தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு!
நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது தோல்வியை பரிசாகக் கொடுத்த தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் பாஜக கொண்டிருக்கிற கோபத்தை தெள்ளத்தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது 2024 – 25 நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை. ஜூலை 23ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், ஒரு வார்த்தை கூட தமிழ் என்றோ, தமிழ்நாடு என்றோ இடம்பெறவில்லை. மாறாக, ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரை உருவாக்க ரூ.15,000 கோடி, கோப்பர்த்தியில் தொழில் முனையம் என ஆந்திராவுக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அதேபோல பீகாரில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.26,000 கோடி, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 11,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாஜகவின் ஆட்சியை கவிழாமல் இருபுறமும் தாங்கிப் பிடிக்க, சந்திரபாபுவுக்கும், நிதிஷ் குமாருக்கும் தரப்பட்ட முக்கியத்துவமே தவிர, அம்மாநில மக்களின் நலன் மீது கொண்ட அக்கறை அல்ல இது என்பது தெளிவாகிறது.
உண்மையில் மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்திருந்தால் கலவரத்தால் உருக்குலைந்து நிற்கும் மணிப்பூருக்கு திட்டங்களை தீட்டியிருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டைப் போல மணிப்பூர் என்ற வார்த்தையும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு ஒதுக்கீடு இல்லை. கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. தமிழ்நாட்டுக்கென புதிய ரயில் திட்டங்களோ, நெடுஞ்சாலைத் திட்டங்களோ இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாடு சந்தித்த 2 பேரிடர்களுக்கும் நிதி இல்லை. பாஜகவின் மதவாதத்தை தமிழ்நாடு உறுதியாக எதிர்த்து நிற்கிறது என்பதுதான் இந்த புறக்கணிப்புக்கு காரணமா என கேள்வி எழுப்பியிருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார். அவரைப் பின்தொடர்ந்து கருநாடகா, தெலங்கானா மாநில முதலமைச்சர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப்பதாக அறிவித்துள்ளார்கள்.
ஒன்றிய அரசின் பாகுபாட்டுக்கு எதிராக, தென் மாநிலங்களின் இந்த ஒருமித்த குரல் வலுப்பெற வேண்டிய அவசியம். செல்லுமிடமெல்லாம் தமிழ், தமிழ் எனப் பேசி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கிறார் எனக்கூறும் தமிழ்நாட்டு பாஜகவினர், ஏன் தமிழ்நாட்டுக்கு எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை என்ற கேள்விக்கும் பதில் சொல்ல முன்வர வேண்டும்.
பெரியார் முழக்கம் 25.07.2024 இதழ்