கலால் வரி குறைப்பு யாருக்காக?
பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை அவசர அவசரமாக குறைத்து இருக்கிறது ஒன்றிய ஆட்சி. டீசலுக்கு முழுமையாக கலால் வரி ரத்தாகி இருக்கிறது. பெட்ரோலுக்கு 13 ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக குறைத்து இருக்கிறது.
போர் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுக்காக கண்ணீர் சிந்தி இந்த விலை குறைப்பு நடவடிக்கையை ஒன்றிய ஆட்சி எடுத்து இருக்கிறது. மக்கள் பயன்பாட்டுக்கான பெட்ரோல் டீசல் விலை குறையாது; அப்படியே நீடிக்கும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் பெட்ரோல் டீசல் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு முதலமைச்சர் மாநாட்டை மோடி கூட்டுவதாக அறிவித்து, மாநாடு கூடுவதற்கு முன்பே இந்த முடிவை ஒன்றியஆட்சி எடுத்திருப்பது தான். முக்கிய முடிவுகளை எடுத்து விட்டு பிறகு முதலமைச்சர்கள் மாநாட்டை ஏன் கூட்ட வேண்டும்? தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டார். ரஷ்யாவில் இருந்து மிகக்குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த காலத்திலும் ஒன்றிய ஆட்சி பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கவில்லை.
மாறாக அம்பானியின் எண்ணெய் சுத்திகரிப்பு வணிகம்தான் இதனால் பெரும் பயன் அடைந்தது. சுத்திகரித்த பெட்ரோல், டீசலை அம்பானி நிறுவனம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளையடித்தது.
தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் ஒன்றிய ஆட்சியின்” சாதனைப் பெருமைகளை” பேசத் துவங்கி உள்ள எடப்பாடி கூட்டணி இதற்கு என்ன பதிலை கூறப் போகிறது?
பெரியார் முழக்கம் இதழ் 02042026
