டெல்லிக்கு எதிரான போராட்டங்களின் முதல் வெற்றி!
ஒன்றிய அரசு அவசர அவசரமாகக் கொண்டு வந்த மூன்று மசோதாக்களும் தோல்வி அடைந்து விட்டன. “டெல்லி வீழ்ந்தது! தமிழ்நாடு வென்றது!” என்று முதல்வர் மிகச் சரியாகப் பதிவிட்டு இருக்கிறார்.
பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் இருக்காது என்று ஒன்றிய பாஜக ஆட்சி சூழ்ச்சியாக திட்டமிட்டது. ஆனால் தொகுதி மறு சீரமைப்பு என்ற ஆபத்தையும் இணைத்து இந்த மசோதா கொண்டு வரப்படுவதன் நோக்கம்.தென்னகத்தின் உரிமைகளைப் பறிப்பது தான் என்று முதன் முதலாக எதிர்ப்புக் குரல் கொடுத்தவர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். தொடர்ந்து தெலுங்கானா,கர்நாடகா, கேரள முதல்வர்களும் காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் தமிழ்நாடு முதல்வரின் எதிர்ப்புக் குரலோடு இணைந்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி மட்டும் பச்சையாக தனது துரோகத்தை வெளிப்படுத்தினார். இன்றைய பரப்புரையில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஸ்டாலின் எதிர்க்கிறார் என்று மோடிக்கு வெட்கமின்றி ஜால்ரா அடித்தார். தொகுதி மறுவரையறை என்ற ஆபத்து இதோடு இணைந்து நிற்கிறது என்பதை எடப்பாடி மக்களிடம் மறைக்க முயன்றார்.
தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பேசி வந்த அமித்ஷாவே கடைசி நேரத்தில் தமிழ்நாட்டிற்கு இதில் பாதிப்பு இருக்கிறது என்பதை நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அமித் ஷா ஒப்புக் கொண்டாலும் முரட்டு அடிமை எடப்பாடி ஒப்புக்கொள்ள மாட்டார். இந்த முக்கிய பிரச்சனையில் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் மவுனம் சாதித்தாலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மோடியிடமும் அமித்ஷாவிடமும் இந்த மசோதா குறித்து அவசரமாக தனது சந்தேகங்களை எழுப்பி விளக்கம் கேட்டிருக்கிறார்.
ஆனால் எடப்பாடி இந்த மசோதாவில் என்ன இருக்கிறது என்பதை படித்தாரா? இதைப் படித்து ஆய்வு செய்யக்கூடிய குழு ஏதாவது அந்த கட்சியில் இருக்கிறதா? அப்படி அறிகுறிகள் ஏதும் இல்லை! கடைசி நேரத்தில் அமித் ஷா ஒரு மணி நேர அவகாசம் கேட்டார்.ஒட்டுமொத்தமாக 50 விழுக்காடு இடங்களை அதிகரிக்கும் பிரிவை சேர்த்து திருத்தங்களை செய்து புதிய மசோதாவை தாக்கல் செய்ய தயார் என்று சொல்லக்கூடிய நிலை உருவானது. 50 விழுக்காடு இடங்களை ஒட்டுமொத்தமாக அதிகரித்தாலும் தென்னகம் பாதிக்கப்படும் என்ற விழிப்புணர்வை தமிழ்நாடு உருவாக்கி இருந்ததால் இந்த பம்மாத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வாக்காளர்கள் பாஜகவுக்கு பூஜ்யம் மதிப்பெண் கொடுத்ததற்கு கிடைத்த வெற்றி இது.பாஜகவுக்கு மெஜாரிட்டி பலத்தை இழக்க வைத்தது தமிழ்நாடு. அதே பூஜ்ஜிய மதிப்பெண்ணை இந்த தேர்தலிலும் பாஜகவுக்கு தந்து தமிழ்நாட்டின் உரிமையை வாக்காளர்கள் நிச்சயமாக நிலை நிறுத்துவார்கள்.
தமிழ்நாட்டில் மசோதா எரிந்தது. நாடாளுமன்றத்தில் மசோதா வீழ்ந்தது! டெல்லிக்கு எதிரான போராட்டத்தின் முதல் வெற்றி!”
பெரியார் முழக்கம் இதழ் 23042026
