அழகிரி எனும் அஞ்சா நெஞ்சன்!
பெரியார் இயக்கத்தின் போர் படைத் தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி. அழகிரி அவரது நினைவு போற்றும் கூட்டங்களை பெரியார் இயக்கங்கள் நடத்தி வருகின்றன. அவர் பெயரோடு பிரிக்க முடியாது இணைந்து நிற்பது “அஞ்சா நெஞ்சன்” என்ற பட்டம். பேச்சிலும் செயலிலும் இதை உறுதிப்படுத்தியவர். முதல் உலகப் போரில் இராணுவத்தில் சேர்ந்தார். படையிலிருந்து விடுவித்துக் கொண்டு பட்டுக்கோட்டையில் தனது சித்தப்பா வேணுகோபால் இல்லத்தில் தங்கினார். அப்போது நெற்றியில் நாமம் தரித்து கதர் ஆடை உடுத்தி காந்தியின் சீடராக இருந்தார். அக்காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் வ.வே.சு அய்யர் காங்கிரஸ் நிதியில் நடத்திய சேரன் மாதேவி குருகுலத்தில் நிகழ்ந்த வர்ணாஸ்ரம கொடுமைக்கு எதிராக காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் போர்க்கொடி உயர்த்திய காலகட்டம். இந்த சம்பவம்தான் அழகிரி கண்களைத் திறந்தது. பெரியாரின் பார்ப்பனர் அல்லாதார் போராட்டங்களின் நியாயங்களை உணர்ந்தார். பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டார்.
அவரது வலிமையான ஆற்றல்மிகு மேடைப்பேச்சுக்கள் தமிழ்நாட்டை அதிர வைத்தன. அவரது கூட்டங்களில் அன்றைய காங்கிரஸ்காரர்கள் ‘காலிகளைப்’ பிடித்து வன்முறைகளை ஏவினர். கல்லடி, குழப்பங்களை எதிர்கொண்டு சிங்கமாக கர்ஜித்தார். அவரது உரையைக் கேட்டு கலவரம் செய்ய வந்த “காலிகள்” மனம் திருந்திய வரலாறுகளும் உண்டு. கலைஞரை திராவிடர் இயக்கம் நோக்கி திரும்ப வைத்தது அழகிரியின் பேச்சுதான். நடிகவேள் எம்.ஆர்.ராதா நடத்திய `தூக்குமேடை’ நாடகம் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. அதற்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர். தஞ்சையில் அந்த நாடகத்திற்கு தலைமை தாங்கிய அழகிரி நாடகத்திலே கூர்மையான வசனங்களை பாராட்டி அதுவரை கருணாநிதியாக இருந்த கலைஞருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டத்தை சூட்டினார். அந்தப் பெயரே இன்றுவரை வரலாற்றில் பதிந்து நிற்கிறது. பெரியார் உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் தோழர் என்று அழைத்தவர். ஏழ்மையான வாழ்க்கைதான் ஆனால் சுயமரியாதையில் கம்பீரம். பெரும் செல்வந்தரான நீதிக்கட்சித் தலைவர் பொப்பிலி அரசரிடம் சரிசமமாக அமர்ந்து பேசுவார். பெரியாருக்கு எதிராக நீதிக் கட்சித் தலைவர்கள் உருவாக்கிய குழப்பங்களை முறியடித்தவர்.
1938 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளபதி. அன்றைய முதல்வர் ராஜகோபாலாச்சாரி பள்ளிகளில் இந்தியைக் கட்டாயம் ஆக்கினார். பெரியார் போர்ச் சங்கு ஊதினார். பெரியாரின் தளபதி அழகிரி களமிறங்கினார். திருச்சி உறையூரில் இருந்து 1938 ஆகஸ்ட்-1ம் தேதி படை ஒன்று புறப்பட்டது. நடந்தே பயணம். நல்ல உடல் கட்டுள்ள 100 இளைஞர்களை தேர்வு செய்தார் அழகிரி. படையின் கட்டளைத் தலைவர் (சேனாதிபதி). 577 மைல்கள் 42 நாட்களில் நடந்தே கடந்தது அந்த பயணம். செப்டம்பர் 11-ல் சென்னை வந்தடைந்தது. இந்தி எதிர்ப்பு உணர்வை 4 இலட்சம் மக்களிடம் கடத்தியது. கடுமையான மழைக் காலம் கொட்டும் மழையிலும் பரப்புரை நடந்தது. கொள்ளிடம் ஆற்றை படகில் கடந்தார்கள். பெண்ணை ஆற்றை வயிற்றளவு தண்ணீரில் நீந்த வேண்டி இருந்தது. மழையிலும் நனைந்து நடந்தார்கள். பலருக்கு உடல்நலம் பாதித்த போதும் இலட்சிய பயணம் தொடர்ந்தது.
அழகிரியின் கட்டளையை ஏற்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் ஒன்றை எழுதினார். அந்த பாடல் தான் ” எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி” என்று காலத்தால் உயர்துடிப்போடு நிற்கும் பாடல். அழகிரி வரலாற்றில் பதிவான மற்றொரு நிகழ்வு உண்டு. அதுதான் கானாடுகாத்தான் என்ற ஊரில் நடந்த தோளில் துண்டு போடும் உரிமைக்கான போராட்டம். திருமண ஊர்வலத்தில் நடந்த நாதஸ்வர மேதை மதுரை சிவக்கொழுந்து துண்டு ஒன்றைத் தோளில் போட்டு நாதஸ்வரம் வாசித்து வந்தார். நாதஸ்வரம், தவில் வாசிப்பவர்கள் சூத்திரர்கள் தான். பார்ப்பனர்கள் கடும் உடல் உழைப்புக்குரிய இந்தக் கலையின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். அதுவும் மேல் சட்டை அணியாமல் வாசிக்க வேண்டும்.
அப்போது ஒரு ஜாதிக் வெறி குரல் கேட்டது `துண்டைத் தோளில் இருந்து எடு!’ என்றது அந்தக் குரல். அழகிரி வெகுண்டெழுந்து துண்டை எடுக்காதே என்றார். திருமண ஊர்வலம் நகரவில்லை பாதியில் நின்றது.அப்போது பெரியார் அதே திருமணத்துக்கு வந்திருந்தார். வேறு ஒரு இடத்தில் தங்கி இருந்தார். அவரிடம் நேரில் சென்று பேசினார் அழகிரி. பிறகு திரும்பி வந்து துண்டை தோளில் போடு; இடுப்பில் கட்டாதே என்று கூறி திருமண ஊர்வலம் நிறைவடையும் வரை சிவக்கொழுந்துவின் வியர்வையைத் தடுக்க விசிறியை எடுத்துக் கொண்டு வீசினார் அழகிரி. 1948-ல் மதுரை கருஞ்சட்டை படை மாநாட்டிற்கு பார்ப்பனர்களும் அவரது கூலிகளும் தீ வைத்தனர். அழகிரி மாநாட்டில் பேசும் போதுதான் இந்த வன்முறை நடந்தது.1929-ல் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் அழகிரி இடி முழக்கம் செய்தார். அவரது வரலாற்று பக்கங்களில் வீரம்செறிந்த நிகழ்வுகள் ஏராளம் உண்டு.
எலும்புகளை அரிக்கும் (T.B) நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார் அழகிரி. அப்போது மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்திடாத காலம். கடுமையான நோய்ப் பாதிப்பிற்கு உள்ளான நிலையில் 1948-ல். பெரியார் நடத்திய ஈரோடு மாநாட்டுக்கு வந்தார். ” நான் கலந்துகொள்ளும் கடைசி மாநாடு இதுவாகத்தான் இருக்கும். எனது தலைவர் பெரியாரிடம் இருந்து விடைபெறுவதற்காக வந்தேன்” என்று அவர் பேசிய போது அரங்கம் முழுவதும் கண்ணீர் விட்டது. சமூகத்தை செப்பனிட மாற்றத்தை நோக்கி இழுத்துச் செல்ல அழகிரி போன்ற எத்தனையோ உணர்வாளர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். அந்த வரலாறுகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இயக்கத்திற்கு எதிராக பார்ப்பனர்கள் மற்றும் அவரது கோடாரிக் காம்புகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இது திராவிடர் இயக்கத்தின் காலம். கோடாரிக் காம்புகளையும் பார்ப்பனர்களை அம்பலப்படுத்த அஞ்சா நெஞ்சன் அழகிரிகள் நமக்கு உணர்வூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
பெரியார் முழக்கம் இதழ் 02042026
