தாய்கிழவி பேசும் மகளிர் “உரிமைத் தொகை”
பாட்டியை கதையின் நாயகியாக்கி வெளிவந்துள்ள “தாய் கிழவி” திரைப்படம் மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகை ராதிகா மிகச்சிறப்பான குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். தனது தந்தை நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுடைய நடிப்பை அப்படியே பிரதிபலித்து இருக்கிறார்.
பாட்டி தன்னுடைய சொந்த உழைப்பில் நகைகளையும் பணத்தையும் ஈட்டி வட்டிக்கு விடுகிறார். பாட்டி 160 பவுன் நகைகளை தனது கடையில் வாங்கினார் என்று ஒரு மனநோயாளி நகைக்கடைக்காரர் பொய்யாகக் கூறியதை நம்பி அவரது 3 மகன்களும் பாட்டியிடம் இருந்து நகையை தட்டிப் பறிக்கும் சூழ்ச்சிகளைச் செய்கிறார்கள். அந்த மூன்று மகன்களில் ஒருவர் கமல்ஹாசன் ரசிகர்; மற்றொருவர் கருப்பண்ண சாமியின் தீவிர பக்தர்; மற்றொருவர் ஆட்டோ தொழிலாளி. பாட்டியிடம் இருந்து நகைகளை பறிக்க இவர்கள் அரங்கேற்றும் திட்டங்கள் அத்தனையும் தற்குறித்தனமானவை. இடையில் நோய்வாய்ப்பட்டு பாட்டி படுத்த படுக்கையாகி விடுகிறார். அப்போது மூன்று விரல்களை அவர் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த மூன்று விரல்களும் அவரது நகைகள் எங்கே புதைக்கப்பட்டிருக்கின்றன என்பதை குறிப்பால் உணர்த்துவதாக இவர்கள் நம்புகிறார்கள்.
முதலில் தாய் மரணத்திற்கு முயற்சிக்கிறார்கள்; பிறகு பிழைத்து வர வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்; படுத்த படுக்கையில் இருந்த பாட்டியை மருத்துவமனையில் சேர்த்து அதற்காக மனைவிகளிடம் இருந்து நகைகளை வாங்கி அடகுவைத்து செலவு செய்கிறார்கள். படுக்கையில் விழுந்த பாட்டி பிறகு உயிர் பிழைத்து வருகிறார். தான் பாதிக்கப்பட்ட போது அந்த மூன்று விரல்களை நீட்டியது வீட்டில் இருந்த மூன்று பிளேடுகளை கொண்ட மின்விசிறி சுவிட்சை ஏன் அணைக்கவில்லை என்பதற்குதான் என்று பாட்டி விளக்கம் தருகிறார். ஊதாரி மருமகனிடமிருந்து தன்மகளை பிரித்து மறுமணம் செய்து வைக்கிறார். இறுதியாக தான் சேர்த்து வைத்த நகைகளை தன்னுடைய மகன்களுக்கு கொடுக்காமல் மகளுக்கும், மருமகள்களுக்கும் அவர் கொடுத்துவிட்டு பேசுகிறார். படத்தின் இறுதிகாட்சியில் `தாய்கிழவி’ இவ்வாறு கூறுகிறார்.
“படைக்க, காக்க, அழிக்க என்று அத்தனையும் ஆம்பளையை கும்பிடச் சொன்னதே பெண் தான். பணத்துக்கும் படிப்புக்கும் பெண் தெய்வத்தை தான் கும்பிட சொல்கிறார்கள். ஏனா ஆறை நூறாக்குவதும் பெண்தான் என்று ஆம்பளைக்கே தெரியும். பிழைக்குற பொழைப்புக்குதான் ஒரு பொம்பளைக்கு சுதந்திரம் வேணும். அது மட்டும் இருந்தால் மற்ற சுதந்திரத்தை உனக்கு யாரும் தர வேண்டிய அவசியமில்லை. அப்படி நான் அனுபவித்த சுதந்திரம் தான் 60 வயதில் நான் புரிஞ்சுகிட்ட சுதந்திரம், 30 வயதில் என் மகளுக்கு கிடைத்த சுதந்திரம், 18 வயதில் என் பேத்திக்கு கிடைக்க போகிற சுதந்திரம் நாளைக்கு அவள் மகள் பிறக்கும் போது கிடைத்துவிடும்.
கைல கிடைக்கிற காசை செலவுக்கு போக நாளைக்கு கொஞ்சம் னு சேர்த்து வைத்து வந்தோம்னா ஒரு நாள் ஏதாவது ஒன்னு நடந்து எதிர்பாராமல் வெறும் கையில் நிற்கிற நேரம் வரும் போது பெண்கள் சேர்த்து வைத்த சேமிப்பு அவர்களுக்கு கைகொடுக்கும். ஒரு மனிதன் சந்தோஷமா இருக்கிறதுக்கு காசு வேணுமானு எனக்கு தெரியாது. ஆனா மரியாதையாக இருப்பதற்கு காசு வேணும்’’.
தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல் களத்தோடு பொருந்தி நிற்கிறது இந்த திரைப்படம். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வந்த “உரிமைத் தொகை’’ திட்டத்தின் நியாயங்களைத்தான் தாய்க்கிழவி பேசுகிறார். அதே போல் திரைப்பட நாயகர் பிம்பங்களில் மூழ்கிக் கொண்டும், குலதெய்வ நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் தற்குறித்தனத்தையும் சேர்த்து அம்பலப்படுத்துகிறது இந்த தாய்க்கிழவி திரைப்படம்!
– இரா
– பெரியார் முழக்கம் இதழ் 26032026
