை தகர்த்து வெற்றிநடைபோடும் நிலாச்சோறு உணவகம்
நிலாச்சோறு உணவக உரிமையாளர் ரகுநாத் நிகழ்வின் இறுதியில் பேசுகையில் குறிப்பிட்டதாவது:
எந்தவித அரசியல் அடையாளம் இல்லாமல் இந்த உணவகத்தை நடத்தி வருகிறேன். அடையாளம் இல்லை என்றாலும் அனைவருக்கும் தெரியும் நான் பெரியாரிஸ்ட் என்று, எந்த ஒரு இயக்கத்திலும் நான் பயணிக்கவில்லை. இந்த உணவகத்தை வாஸ்து சாஸ்திர முறைக்கு நேர் எதிராகக் காட்டியுள்ளேன். கோடிக்கணக்கான ரூபாயில் உணவகத்தைக் கட்டுகிற என்னை பார்த்து ஒரு 20 இலட்சம் ரூபாய்க்கு வீடு கட்டுபவர் யோசிப்பார். நான் தற்போது கட்டி வருகிற கட்டிடத்தில் அனைத்து வாஸ்து சாஸ்திர அமைப்புக்கு நேர் எதிராக கட்டுமானப் பணிகளை செய்து வருகிறேன். குபேர மூலையில் கழிவறையும் சனி மூலையில் கழிவறை தொட்டியையும் அமைத்துள்ளேன்.
நான் என்னுடைய வீட்டிலும் பல்வேறு சடங்கு முறைக்கு எதிராக செய்து வந்துள்ளேன். வீட்டில் புதுமனை புகுவிழாவில் பால் காய்ச்சுவதற்கு மாற்றாக பாகற்காய் குழம்பு வைத்து சாப்பிட்டோம். இனிப்பு இல்லாமல் புதுமனை புகுவிழா நடந்தது. எனது இணையர் குடும்பப் பிண்ணனி சடங்குகள், ஜோசியம் சார்ந்து தான் இருந்தது. ஆனால் இப்போது அவர் பகுத்தறிவு சிந்தனைக்கு வந்துள்ளார். ஆகவே எனது இணையருக்கு நன்றி!
பெரியார் முழக்கம் இதழ் 25062026
