பார்ப்பனிய எதிர்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்தவர் ஜீவா ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (15)- கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்கள் தனது ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூலில் முன் வைத்திருக்கும் வேறொரு குற்றச்சாட்டைப் பற்றியும் பார்ப்போம்.

“1.8.1927இல் சென்னையில் நால்வர் சந்திப்பு நடந்தது. அது குறித்து அடுத்த வார குடிஅரசில் வெளியான “பிராமணிய சடங்கை விலக்கியவர்” பட்டியலில் ஈ.வெ.ரா., திரு.வி.க., டாக்டர் நாயுடு, ஷண்முகம் ஆகிய நால்வரின் பெயர்களும் முன் வரிசையில் இடம்பெற்றன. இவ்வாறு காங்கிரஸ்காரரோடு இணைந்து சமூக சீர்திருத்தத்திற்கு ஆதரவு தேடுவதாகக் காட்டி காங்கிரஸ் ஒழிப்பு வேலைக்கு மறைமுகமாகப் பணம் திரட்ட முனைந்தார் ஈ.வெ.ரா.”

என்னதான் உண்மை? 25.7.1926 குடிஅரசு இதழின் 9ஆம் பக்கத்தில் ‘சென்னையில் நால்வர்’ என்ற தலைப்பில் ஒரு குறிப்பு காணப்படுகிறது.அதில் “காங்கிரஸ் பார்ப்பனரல்லாத தலைவர்களான ஸ்ரீமான்கள் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், ஈ.வெ. ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடுகார், ஆர்கே சண்முகம் செட்டியார் ஆகிய நால்வரும் அரசியல் சமுதாய விஷயங்களில் தற்காலம் இருக்கும் நிலைமையில் இனி தாங்கள் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்தைப் பற்றி சென்னையில் இம்மாதம் 19,20-ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் கூடி ஆலோசித்தனர். முடிவில் அரசியல் விஷயம் சம்பந்தப்பட்ட வரையில் ஒருவர் அபிப்பிராயம் மற்றவரைக் கட்டுப்படுத்தாது என்றும், சமூக சமத்துவ விஷயத்தில் ஒரே விதமான அபிப்பிராயம் கொண்டவர்களாய் நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் என்கிற ஒரு விதமான தீர்மானத்திற்கு வந்தனர்” என்று காணப்படுகிறது.

அதே குடிஅரசு இதழில் “பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு ஓர் வேண்டுகோள்” என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தின் ஒரு பகுதியில், ‘பலர் சேர்ந்து குறிப்பிட்ட கட்டுப்பாடோ திட்டமோ ஏற்படுத்திக் கொள்ளாமல் தனித்தனியாக செய்து வருவதால், எதிர்பார்க்கும் பலனை அடைய கூடுமோவென சந்தேகிக்கக் கூடியதாய் இருக்கிறது. இவ்வார ஆரம்பத்தில் ஸ்ரீமான்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார், திரு.வி.கல்யாண சுந்தர முதலியார், ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், என். தண்டபாணி பிள்ளை முதலியவர்களோடு சென்னையில் கூடி இரண்டு நாள் யோசித்தும் பல காரணங்களால் தேர்தலுக்கு முன் ஒருவித முடிவுக்கு வர முடியாமல் போய்விட்டது ஆனபோதிலும் ,……. …. ……. ……… ……… அடுத்த வாரத்தில் ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்கிற ஆவல் கொண்டிருக்கிறோம். இவ்வறிக்கையில் பல கனவான்களின் கையொப்பங்களையும் சேர்த்து வெளியிட வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருக்கிறபடியால் தத்துவங்களை ஏற்றுக் கொள்ளும் கனவான்களை தங்கள் பெயரையும் இவ்வறிக்கையில் சேர்த்துக் கொள்வதற்கு முழு விலாசத்துடன் தங்கள் சம்மதத்தையும் உடனே எழுதி அனுப்பும்படி வேண்டிக் கொள்கிறோம்’ என ‘ஈ.வெ.ராமசாமி’ என்ற கையொப்பமிடப்பட்டு அறிக்கை வெளி வந்திருக்கிறது.

அடுத்து 1.8.1926 நாளிட்ட குடிஅரசு இதழில் 9ஆம் பக்கத்தில் ‘நமது தனிப்பெரும் விண்ணப்பம்’ என்ற தலைப்பில் “சென்ற குடி அரசு இதழில் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு விடுத்த வேண்டுகோளை அன்பர்கள் கண்ணுற்றிருக்கலாம். திரு. நாயக்கர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இற்றை வரை சுமார் 500 தமிழர்கள் குடிஅரசின் கொள்கையை ஏற்றுக் கொள்வதாகவும் திரு. நாயக்கர் உள்ளிட்ட பலர் வெளியிடப் போகும் அறிக்கையில் தங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்ளுமாறும் தங்கள் கையொப்பம் அளித்துள்ளார்கள் என்றும் காணப்படுகிறது

8.8.1926 குடிஅரசு இதழின் 11 ஆம் பக்கத்தில் ‘பிராமணியத்தை ஒழித்தவர்கள்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி குறிப்பு காணப்படுகிறது.

அதில், “சென்னையில் கொஞ்ச நாளைக்கு முன்பு ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடுகார், ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், என். தண்டபாணி பிள்ளை, ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலியவர்கள் கூடிப் பேசியதாகவும், அதன் முடிவு என்ன என்பதைப் பற்றியும் முந்திய இதழில் எழுதி இருந்தது வாசகர்களுக்கு நினைவு இருக்கலாம்”.

“அதாவது அரசியல் விஷயத்தைப் பற்றி அவரவர்கள் அபிப்பிராயப்படி நடந்து கொள்வது என்றும், சமூக சமத்துவ விஷயங்களில் எல்லோரும் ஒரே அபிப்பிரமாய் இருக்கிறோம் என்றும், இது விஷயத்தில் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது என்றும் எழுதியிருந்தோம். …… ….. …. … … ,,…. ….. … ……… …. …………………. ………….. …………… …………… ………………… …………… ……………. பார்ப்பனர்களைக் கொண்டு செய்யப்படும் சடங்குகளை நிறுத்துவதற்கு முதல் முதலாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்வதில் தங்கள் தங்கள் பெற்றோர்களையும், மற்றையோர்களையும் மோட்சத்திற்கு அனுப்புவது என்றும் அவர்கள் சுகமாய் இருப்பதற்கென்றும் பார்ப்பனர்களைக் கொண்டு திதி, திவசம் என்றோ, சிரார்த்தம் என்றோ சொல்லும்படியான பல வைதிக சடங்குகள் செய்வதில் ஒன்றும் பலனில்லை என்றும், அம்மாதிரி சடங்குகள் பார்ப்பனர்கள் பிழைப்புக்கு ஏற்படுத்திக் கொண்டதல்லாமல் வேறில்லை என்பதை பார்ப்பனரல்லாதாருக்குத் தெரிவிப்பதற்காக ஒரு பிரச்சாரம் ஆரம்பிப்பது என்றும், அதில் அப்போதிலிருந்து பேசிய ஐவரும் மற்றும் அதற்கு சம்மதித்தவர்கள் பெயரையும் வெளியிட்டு வருவது என்றும் முடிவு செய்து அதன்படியே சென்ற வாரத் ‘தமிழ்நாடு’ பத்திரிகையும் ( திரு. வரதராஜுலு அவர்களின் பத்திரிகை) ‘பிராமணியத்தை ஒழித்தவர்கள்’ என்ற தலைப்பின் கீழ் பல கனவான்களின் பெயர் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது” …. என்ற குறிப்பு காணப்படுகிறது. அதன் இறுதிப் பகுதியில் மேற்கூறிய பிரகாரம் பிராமணியத்தை விரட்டியவர்களான இன்று மான்கள்

1.டாக்டர் வரதராஜீலு நாயுடு, அசோக விலாஸ், சேலம்.

2. திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், நவசக்தி ஆசிரியர், சென்னை

3. ஈ.வெ. இராமசாமி நாயக்கர், குடிஅரசு ஆசிரியர், ஈரோடு.

4. ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், ஹவார்டன், கோயமுத்தூர் …… என்பதன் தொடர்ச்சியாக ஜே.எஸ்.கண்ணப்பர், என்.தண்டபாணி பிள்ளை. எஸ்.ராமநாதன், மணவை ரெ. திருமலைசாமி போன்ற பலரின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து குடிஅரசு இதழ்களில் பிராமண சடங்கை விலக்கியவர்கள் என்ற பெயரில் பட்டியல் வந்த வண்ணமாக இருந்தது. இந்த முன்னெடுப்பைத்தான் ‘மறைமுகமாக பணம் திரட்ட முனைந்தார் ஈ.வெ.ரா’ என்கிறார் ஜீவா.

பெரியார்மீது மற்றொரு குற்றச்சாட்டு.

“ஈ.வெ.ரா. தன்னிச்சையாக ஒரு திட்டத்தைத் தயாரித்து, அதை ராஜாஜிக்கும் பொப்பிலி அரசருக்கும் (கோவையில் நடந்த தமிழ் மாகாண காங்கிரஸ் மகாநாட்டுக்கும், சென்னையில் நடந்த ஜஸ்டிஸ் மாகாண மகாநாட்டுக்கும்) அனுப்பினார். அந்த திட்டத்தை ஒத்துக்கொள்கிறவர் கட்சியைத் தேர்தலில் ஆதரிப்பதாகவும் சொன்னார்.

ஜஸ்டிஸ் கட்சியினர் ஈ.வெ.ரா.வின் திட்டத்தை (ஈரோட்டுத் திட்டத்தை அல்ல) ஒப்புக்கொள்வதாக உறுதிகூறி சென்னை மகாநாட்டில் இதற்காக ஒரு கமிட்டியையும் தேர்ந்தெடுத்தனர். ஈ.வெ.ரா.வும் பிரிந்திருந்த ஜஸ்டிஸ் கட்சியை மனதாரத் தழுவினார்” என்று எழுதிவிட்டு, “அடுத்துவரும் தேர்தலில் நல்ல அறுவடை செய்துவிடலாமென்று மனப்பால் குடித்து ஜஸ்டிஸ் கட்சிக்கு சமதர்ம மெருகு கொடுக்க என்னென்னவோ செய்துகொண்டிருந்தார் ஈ.வெ.ரா” என்றும் எழுதினார் ஜீவா. இதனை குறித்து விளங்கிக் கொள்ள ‘பதின்மூன்றாவது ஆண்டு’ என்ற தலைப்பிட்ட 15.8.1937ஆம் நாளிட்ட குடி அரசு இதழின் தலையங்கத்தைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

“நிற்க, ஜஸ்டிஸ் கட்சிக்கு “குடி அரசு” ஆதரவளித்ததால் “குடி அரசு”ம் ராமசாமியும் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்க்கப்பட்டதாலேயே ஜஸ்டிஸ் கட்சிக்கு சர்க்கார் எதிரியானார்கள் என்று ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் பலர் இன்றும் சொல்லுகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து தோழர் ராமசாமியை விரட்டவும் “குடி அர”சை ஒழிக்கவும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் சிலர் எவ்வளவோ பாடு பட்டார்கள்.

ஒரு உதாரணம் காட்டுகிறோம். அதாவது தோழர் ஈ.வெ.ரா. தனது திட்டங்கள் சிலவற்றை ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் வலியுறுத்தப் போவதாக “குடி அரசில்” வெளிப்படுத்தியவுடன் சென்னையில் கடைசியாக நடந்த ஜஸ்டிஸ் கட்சி மாகாண மகாநாட்டுக்கு ஈ.வெ.ராவுக்கு பிரதிநிதி டிக்கட் கொடுக்க மறுத்து விட்டார்கள். தோழர்கள் சி.டி. நாயகம், டி.ஏ.வி.நாதன் முதலியவர்கள் பாடுபட்டும் வரவேற்பு கமிட்டியார் மறுத்து விட்டார்கள். கடைசியாக செட்டிநாட்டு குமார ராஜா அவர்கள் தகவலுக்கு இவ்விஷயம் கொண்டு போகப்பட்டு அவரது சிபார்சின் மீது மகாநாட்டு பிரதிநிதி டிக்கட் கிடைத்தது என்றால் ஜஸ்டிஸ் கட்சியால் ராமசாமியோ “குடி அரசோ” எந்த விதத்தில் தனது கொள்கையை விட்டுக் கொடுத்து விட்டதாகச் சொல்ல முடியும்? அன்றியும் அக்கட்சியை ஆதரித்ததால் இன்ன சுயநலம் பெற்று விட்டது என்று தான் சொல்ல முடியுமா?

உண்மையை சொல்ல வேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் தோழர் பொப்பிலிராஜா அவர்கள் சமதர்மக் கொள்கையை கட்சியில் புகுத்தி அவரது தலைமையில் பல சட்டங்கள் செய்திருக்கிறார்கள்.அவற்றை (அந்த காலகட்டத்தில் சந்தா உறுப்பினராக தோழர் ஜீவா இருந்த) காங்கிரஸ் எதிர்த்து வந்திருப்பதோடு இப்போதும் அழிக்கப் புறப்பட்டு விட்டது. ஆகவே இந்த இரண்டு காரியங்களால் “குடி அரசு” எவ்விதத்திலும் கொள்கை மாற்றம் அடைந்து விட்டதா என்பதை பொதுமக்கள் யோசித்துப் பார்க்கட்டும்”.

“அந்த ஜஸ்டிஸ் கட்சியோடு பெரியார் உறவாடுகிறார்” என்று குற்றம் சாட்டி வெளியேறிய ஜீவாவை சுட்டி எழுதப்பட்டதுதான் அந்தத் தலையங்கம்.
தொடரும்…
காங்கிரஸ் கட்சியின் பார்ப்பனர் அல்லாத தலைவர்களை கொண்டு பார்ப்பன சடங்குகளை நீக்கும் இயக்கத்தை தொடங்கினார் பெரியார். இதற்கு “பணம் திரட்டும்” இயக்கம் என்று மலிவான உள்நோக்கம் கற்பித்தவர் ஜீவா.

பெரியார் முழக்கம் இதழ் 07052026

You may also like...