வாசகர் கடிதம்

கடந்த 12.03.2026 வெளிவந்த இதழில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்த 1971 தேர்தல் வரலாற்றைப் பற்றிய கட்டுரையை வாசித்தேன். இன்றைய தலைமுறைக்கு பெரியாரை எடுத்துச் செல்லும் தேவைக்கேற்ப எழுதப்பட்ட அருமையான கட்டுரை அது. சமகாலத்தில் பெரியாரை மலினப்படுத்தும் நோக்கத்தோடு இங்கு பல்வேறு சங் பரிவார்களும், அவர்களின் அடிவறுடிகளும் முழுமூச்சாக செயல்படுவார்களெனில் அவர் வாழ்ந்த காலத்தில் எப்படி இருந்திருக்குமென்பதை புரிந்து கொள்ள உதவியது.

கொள்கைத் தெளிவற்றும், கொள்கைப்பிடிப்பின்றி அலையாடிக்கொண்டிருக்கும் பொம்மை அரசியல் தலைவர்களும், அவதூறை மட்டும் அள்ளித்தெளிக்கும் பகுத்தறிவு குன்றியோரும் பெரியாரின் நிகரற்ற கொள்கைப் பிடிப்பிற்கும், இயக்கத்தை கட்டி எழுப்பிய அவரின் இயக்க அரசியலிற்கும் வெகு தூரத்தில் நிற்பதை பிரித்துப் பார்க்க உதவுகிறது. இனியும் இது போன்ற கட்டுரைகள், பெரியாரின் களமாடல்களென சமகாலத்தில் பொருந்திப்போகும் செயல்கள் அனைத்தையும் எழுத வேண்டுகோள் விடுக்கிறேன். இளைய தலைமுறையினர் திராவிட அரசியலைக் கற்கும் ஆர்வத்தை இன்னும் தூண்டுகிறது.
-யதிந்தர், மதுரை.
பெரியார் முழக்கம் இதழ் 16042026

You may also like...