பாராட்டத்தக்க முயற்சி குழந்தைகளுக்கான காமிக்ஸ் நூல்கள்!
விஜயபாஸ்கர் அறக்கட்டளை மற்றும் CISS அறக்கட்டளை இணைந்து பெரியார் வரலாற்றை குழந்தைகளுக்கான பட கதையாக வெளியிட்டுள்ளதை பாராட்டி வரவேற்க வேண்டும். ” ஏன் என்று கேட்க சொன்னவர் பெரியார்” ஒரு குருகுல கதை, தமிழ்நாடு தந்த அண்ணா என்ற தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளனர். முனைவர் நா.இல நரேன்குமார் கருத்தாக்கத்தில், முனைவர் கோவி. கனக விநாயகம் தமிழாக்கம் செய்துள்ளார். படம் மற்றும் நூலகத்தை நா.இல நரேன்குமார் ஏ.அய் உதவியுடன் மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளார்.
32 பக்கங்களில் வெளியிட்ட ஒவ்வொரு நூல்களின் விலை ரூ. 50 மட்டுமே. குழந்தைகளிடம் கருத்துக்களை பதிய வைக்கும் இந்த சிறிய முயற்சிகளை பாராட்ட வேண்டும். தோழர்கள் இந்த நூல்களை அன்பளிப்பாகவும் பரப்புவதற்கு பயன்படுத்தி இத்தகைய முயற்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
விஜயபாஸ்கர் அறக்கட்டளை மற்றும் CISS பவுண்டேசன் இணைந்து நடத்திய சிறார்களுக்கான படக்கதைப் புத்தகம் வெளியீட்டு விழா ஏப்ரல்-12, 2026 அன்று மாலை கலப்பை பதிப்பகம் கே.கே நகரில் நடைபெற்றது. தோழர் சு. விஜயபாஸ்கர் அவர்களின் முதலாமாண்டு நினைவுநாளை முன்னிட்டு நூல்கள் வெளியிடப்பட்டன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. குழந்தைகள் பயன்பெறும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த புத்தகம், குழந்தைகளின் கைகளால் வெளியிடப்பட்டது என்பது நிகழ்வின் சிறப்பாகும். வாலாசா வல்லவன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விஜயபாஸ்கர் மறைந்த பின்னர், அவரது உடல் மட்டுமே இல்லாமல் போனது; ஆனால் அவர் எடுத்துக் கொண்ட கொள்கைகளும், தொடங்கிய பணிகளும் இன்னும் தொடர வேண்டியவையாக உள்ளன. அந்த பணிகளை முன்னெடுத்து செல்வதே அவரை நம்மிடையே உயிருடன் வைத்திருப்பதாகும் என கூறி அந்தப் பணிகளில் அவரது இணையர் காயத்ரி மற்றும் போராசிரியர் கனகவிநாயகம் ஆகியோர் பங்காற்றினார். இந்த புத்தகம் வெளிவர உதவியும், உறுதுணையாக இருந்தார் பத்திரிக்கையாளர் நீரை. மகேந்திரன், நிகழ்வை ஒருங்கிணைத்த PeriyarBooks.Com மணிகண்டன், பிரபாகரன் அழகர்சாமி ஆகியோர் பங்காற்றினர். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர்.
தொடர்புக்கு
பெரியார் புக்ஸ் -8428455455
பெரியார் முழக்கம் இதழ் 16042026
