வினாக்கள்… விடைகள்…!
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட தமிழக அமைச்சரவை நியமித்த பவானிசிங் நியமனம் செல்லாது. – உச்சநீதிமன்றம்
அம்மாவுக்கு எதிராக அமைச்சரவையே இப்படி குழிபறித்துக் கொண்டு – இன்னொரு பக்கம் பிரார்த்தனைகளை நடத்துகிறார்கள் போலும்!
பழைமை மாறாமல் இருப்பதற்கு பார்த்தசாரதி கோயில் – ‘மார்பிள்’ தரைகள் அகற்றப்பட்டு, கருங்கற்கள் பதிக்கப்படுகின்றன. – செய்தி
அப்படியே மின்சாரத்தையும் சேர்த்து துண்டிச்சுடுங்க; பழைமை மாறாம இருக்கும்.
பெரியார் திடலில் தாலி அகற்றிய பெண்களின் கணவர்கள் செத்துவிட்டதாகக் கருதி, திருவண்ணாமலையில் புரோகிதர்கள் ‘கரும காரிய’ புரோகிதம் செய்ய முடிவு. – செய்தி
பொய்யும் புரட்டுமே புரோகிதம் என்பதை வெட்கம், மானம் இல்லாமல் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்!
மதவிழாக்களுக்கு யானைகளை பயன்படுத்த தடை போடுக. – உச்சநீதிமன்றத்தில் வழக்கு
யானைகளாக விரும்பி ‘மதம்’ பிடித்தால் பங்கேற்க அனுமதிக்கலாம்; அதற்கு தடை போட வேண்டாம்!
இந்தியாவுக்கு ‘பரதன்’ பெயரை சூட்ட வேண்டும். – உச்சநீதிமன்றத்தில் வழக்கு
‘பரதன்’ பெயர் சூட்டினால், பிரதமர் நாற்காலியில் ‘ராமன்’ செருப்புகளை வைக்கச் சொல்வீங்க; அந்த செருப்பு அயோத்தியில்தான் கிடைக்கும் என்பீங்க… நல்லாத்தான்n பாவுது!
இந்தியாவில் குழந்தை திருமணம் செய்த 1.7 இலட்சம் குழந்தைகள் (தாலி அறுக்கப்பட்டு) விதவைகளாக உள்ளார்கள். – ஆய்வு தரும் தகவல்
தாலி காக்கும் ‘தாலி’பான்களே! இதற்கு என்னப்பா, பதில்?
தமிழ்நாடு தகவல் ஆணைய தலைமை அதிகாரி, ஸ்ரீபதி ஓய்வு பெற்றார். – செய்தி
தமிழ்நாட்டில் அப்படி ஒரு அமைப்பு இருந்தது என்பதை தனது ஓய்வின் மூலம் தகவலாக தந்திருக்கிறார், ஸ்ரீபதி; நல்ல சேவை போங்கோ!
‘பெருமாள்’ பன்றி அவதாரம் எடுத்ததை கேலி செய்யும் கமலகாசன் படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி. – செய்தி
கவலைப்படாதீங்க; ‘பெருமாளை’, நீதிபதியாக மற்றொரு அவதாரம் எடுத்து வரச் சொல்லி தடை வாங்கிக்கலாம்!
பெரியார் முழக்கம் 30042015 இதழ்