சமூகத்தில் மாறிவரும் உளவியல்

அண்மையில் வெளியான மாதிரிப் பதிவு முறை (SRS) புள்ளியியல் அறிக்கை (Sample Registration System (SRS) Statistical Report 2024) புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவின் மொத்தக் கருத்தரிப்பு விகிதம், அதாவது ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அளவு தற்போது 1.9 ஆகக் குறைந்துள்ளது. இது மக்கள்தொகையை நிலைத்திருக்கச் செய்யத் தேவையான 2.1 என்கிற மாற்று நிலையைவிடக் குறைவு. 2014இல் 21ஆக இருந்த பிறப்பு விகிதம் 2024இல் 18.3ஆகக் குறைந்திருக்கிறது. அதே நேரம், இறப்பு விகிதம் 6.7இலிருந்து 6.4ஆக மட்டுமே குறைந்துள்ளது. இந்தியாவின் சராசரியான நடுத்தர வயது 40.2 தற்போது 29.2 சீனாவின் சராசரி நடுத்தர வயது 40.2 பல ஐரோப்பிய நாடுகளில் இது இன்னும் அதிகம். அதே நேரத்தில் இந்தியாவில் தற்போது 15 முதல் 29 வயதுக்குள் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 38கோடி. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 27% விழுக்காடாகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இந்தியாவின் மக்கள்தொகையில் 65 விழுக்காட்டுக்கும் மேல் உள்ளனர்.

இந்தப் புள்ளிவிவரத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்திய மக்கள்தொகையில் இளைஞர்கள், முதியோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதை ஒரு தனித்துவமான காலகட்டமாக வல்லுநர்கள் கருதுகிறார்கள். இந்த மாற்றம் வெறும் பொருளாதார மாற்றமோ அல்லது புள்ளிவிவர மாற்றமோ அல்ல, ஆழமான உளவியல் / சமூக மாற்றம் தற்போதைய சமூக – அரசியல் சூழலில் குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்களின் மனநிலையை எப்படிப் பாதுகாக்கப்போகிறோம் என்பதே இந்தியாவின் மிகப் பெரிய சவால்.

கருத்தரிப்பு விகிதம் குறைவதற்கு நகரமயமாக்கல், கல்வி வளர்ச்சி, குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணர்வு, சிறிய குடும்பங்களை விரும்பும் மனநிலை போன்றவை காரணமாகின்றன. இவை அனைத்தும் வளர்ச்சியின் அறிகுறிகள் என்றாலும், குடும்பங்களின் மரபான அமைப்பையே இவை மாற்றிவருகின்றன. ஒரு காலத்தில் இந்தியக் குடும்பங்கள், தலைமுறை சார்ந்த உறவுகளின் மேல் கட்டப்பட்டிருந்தன. தாத்தா, பாட்டி, உறவினர்கள், பராமரிக்கும் பொறுப்பைப் பகிர்ந்துகொள்வது இப்படியான சூழலில் குழந்தைகள் வளர்ந்தனர். முதியவர்கள் குடும்பத்தின் மையமாக இருந்தனர். குடும்பம் என்பது வெறும் பொருளாதார அமைப்பாக அல்லாமல், அதீத உணர்வுகளை மேலாண்மை செய்யும் அமைப்பாக இருந்தது.

இன்று, சமூக ஊடகங்கள் உருவாக்கும் செயற்கை அடையாள உலகம் உண்மையான மனித உறவுகளை மெதுவாக மாற்றிவருகிறது. நூற்றுக்கணக்கான இணையத் தொடர்புகள் இருந்தாலும் உணர்வுரீதியாகப் பாதுகாப்பான உறவுகள் இல்லாத தலைமுறை உருவாகிறது. நகர வாழ்க்கை, வேலைவாயப்புக்காக அடிக்கடி நிகழும் இடமாற்றங்கள், தனிமனித மையச் சிந்தனைகள் ஆகியவை குடும்ப அமைப்பை மேலும் சிதைத்து வருகின்றன, பெரும்பாலான இளைய வயதினர் சமூக வலைத்தளங்களிலேயே அதிக நேரத்தைச் செலவிடுவதால், உணர்வுரீதியாக மிகவும் கொந்தளிப்பான மனநிலையில் இருக்கிறார்கள். அதேபோல் பல முதியவர்கள் பொருளாதார ஆதரவு கிடைத்தாலும் உணர்வுரீதியாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இன்றைய இந்திய இளைஞர்களின் வாழ்க்கை முந்தைய தலைமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கல்விப் போட்டி, வேலைவாய்ப்பு பற்றிய அச்சம், சமூக ஒப்பீடு, சமூக வலைதள அழுத்தம், வெற்றியை நிரூபிக்க வேண்டிய நிரந்தர மனஅழுத்தம் ஆகியவை குழந்தைகள் இளைஞர்களின் மனநிலையைத் தீவிரமாகப் பாதிக்கின்றன. முன்னர் குழந்தைகள் தங்கள் பள்ளி அல்லது சமூகத்துக்குள் மட்டுமே ஒப்பிடப்பட்டனர். ஆனால் இன்று அவர்கள் உலகளாவிய அளவில் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சொந்த வாழ்க்கையின் வெற்றிகள் குறித்த பதிவுகள் மூலம் தங்கள் கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்துகிறார்கள். அதேவேளையில், தோல்விகளைத் தாங்கும் திறன் அவர்களிடம் வளரவில்லை. சமூக ஊடகங்கள் உணர்வுகளை வியாபாரப் பொருளாக மாற்றிவிட்டன. எனவே, உணர்வுகளை எப்போதும் போலியாக வெளிப்படுத்தும் நிலைக்கு இளைஞர்கள் ஆளாகியிருக்கிறார்கள். அதனால் கோபம், வெறுப்பு, பயம், வன்மம், அரசியல் பிரிவினை போன்ற எதிர்மறையான பண்புகள் இளைஞர்களை இலக்காக வைத்துப் பரப்பப்படுகின்றன. இதனால், இளைஞர்கள் சிந்திப்பதற்கு முன் உணர்ச்சிவசப்படும் மனநிலைக்குச் செல்கிறார்கள். இது ஆபத்தானது.

இந்தியாவில் சராசரி வாழ்நாள் தற்போது 72 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இது மருத்துவத் துறை முன்னேற்றத்தின் அடையாளம். ஆனால் நீண்ட ஆயுள் மட்டுமே மனித வாழ்வின் தரத்தை நிர்ணயிக்காது. சக மனித ஆதரவு இல்லாத முதுமை ஓர் உளவியல் நெருக்கடியை உருவாக்குகிறது. ஓய்வு வாழ்க்கை, சமூகப் பங்களிப்பை இழப்பது, உடல் நோய்கள், குழந்தைகள் வெளிநாடு அல்லது நகரங்களுக்கு இடம்பெயர்தல் ஆகியவை முதியோரிடம் மனச்சோர்வையும் தனிமையையும் அதிகரிக்கின்றன. இந்தியச் சமூகத்தில் முதியவர்கள் ஒருகாலத்தில் அறிவின் அடையாளமாக மதிக்கப்பட்டனர். ஆனால், தொழிலநுட்ப மாற்றங்களும் வேகமான கலாச்சார மாற்றங்களும் அவர்களைச் சமூகத்தின் ஓரத்துக்குத் தள்ளுகின்றன.

மாதிரிப் பதிவு முறை அறிக்கை மேலும் ஒரு முக்கியமான விஷயத்தையும் காட்டுகிறது. இந்தியாவில் பிராந்திய / கிராம-நகர வேறுபாடுகள் இன்னும் தீவிரமாக உள்ளன. பல தென்னிந்திய மாநிலங்கள் சுகாதார அளவுகோல்களில் வட மாநிலங்களைவிட முன்னிலையில் உள்ளன. இந்தச் சமத்துவமின்மை வெறும் வளர்ச்சிப் பிரச்சினை அல்ல; அது உளவியல் பாதிப்புகளையும் உருவாக்குகிறது. பாதுகாப்பின்மை, வறுமை, சமூக அச்சம் நிறைந்த சூழலில் வாழும் மக்கள் உணர்ச்சிரீதியாக அதிகப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அத்தகைய சமூகங்கள் பயம், வெறுப்பு, அரசியல் தூண்டுதல்களுக்கு எளிதில் ஆளாகும் அபாயம் உள்ளது. எனவே, இந்தியாவின் மக்கள்தொகை மாற்றத்துக்குப் பொருளாதாரத் திட்டமிடல் மட்டுமல்ல, உளவியல் அடிப்படையிலான சமூகத் திட்டமிடலும் அவசியமாகிறது.

பள்ளிகள் தேர்வு மையங்களாக மட்டுமே இருக்கக் கூடாது. உணர்வு மேலாண்மை, மன அழுத்த மேலாண்மை, சக மனிதர்களுடனான தொடர்பு, முடிவெடுக்கும் திறன், பிரச்சினைகளைக் கையாளுதல், பாதுகாப்பான சமூக வலைதளப் பயன்பாடு போன்றவை கல்வியின் ஒரு பகுதியாக மாற வேண்டும். குழந்தைகள் தோல்வியைச சமாளிப்பது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது. உறவுகளை உருவாக்குவது போன்றவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோல் முதியவர்கள் வெறும் பராமரிக்கப்பட வேண்டியவர்களாக மட்டுமே பார்க்கப்படக் கூடாது. அவர்கள் அனுபவத்தால் வழிநடத்தும் பங்கேற்பாளராக மாற வேண்டும். அதற்கான சூழலைத் திட்டமிட்டு உருவாக்க வேண்டும். முதியவர்கள் அனுபவத்தையும் நினைவுகளையும் தருகிறார்கள்; இனைஞர்கள் ஆற்றலையும் புதுமையையும் தருகிறார்கள்.

தலைமுறைகளைப் பிரிக்கும் சமூகங்கள் இறுதியில் இந்தத் தொடர்ச்சியை இழக்கின்றன. இது இந்தியச் சமூகம் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான சவால். மருத்துவமனைகள், வேலைவாய்ப்புகள், ஓய்வூதியத் திட்டங்கள் மட்டுமல்லாமல் பாதுகாப்பு தரும் குடும்பங்கள், மனிதநேயமான கல்வி அமைப்புகள், மனநலத்தை மதிக்கும் சமூகங்களை உருவாக்க வேண்டும். இளைஞர்களையும் முதியவர்களையும் இணைக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும். இளைஞர்கள், முதியவர்களின் எண்ணிக்கையை மட்டும் சார்ந்து இந்தியாவின் எதிர்காலம் அமையப்போவதில்லை. அவர்கள் உணர்வுரீதியாகப் பாதுகாப்பாகவும் சமூகரீதியாக இணைந்தவர்களாகவும் உணர்கிறார்களா என்பதில்தான் இருக்கிறது எதிர்கால இந்தியாவின் வெற்றி.

– (`இந்து தமிழ் திசை’ நாளிதழில் 2-ஜுன் அன்று மருத்துவர் சிவபாலன் எழுதிய கட்டுரை).
பெரியார் முழக்கம் இதழ் 11062026

You may also like...