சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (6) ‘உ.வே.சா.’வின் உத்தமதானபுரம் உருவான கதை

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (8.3.2018 இதழ் தொடர்ச்சி)

திருப்பள்ளியெழுச்சிக்கு எதிராக வடமொழியில் சுப்ரபாதம் ஏன் வந்தது என்பதைப் பார்த்தோம். வேத மதம் சமஸ்கிருத மொழியை மட்டுமே ஏற்கிறது. தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழிகளை வேத புரோகித மதம் ஏன் மறுக்கிறது என்பதற்கு வேதமே விளக்கம் தருகிறது.

“தஸ் மாது ப்பிரா மணனே

நம் பேச்சித வை

நம அபபாஷித வை”

இந்த சுக்ல யஜுர் வேதம் இதன் கருத்து என்ன? “தேவ-அசுரன் போராட்டத்தில் திராவிட-ஆரியருக்கான போரில் சமஸ்கிருதம் பேசிய தேவர்கள் வெற்றி பெற்றார்கள். சமஸ்கிருதம் பேசாத மிலேச்சர்கள் தோற்றார்கள். எனவே சமஸ்கிருதம் தவிர ஏனைய மொழிகள் கெட்ட மொழி; மிலேச்ச பாஷை” என்பதே இந்த சுலோகத்தின் அர்த்தம்.

தமிழ் மன்னர்கள் கதைக்கு வருவோம்.

இராஜராஜன், தேவாரப் பாடல்களை மீட்டெடுத் தான் என்று வரலாற்றுக் குறிப்புகள் இருந்தாலும், கோயிலுக்குள் வழிபாட்டு மொழியாக ‘சமஸ்கிருதத்தையே’ முன்னிலைப்படுத்தி பார்ப்பன அடிமைகளாகவே தமிழ் மன்னர்கள் செயல்பட் டிருக்கிறார்கள். அவர்கள் ஆட்சியில் வடநாட்டுப் பார்ப்பனர்கள் இறக்குமதி செய்யப்பட்டார்கள்.

வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை கூறுகிறார்:

“வடவரின் இலக்கியமும், சமய கருத்து களும், பண்பாடுகளும் தமிழ்நாட்டில் பெருக்கெடுத்துப் பாயவே அவற்றை வளர்ப்பதற்கும், மேற்கொண்டு பல புதுமைகளைப் பெருக்கிக் கொள்வதற்கும், மன்னர்கள் ஆயிரக்கணக்கில் அயல்நாட்டு பிராமணரை இறக்குமதி செய்து, கோயில் களிலும், மடங்களிலும், கல்வி நிறுவனங் களிலும், அவர்களை அர்ச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயணம் செய்வோராகவும் ஆங்காங்கு அமர்த்தினர். வேத நெறி தழைத்தோங்குவதற்காக மன்னரும் மக்களும், புதிதாகக் குடிபெயர்ந்த பிராமணருக்குப் பொன்னையும் பொருளையும் குடியுரிமைகளையும் வாரி வழங்கினர். பிராமணருக்குத் தனி நிலங்களும் முழு கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரமதேயம் என பலப் பெயரில் வழங்கின”

– என்கிறார், தலைசிறந்த ஆய்வாளர் கே.கே.பிள்ளை.  (நூல்: தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்)

பார்ப்பனர்கள் தமிழ்அரசர்களைப் பயன்படுத்தி அதிகாரத்தை எப்படி சூழ்ச்சியாக தக்க வைத்துக் கொண்டார்கள் என்பதையும் கே.கே.பிள்ளை சுட்டிக் காட்டுகிறார். தமிழையும் தமிழ் மன்னர் களையும் பார்ப்பனியம் அடிமைப்படுத்தியது என்று பெரியார் கூறினால், அவரை தமிழ் விரோதி, தமிழ் மன்னர் பெருமைகளை சீர்குலைக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறவர்கள், மிகுந்த இறை நம்பிக்கையுள்ள கே.கே.பிள்ளை போன்ற ஆய்வாளர்களே சுட்டிக்காட்டுவதற்கு, என்ன பதிலை கூறுவார்கள் என்று கேட்கிறோம்.

“அரசாங்க அதிகாரமும், சமயச் செல்வாக்கும் குவியப் பெற்றிருக்கும் கைகள் என்றுமே ஓய்ந்திருப்பதில்லை. இது பன்னாட்டு வரலாறுகள் காட்டும் ஒரு பேருண்மையாகும். அந்த அதிகாரத்தையும் செல்வாக்கையும், மென்மேலும் பெருக்கிக் கொள்ளவும், பெருகினவற்றை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளவும், அக்கைகள் பரபரத்துக் கொண் டிருப்பது இயல்பு. எனவே உழைப்பின்றியே தானமாகப் பெற்ற நிலங்களும், ஊர்களும், அரசாங்கச் செல்வாக்கில், வேள்வி வளர்க்கும் தனி உரிமையும், தம்மிடம் குவிக்கப் பெற்ற பிராமணர்கள் அவையும் எக்காலமும் தம்மிடத்தே நிலைத்து நிற்கவும், மென்மேலும் வளர்ந்து வரவும், தம் குலத்தின் தலைமைப் பதவி நீடித்து வரவும், பல முயற்சிகளை மேற் கொள்ளலானார்கள். மன்னரின் முழு ஆதரவையும் அவர்கள் பெற்றனர். வேந்தர் களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சூட்சுமங்களையும், கோத்திரங்களையும், சூத்திரங்களையும் கற்பித்துக் கொடுத்தனர்.  மன்னர்களும் சாதி ஒழுக்கத்தை நிலை நாட்டுவதே தம் சீரிய கடமையாகும் எனக் கூறும் மெய்க் கீர்த்திகளைப் புனைந்து கொண்டனர். ஆரிய வழக்க வழக்கத்தைப் பாராட்டிக் கூறும் சாஸ்திரங்களும் புராணங்களும் எழுந்தன. அவற்றை பிராமணர் பயில்வதற்காக அரசர்கள் பல கல்வி நிறுவனங்களை அமைத்துக் கொடுத்தனர்.”  (நூல்: தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்)

அரசர்களுக்கு வம்சங்களையும் கோத்திரங்களை யும் கற்பித்துக் கொடுத்து பார்ப்பன தர்மத்தின் அடிப்படையில் அவரவர் குல-ஜாதி ஒழுக்கத்தைப் பேண வேண்டும். அதைக் காப்பதே அரசு தர்மம் என்று மனனர்களின் மூளையில் ஏற்றியவர்கள் பார்ப்பனர்கள்.

கே.கே. பிள்ளை கூறும் மற்றொரு முக்கிய கருத்தையும் சுட்டிக் காட்ட வேண்டும்.

“பிராமணர் தமிழகம் முழுதும் பரவி குடியமர்ந்தார்கள். உளநிறைவுடன் நல் வாழ்க்கையில் நின்று வேதம் ஓதி, இறைப்பணி புரிந்து அறம் ஓம்பி, மக்களிடையே கல்வி அறிவையும் ஆன்மிக விழிப்பையும் தோற்றுவிப்பதற்காகவே மன்னரும் மக்களும் அவர்கட்குத் துணை நின்றார்கள். ஆனால், விளைவோ வேறு விதமாயிற்று. தமிழ் மன்னரும், தமிழ் மக்களும் வரையாது (குறையாது) வழங்கிய வாழ்க்கை நலன்களைப் பெற்ற பிராமணர்கள் தனித்து வாழ்ந்து, மக்களிடையே குல வேறு பாடுகளைப் பெருக்கி, தமிழர் அனைவரையுமே சூத்திரர் என்ற இழி குலத்தினராகக் கருதி, கோயில்களிலும், மடங்களிலும், ஏனைய பொது அறச் சாலைகளிலும் ஒதுக்கி வைத்து விட்டார்கள். ஒரு கோயிலைக் கட்டி குடமுழுக்குச் செய்விக்கும் தமிழன் ஒருவன் தான் கட்டிய கோயிலிலேயே தொலைவில் ஒதுங்கி நிற்கவும், ‘பிராமணர்களின்’ பின்னின்று கோயில் ‘பிரசாதங்களை’ப் பெறவும் ஒப்புக் கொண்டு விட்டான். கோயில் கருவறையில் வடமொழியின் ஆரவார ஓசை ஓங்கவும், தமிழ் ஒலி மறையவும் வழக்காறுகள் வகுக்கப்பட்டன. தேவார ஆசிரியர்கள் காலத்தில் தமிழர் கருவறைக்குள் செல்லும் உரிமை பெற்றிருந்தும், சோழர் பாண்டியன் காலத்தில் அவ்வுரிமையை அவர்கள் இழந்து விட்டார்கள்.”  (நூல்: தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்)

கருவறைக்குள்ளேயிருந்து தமிழன் எப்படி வெளியேற்றப்பட்டான் என்பதை – இப்படி படம் பிடித்துக் காட்டுகிறார், கே.கே. பிள்ளை. இன்று வரை தமிழ்நாட்டில் தமிழன் கருவறைக்கு வெளியே தீண்டப்படாதவனாகவேத் தானே நிற்கிறான்? இந்தப் பார்பபனியத் தீண்டாமையை  அப்படியே விமர்சிக்காமல் பார்ப்பனிய ஜாதிப் பாகுபாடுகளை எதிர்த்து அதற்கான இயக்கங்களை நடத்தாமல் தமிழர் இன ஓர்மை எப்படி சாத்தியமாகிட முடியும்?

பார்ப்பனர்கள் எப்படி சூழ்ச்சிகரமாக நிலங்களைக் கைப்பற்றினார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சங்ககால இலக்கியங்களை தேடிக் கண்டுபிடித்து அதை பதிப்பித்தவரான ‘தமிழ் தாத்தா’ என்று பார்ப்பனர்கள் பெருமை பேசும் உ.வே.சாமிநாத அய்யர், தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். அதில் சொந்த ஊரான உத்தமதானபுரம் எப்படி தங்கள் இனத்துக்குக் கிடைத்தது என்ற வரலாற்றைப் பதிவு செய்திருக் கிறார். அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

“சற்றேறக்குறைய இருநூறு வருஷங் களுக்கு முன்பு தஞ்சாவூர் ஸமஸ்தானத்தை ஆண்டு வந்த அரசர் ஒருவர் தம்முடைய பரிவாரங்களுடன் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒரு முறை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார். அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளையெல்லாம் கண்டுகளித்தும், தலங்களைத் தரிசித்துக் கொண்டும் சென்றார். இடையில் தஞ்சைக்குக் கிழக்கே பதினைந்து மைல் தூரத்தில் உள்ள பாபநாசத்திற்கு அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் அங்கே போஜனம் முடித்துக் கொண்ட பிறகு தாம்பூலம் (வெற்றிலைப் பாக்குப் போடுதல்) போட்டுக் கொண்டு சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்திருந்தார். தம்முடன் வந்தவர்களோடு பேசிக் கொண்டு பொழுதுபோக்குகையில் பேச்சுக்கிடையே அன்று ஏகாதசியென்று தெரிய வந்தது. அரசர் ஏகாதசியன்று ஒருவேளை மாத்திரம் உணவு கொள்ளும் விரதம் உடையவர். விரத தினத்தன்று தாம்பூலம் தரித்துக் கொள்ளும் வழக்கமும் இல்லை. அப்படியிருக்க, அவர்  ஏகாதசியென்று தெரியாமல் அன்று தாம்பூலம் தரித்துக் கொண்டார். எதிர்பாராத படி, விரதத்திற்கு பங்கம் நேர்ந்ததைப் பற்றி வருந்திய அரசர், அதற்கு என்ன பரிகாரம் செய்யலாமென்று சில பெரியோர்களைக் கேட்டார். அப்பெரியோர்கள், “ஓர் அக்கிரகாரப் பிரதிஷ்டை செய்து வீடுகள் கட்டி வேத வித்துக்களாகிய அந்தணர்களுக்கு அவ்வீடுகளோடு பூமியையும் தானம் செய்தால் இந்தத் தோஷம் நீங்கும்” என்றார்கள்.

“இதுதானா பிரதமாதம்? அப்படியே செய்து விடுவோம். இதே இடத்தில் பிரதிஷ்டை செய்வோம்” என்று அரசர் மனமுவந்து கூறி, உடனே அங்கே ஓர் அக்கிரகாரத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். அதில் 48 வீடுகளைக் கட்டி, வேதத் தியானம் செய்த 48 பிராமணர்களை அருகிலும் தூரத்திலும் உள்ள ஊர்களிலிருந்து வருவித்து, வீடுகளையும் நிலத்தையும் தானம் செய்தார். அந்த உத்தமமான தானப் பொருளாக அமைந்தமையால், அவ்வூர் ‘உத்தமதானபுரம்’ என்னும் பெயரால் வழங்கலாயிற்று. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் உத்தமதான புரத்தில் வைதீக ஒழுக்கம் பிறழாமல் வாழ்ந்து வந்தார்கள். இந்த உத்தமதானபுரம் இன்னும் தன் பெயரை இழந்துவிடாமல் தஞ்சாவூர் ஜில்லாவில் பாபநாசம் தாலுகாவில் ஒரு கிராமமாக இருந்து வருகின்றது.”

(உ.வே.சாமிநாதையர், ‘என் சரித்திரம்’ சுருக்கம், பக்.1, 2)

‘ஏகாதசி’ விரத நாளில் ஒரு மன்னர், ‘வெற்றிலைப் பாக்கு’ போட்டு விட்டார் என்ற ‘சாஸ்திர மீறலுக்காக’ பார்ப்பனர்கள் பரிகாரமாக 48 வீடுகளோடு ஒரு அக்கிரகாரத்தையே உருவாக்கித் தருமாறு கேட்க அதை முட்டாள் தமிழ் மன்னர்களும் ஏற்று செயல்படுத்தியிருக்கிறார்கள். இப்படித்தான் தமிழ் மன்னர்களை ஏமாற்றி, அவர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள் பார்ப்பனர்கள். இன்றைக்கும் அதே நிலைதானே நீடிக்கிறது? பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று எச். ராஜா பெயரில் பதிவிட்ட அவரது ‘அட்மினை’ கண்டிக்கறேன் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஒரு ‘சூத்திரர்’, எச்.ராசாவிடம் தொடை நடுங்கிப் போய் அறிக்கை விடுகிறார் என்றால், இவர்களும் ‘ஏகாதசியில் வெற்றிலைப் பாக்கு போட்ட’ மன்னர்களின் தொண்டரடிப் பொடிகளாகவே இருக்கிறார்கள் என்பதைத்தானே உணர்த்திக் கொண்டிருக்கிறது?

(தொடரும்)

பெரியார் முழக்கம் 22032018 இதழ்

You may also like...