சட்டம் ஒழுங்கு மீறலா? சமூக ஒழுங்கு மீறலா? ” தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்!
“என்.டி.ஏ. கூட்டணியை ஒரே மேடையில் ஏற்றி ஒற்றுமையை மக்களுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த போராட்டம் தான் “சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கான ஆர்ப்பாட்டம்”. ஆனால் இந்தப் போராட்டம் கூட்டணியின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்துவிட்டது. திமுக எதிர்ப்பு இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் எதிர்ப்பாக உருமாறி விட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவினரே அதிமுக சண்முகத்தை வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.சொந்தக்காசில் சூடு வைத்த கதை தான்.
அஇஅதிமுக ஆட்சிக் காலத்தைவிட திமுக ஆட்சிக் காலத்தில் குற்றங்கள் குறைவு என்று புள்ளி விவரங்களுடன் உள்துறை செயலாளர் அறிக்கை விடுத்திருக்கிறார். நடப்பது எந்த ஆட்சியாக இருந்தாலும் நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, வன்முறை, பாலுறவு வன்கொடுமை குற்றங்களுக்கு ஆட்சியை குற்றம் சாட்டுவது நியாயமும் இல்லை.அர்த்தமும் இல்லை என்பதே நமது உறுதியான கருத்து. இவை அனைத்தும் சமூகம் சார்ந்த குற்றங்கள் வன்முறைகள். நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து தடுக்கக்கூடிய “மந்திரக் கோல்” எந்த அரசிடமும் இல்லை.இருக்கவும் முடியாது. குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் தான் தவறு. அப்படி எந்தக் குற்றச்சாட்டையும் இந்த ஆட்சியின் மீது கூறி விட முடியாது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலுறவு வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளியை திமுகவுடன் இணைத்து பேசினார்கள். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் வழியாக மிகக் குறுகிய காலத்தில் பெற்றுத் தந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. ஆனால் பொள்ளாச்சி கூட்டுப் பாலுறவு வன்முறை வழக்கில் சொந்த கட்சிக்காரரை காப்பாற்றுவதற்கு எடப்பாடி ஆட்சி முயன்றதையும் குற்றச்சாட்டுக்களை காவல் நிலையத்தில் பதிவுசெய்யாமல் காலம் கடத்தியதையும் நாடு பார்த்தது. நாட்டின் வளர்ச்சிக்கான மக்களின் எதிர்காலக் கனவுகளை ஒரு மக்கள் தலைவராக அறிய விரும்பினார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு அது படுக்கை அறை கனவாகவே தெரிந்தது. இது அவருடைய வக்கிர புத்தி. இதே போன்ற வக்கிர மனநிலையாளர்களால்தான் சமூகத்தில் பாலுறவு வன்முறைகளும் குழந்தைகள் மீதான வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த குற்றங்களுக்கும் ஆட்சிக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதற்கு சண்முகமே பதிலாகவும் சாட்சியாகவும் நிற்கிறார். திமுகவினரே மக்களிடம் போய் நீங்கள் குற்றச்செயலில் இறங்குங்கள். நாங்கள் காப்பாற்றுகிறோம் என்று கூறுவதைப் போல இருக்கிறது இவர்களின் குற்றச்சாட்டு. நாட்டில் நடக்கும் குற்றங்கள் சமூக ஒழுங்கு மீறல்களே. இந்த சமூக ஒழுங்கு மீறல்கள் வழியாக மக்களே சட்டம் ஒழுங்குகளை சீர்குலைக்கிறார்கள். ஆட்சி சீர்குலைக்கவில்லை.மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்பது வேறு! பொது ஒழுங்கு சீர்கேடுஎன்பது வேறு!
மணிப்பூரில் நடப்பது பொது ஒழுங்கு சீர்கேடு. ஆட்சி நிர்வாகமே முடங்கிக் கிடக்கிறது. இந்த ஆட்சியை கலைப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால் அனைத்து மாநிலங்களிலும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற சமூக குற்றங்களை அரசின் மீது ஏற்றி ஆட்சியாளர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற துடிப்பது அற்ப அரசியல் அர்த்தமற்ற அரசியல். திராவிட மாடல் ஆட்சியை கண்டிப்பதற்கு இவர்களுக்கு இதை விட்டால் வேறு பிரச்சனையே இல்லை. சரி.என்.டி.ஏ அணியோ, த.வெ.கவோ அதிகாரத்துக்கு வந்தால் கொலையோ, கொள்ளையோ, பாலுறவு வன்முறையோ நடக்கவே நடக்காது என்று இவர்களால் அறிவிக்க முடியுமா? தேர்தல் அறிக்கையில் அறிவிப்பார்களா?
“இந்தக் கூட்டத்தில் எவராவது ஒழுக்க சீலர் இருந்தால் இந்த பெண்ணின் மீது கல்லை எறியலாம்’’ என்று இயேசுநாதர் சொன்னதாக் கூறப்படும் கதைதான் நினைவுக்கு வருகிறது.
– பெரியார் முழக்கம் இதழ் 26032026
