மதவெறிக் காடாகிறதா ஒடிசா?
ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் உள்ள பர்ஜாங் கிராமத்தில், ஜனவரி 4-ஆம் தேதி கிறிஸ்தவ பாதிரியார் பிபின் பிஹாரி நாயக்கை தாக்கி, அவர் வாயில் மாட்டுச் சாணத்தை திணித்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்லச்சொல்லி வற்புறுத்தியுள்ளது பஜ்ரங் தள் அமைப்பு. அவரை வலுக்கட்டாயமாக திலகம் அணியச் செய்ததுடன், செருப்பு மாலையிட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்துத்துவா கும்பலால் பாதிரியார் கொடூரமாக தாக்கப்பட்டு, பொதுவெளியில் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு 15 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், இதுவரை அந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சி ஒடிசாவில் ஆட்சி அமைத்த நாள்முதல் இத்தகைய சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் மாடுகளை ஏற்றிச் சென்றதற்காக ஒரு முஸ்லிம் நபர் பசு பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
மயூர்ஞ்ச் மாவட்டத்தில் மற்றொரு முஸ்லிம் இளைஞர் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மல்கங்கிரி மாவட்டம் கோட்டமத்தேரு கிராமத்தில் தேவாலயத்திலிருந்து திரும்பிய கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதில் எட்டு பேர் காயமடைந்தனர்.
இம்மாதத் தொடக்கத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டுள்ளனர். மதமாற்றப் புகாரில் அவரை 18 மணி நேரம் காவலில் வைத்த கொடுமையும் நடந்திருக்கிறது. கடந்த மாதம் கிறிஸ்துமஸ் பொருட்களை விற்றதற்கானக அப்பாவி கூலித் தொழிலாளர்களை இந்துத்துவா அமைப்பினர் மிரட்டி, கடைகளை அகற்றினர். கட்டாக்கில் துர்கா பூஜையின்போது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி வழியாக சென்று, வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர்.ஒடிசாவிற்கு வளர்ச்சியை தரப்போகிறோம் என்று நீட்டி முழங்கினார்கள் மோடியும் அமித் ஷாவும். ஆனால் வன்முறையும் மதவெறுப்பும்தான் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருக்கிறது என்பதைத்தான் அங்கிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
பெரியார் முழக்கம் இதழ் 29012026
