மாப்பிள்ளை பாஜகதான்; ஆனால் சட்டை என்னுடையது

அதிமுக பாஜக கூட்டணியை அமித் ஷாதான் அறிவித்தார்; இப்போது கூட்டணிக்கான தொகுதி பங்கீடுகளை எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சி அலுவலகத்தில் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் கூட்டணிக்கான தலைமை தனது கட்சிதான் என்றும் பாஜக அல்ல என்றும் மக்களுக்கு சூசகமாக கூறுகிறார். பாஜக என்ற அடையாளத்தை முன்னிறுத்தினால் தமிழ்நாட்டு மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்; இந்த உண்மை கட்டாயத்தின் பேரில் கூட்டணியில் இணைக்கப்பட்ட எடப்பாடிக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது.
இதன் காரணமாகவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அணியில் சேர மறுத்தார்; இதன் காரணமாகவே இந்த தேர்தல் களம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் போட்டி என்று சித்தரிக்க விரும்புகிறார் எடப்பாடி.விருப்பமில்லாமல் பாஜக என்ற லக்கேஜை சுமக்க வேண்டி இருக்கிறது என்ற குமுறல்களின் வெளிப்பாடு இது! இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது திமுக அணிதான் என்று அமித் ஷாவே தன்னிடம் ஒப்புக்கொண்டதை ஓபிஎஸ் பொதுவெளியில் போட்டு உடைத்து விட்டார். இதற்கு அமித் ஷா -விடமிருந்து எந்த மறுப்பும் வரவில்லை. இப்போது தனி மெஜாரிட்டியுடன் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி கூறுவதன் வழியாக அமைச்சரவையில் பாஜக இடம்பெறாது என்ற உறுதியையும் மக்களுக்கு மறைமுகமாக வழங்குகிறார். இந்தத் திரைக்கதைகளை மக்கள் நம்புவார்களா?
முதலமைச்சராக இருந்து இவர் நடத்திய ஆட்சியை இயக்கியதே ஒன்றிய பாஜக ஆட்சி தான். முத்தலாக் சட்டம்; குடியுரிமை சட்டம்; விவசாய சட்டம்; காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து; டெல்லி மாநில உரிமைப் பறிப்பு சட்டம் என்று அனைத்து மாநில உரிமை பறிப்பு மற்றும் மதவாத சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது எடப்பாடி ஆட்சி.
ஜெயலலிதா கையெழுத்திட மறுத்த உதய் மின் திட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு மசோதாவுக்கும் பச்சைக்கொடி காட்டினார்கள்.
நீட் விலக்கு கோரி எடப்பாடி அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசு தலைவர் ஏற்க மறுத்து எழுதிய கடிதத்தை மக்களிடம் வெளிப்படுத்தாமல் ரகசியமாக பாதுகாத்தது டப்பாடி ஆட்சி.
தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்டும் பாஜகவின் அத்தனை முயற்சிகளுக்கும் துணை போனவர் எடப்பாடி.
ஆர்.எஸ்.எஸ் மாநாட்டுக்கும் இந்து முன்னணி மாநாட்டுக்கும் தனது கட்சியின் சார்பில் தூதுவர்களை அனுப்பினார்.
திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை உருவாக்க பாஜக மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்; எல்லைக்கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை திமுக அமல்படுத்தவில்லை என்று கன்னடம் தெரிவித்தார்.
என்.டி.ஏ மாநாட்டின் முகப்பில் இடம்பெற்ற பெரியார் படத்தை பாஜக நீக்கிய போதும் வாய் திறக்கவில்லை.
மாநில உரிமைகளை பறிக்க முயன்ற ஆளுநர் ஆர்என்.ரவியின் அடாவடிகளுக்கும் துணை போனார். இப்படி நீண்ட பட்டியலிட முடியும்.
பாஜகவின் நிழல் ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டியவர் எடப்பாடி பழனிச்சாமி. இப்போது தனது தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது என்று படம் காட்டுவதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.மாப்பிள்ளை பாஜகதான்; ஆனால் சட்டை என்னுடையது என்ற டயலாக் தான் நினைவுக்கு வருகிறது!
– பெரியார் முழக்கம் இதழ் 26032026

You may also like...