கை விலங்கிலிருந்து கருப்பு அங்கி வரை!
கை விலங்கோடு குற்றம் சாட்டப்பட்டவராக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பேரறிவாளன், அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராக படியேறுகிறார். ராசீவ் கொலையில் குற்றவாளியாக அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டு 31 ஆண்டுகள் சிறைவாசத்தை ஏற்றவர் பேரறிவாளன். நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவராக நிறுத்தப்பட்டார். பூந்தமல்லியிலும் வேலூரிலும் பிறகு சென்னையிலும் அவர் சிறைவாசம் தொடர்ந்தது.
சிறைக்குள் இருந்து கொண்டே மன உறுதியோடு சட்டப் போராட்டம் நடத்தினார். மரண தண்டனை அறிவிக்கப்பட்டது; மரண தண்டனைக்கு எதிராக மக்கள் இயக்கம் தமிழ்நாட்டில் நடந்தது. எழுவர் விடுதலைக்கான தொடர் பரப்புரைகள், கருத்தரங்குகள், மாநாடுகள், போராட்டங்கள் தமிழ்நாடு முழுதும் தீவிரமாக நடந்தன. மரண தண்டனையை எதிர்த்து தனக்கு மரண தண்டனையைத் தந்து கொண்டார் செங்கொடி என்ற வீரப்பெண்.
மரண தண்டனைக்கு எதிராக உலகில் தமிழ்நாட்டில் நடந்தது போல் வேறு எந்தப் பகுதியிலும் இயக்கங்கள் நடந்த வரலாறு இல்லை. இந்த மக்கள் இயக்கம் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளையும், புலன் விசாரணை செய்த தலைமை இயக்குனரையும், வாக்குமூலம் வாங்கிய புலனாய்வுத்துறை அதிகாரியையும் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் கட்டாயத்தை உருவாக்கியது. சட்டங்களின் சக்தியை விட மக்கள் சக்தி வலிமையானது என்பதை தமிழ்நாடு நிரூபித்தது.
ஒவ்வொரு கட்டத்திலும் தன் மீதான வழக்குகள் அதிலிருந்து விடுபடுவதற்கு மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை சட்டம் படித்திராத பேரறிவாளன் சிறைக்குள் இருந்து திட்டமிட்டு காய் நகர்த்தினார். அவருக்கான வழக்கறிஞர் படை தன்னலமற்ற துடிப்புடன் வெளியே இயங்கியது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் இதில் முனைப்பு காட்டியது.
உச்சநீதிமன்றத்தில் 7பேர் விடுதலைக்கு பிரபலமான வழக்கறிஞர்களை கொண்டு வாதாடியது. ஒரு கட்டத்தில் நீதிபதிகளே நியாயங்களை உணர்ந்தனர். நீதிபதிக்கு உரிய சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி விடுதலையை அறிவித்தனர்.
ஒரு வழக்கறிஞராக இல்லாமல் சட்ட நுணுக்கங்களை சுயமாக படித்து தன்னை வளர்த்துக் கொண்ட பேரறிவாளன், விடுதலை ஆன பிறகு சட்டம் படிக்கத் தொடங்கினார். சட்டப் படிப்பிலும் சிறந்த மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றார். மனித உரிமைக்காக வாதாட வழக்கறிஞராக இப்போது தன்னைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார். தனக்கு கிடைத்த சட்ட நீதி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற அவரது உள்ளத்தில் பதிந்து கிடந்த இலட்சியத்தில் அவர் வென்று காட்டியிருக்கிறார். இந்திய நீதித்துறை வரலாற்றில் தூக்குத் தண்டனைக்கு உள்ளான ஒரு இளைஞர், அதிலிருந்து விடுதலையாகி வழக்கறிஞராக வந்திருக்கும் பெருமை இந்த பெரியார் மண்ணுக்கு கிடைத்திருக்கிறது. வாழ்த்துகள் அறிவு! – இரா.
பெரியார் முழக்கம் இதழ் 30042026
