திருநர் சமூகத்தை இழிவுபடுத்துகிறது மோடி அரசு!

திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இது திருநங்கைகளின் சுய-அடையாளத்தை (self-identity) உறுதிப்படுத்தும் உரிமையைப் பறிக்கிறது என திருநர் சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக , இந்தத் திருத்தம், தனது பாலினத்தைத் தானே அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமையைக் குறிப்பிட்டிருந்த 2019ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 4(2)ஐ நீக்கப் பரிந்துரைக்கிறது.

திருநர் சமூகத்தை குற்றவாளிகள் போல சித்தரிக்கும் தோற்றத்தையும் இந்த சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. “வயது வந்தவர்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டு, கடுமையான உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் பல்வேறு விதமான நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, திருநர் அடையாளங்களை ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பிற்காலத்தில் பிச்சை எடுத்தல் போன்ற செயல்கள் மூலம் அவர்களைச் சுரண்டுவதற்காகவே இது பெரும்பாலும் செய்யப்படுகிறது” என்று ஒன்றிய அரசாங்கம் கூறுகிறது. பொதுச்சமூத்தால் புறக்கணிக்கப்பட்டு அனைத்து நிலைகளிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் திருநர் சமூத்தை ஒரு அரசாங்கமே இவ்வளவு மோசமாகத்தான் மதிப்பிடுகிறது என்பது இந்த சட்டம் வெளிப்படுத்தியிருக்கும் முக்கிய அம்சமாக உள்ளது.

மேலும், 2019ஆம் ஆண்டு சட்டத்தின்படி, எந்தவொரு நபரும் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து நேரடியாக திருநர் அடையாள அட்டையைப் பெறலாம். தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி, இனி முதலில் மருத்துவ கண்காணிப்பாளர் அல்லது தலைமை மருத்துவ அதிகாரியிடம் இருந்து ஒரு மருத்துவச் சான்றிதழைப் பெற வேண்டும். இந்தச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சரிபார்ப்பு முடிந்த பின்னரே மாவட்ட ஆட்சியர் திருநர் அடையாள அட்டையை வழங்குவார். மருத்துவமனை நிர்வாகம் இனி பாலின அடையாளம் தொடர்பான அறுவை சிகிச்சைகள் குறித்த தகவல்களை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும். இது திருநராக ஒருவரை பதிவு செய்யும் நடைமுறையையே மிக சிக்கலானதாகவும், சவாலானதாகவும் மாற்றுகிறது. ஒருவர் தன் பாலினத்தை மாற்றிக்கொள்வதே மனதளவிலும், உடலளவிலும் மிகக்கடுமையான சவால்களை கொண்டது. அதை கடந்து வரவே அவர்கள் சமூகத்திலும் குடும்பத்திலும் தன்னளவிலும் மிகக்கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அப்படி, சவால்களை போராட்டங்களை எதிர்கொண்டு பாலினம் மாறுவோரை அலைக்கழிப்பு செய்து மனரீதியாக அவர்களைத் துன்புறுத்துவதுதான் இந்த சட்டத்தால் நடக்கப்போகிறது. அவர்களை அரவணைத்து, துயர் துடைக்க வேண்டிய அரசாங்கமே அவர்களை சோதிப்பது உலகில் வேறு எங்குமே நடக்காத மிகப்பெரும் கொடுமை. திருநர் சமூகத்திடம் எந்தவொரு கருத்துக்களையும் கேட்காமலேயே இப்படியொரு சட்டத்தை உருவாக்கியிருக்கிறது ஒன்றிய அரசு. நாடு முழுவதும் திருநர் சமூகம், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் இந்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென டெல்லி ஜந்தர்மந்தரில் போராடி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள திருநர், திருநங்கைகள், பால்புதுமையினர் உள்ளிட்ட அனைவரும் எதிர்த்து வருகின்றனர். திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் கல்கி சுப்ரமணியம், ரிதுபர்ணா நியோக் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

“பாதுகாப்பு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தை அந்தச் சமூகமே எதிர்க்கும்போது, அது திணிப்பாக இருக்கக்கூடாது; மாறாக, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். ஒன்றிய பாஜக அரசு இந்தத் திருத்தங்களை முன்னெடுப்பதற்கு முன், சற்று நிதானித்து, திருநங்கைகளுடன் கலந்துரையாடி, அவர்களின் உண்மையான உடன்பாட்டைப் பெற வேண்டும்.” என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு சிந்திக்க வேண்டும், முடிவை பரிசீலனை செய்ய வேண்டும்.
பெரியார் முழக்கம் இதழ் 02042026

You may also like...