பொள்ளாச்சியில் நடைபெற்ற பெரியாரியல் பயிலரங்கம்!
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் “தேர்தல் அரசியலும் தந்தை பெரியாரும்” என்ற தலைப்பில் “பெரியாரியல் பயிலரங்கம்” 23.02.2026 திங்கள் அன்று காலை 11 முதல் 5 மணி வரை இரண்டு வகுப்புகளாக நடைபெற்றது. கோவை மாவட்ட பொறுப்பாளர் யாழ்.வெள்ளியங்கிரி தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். ஆனைமலை நகரச் செயலாளர் ஆனந்த், அரிதாசு ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி நகரச் செயலாளர் சபரிகிரி வரவேற்புரையாற்றினார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் காசு நாகராசன் “திராவிட மாடல் இன்றும் நாளையும்” என்ற தலைப்பில் திராவிட கட்சிகள் தோன்றிய ஆரம்ப காலத்திலிருந்து மாணவ, மாணவிகள் ஆரம்ப தொடக்கப்பள்ளி தொடங்கி கல்லூரி உயர் படிப்பு முடிக்கும் வரை அவர்களை பல்வேறு திட்டங்களால் ஊக்கப்படுத்தி வாழ்வில் முன்னேற்றி சென்றதையும் நிகழ்கால திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை அறிவு ஒளி பெற செய்து கொண்டிருப்பதைப் பற்றியும், மீண்டும் இந்தத் திராவிட மாடல் அரசு ஆட்சி அமைத்திட நம்மை போன்ற திராவிடக் கொள்கை அமைப்புகள் உறுதுணையாக நிற்க வேண்டும் எனக் கூறி விளக்கவுரையாற்றினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி கீழ்வெண்மணி படுகொலை, அயோத்திதாச பண்டிதர், வாச்சாத்தி வன்கொடுமை, மேலவளவு ஆணவக்கொலை, தென் மாவட்டங்களில் ஏற்படாத பெரியாரியல் தாக்கம் போன்ற தோழர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். மீண்டும் திராவிட மாடல் அமைய வேண்டும் எனவும், “பெரியாரின் பார்வையில் இன்றைய அரசியல்” என்ற தலைப்பில் மிக விரிவாக விளக்கவுரையாற்றினார். கழகத் தலைவரிடம் ரூ.9,000 பொள்ளாச்சி கழகத் தோழர்கள் பெரியார் முழக்க சந்தா வழங்கினார்கள். கலந்துகொண்ட அனைவருக்கும் மதியம் அசைவ உணவு வழங்கப்பட்டது. நிர்மல் குமார் (கோவை மாநகரத் தலைவர்), நவின் (கோவை மாநகர அமைப்பாளர்), விஷ்ணு (கோவை மாநகர துணைச் செயலாளர்), தரணி, சிட்கோ ராஜசேகர், வினோதினி, நடராஜ், பிரியா மோகன், வானுகன், அமுதன், வெங்கட், லட்சுமி, செல்வராசு ஆகிய தோழர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 19032026
