‘தலித்’ அர்ச்சகர் நாகமுத்து தற்கொலை: பின்னணி என்ன?

பெரிய குளம் கைலாச நாதன் கோயில் அர்ச்சகர் நாகமுத்துவை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தம்பியும், பெரிய குளம் நகராட்சித் தலைவருமான ராஜா என்பவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிகாரச் செல்வாக்குக் காரணமாக அவருக்கு பிணையும் கிடைத்துவிட்டது. இந்த வழக்கிற்கு ‘அர்ச்சகர் தற்கொலை வழக்கு’ என்று ஊடகங்கள் பெயர் சூட்டியிருக்கின்றன. இதற்குப் பின்னால், ஒரு வரலாறு உண்டு. நாகமுத்து, தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர். இவர் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு 2012 செப். 17இல் வெளியிட்டது. அந்த செய்தி இது:
“டி. கல்லுப்பட்டியிலுள்ள கைலாசநாதன் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அர்ச்சகராக இருந்து வருபவர் நாகமுத்து. அவர் ஒரு தலித். நான்கு மாதங்களுக்கு முன்பு கோயில் புதுப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மே 5ஆம் தேதி கோயில் நிர்வாகக் குழுவில் இருந்த தலித் அல்லாத சாதியினர், நாகமுத்துவை அழைத்து, இனி கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றும், தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் பூஜை செய்வதை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்றும் கூறினர். 10 ஆண்டுகாலத்துக்கும் மேலாக என்னை ஏற்றுக் கொண்டவர்கள், இப்போது எதிர்ப்பது ஏன் என்று நாகமுத்து கேட்டார். உடனே நாகமுத்துவை சாதி வெறியர்கள் அடித்து உதைத்துள்ளனர்.
இது பற்றி நாகமுத்து கூறுகையில், “சில ஆண்டு களுக்கு முன்பாகவே பிரச்சினை தொடங்கிவிட்டது. முக்கியமான பண்டிகை மற்றும் ‘புனித’ நாட்களில் என்னை பூஜை சடங்குகள் நடத்த அனுமதிக்காமல், அன்று மட்டும் ‘பிராமண’ (பார்ப்பன) அர்ச்சகர்களை அழைத்து வந்து அவர்களுக்கு கூடுதலாக ஊதியம் தந்து பூஜைகளை செய்ய ஏற்பாடு செய்தனர். இதைக்கூட நான் ஏற்றுக் கொண்டு, ஏனைய நாட்களில் நான் பூஜைகளை செய்து வந்தேன். இப்போது நான் கோயிலுக்குள்ளேயே வரக் கூடாது; பக்தர்கள் பலர் நான் பூசை செய்வதை ஏற்கவில்லை என்று கூறினர். இதை நான் கேள்வி கேட்டபோது, இழிவாகப் பேசி என்னைத் தாக்கினர்” என்று கூறினார்.
நாகமுத்து காவல்துறையை அணுகியபோது, காவல்துறை, தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், மனித உரிமையாளர்கள் ஆதரவோடு, உயர்நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தென்கரை காவல்நிலைய அதிகாரிகள் ‘எப்.அய்.ஆர்.’ மட்டும் ஆகஸ்டு 2 ஆம் தேதி பதிவு செய்தனர். எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
“இந்த வழக்கில் சாதிப் பிரச்சினை இருப்பதால் எங்களால் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கோயில் நிர்வாகத்தினருக்கு அர்ச்சகரை பதவி நீக்கும் அதிகாரம் உண்டு. அதே நேரத்தில் நாகமுத்து தாக்கப்பட்டது உண்மை தானா என்று விசாரித்து வருகிறோம்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி கூறினார்.
“இந்தக் கோயில் பற்றி எவருமே கவலைப்படாத காலத்தில் நாகமுத்து என்ற தலித் எந்த எதிர்ப்பும் இன்றி அர்ச்சகராக இருந்தார். இப்போது சுற்றுப் பகுதியிலுள்ள செல்வாக்குள்ள பிரமுகர்கள் கோயிலைப் புதுப்பித்தப் பிறகு, கோயில் புதுப் பொலிவு பெற்றவுடன் இப்போது அவர்களுக்கு பார்ப்பன அர்ச்சர்கள் தேவைப்படுகிறார். இது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது” என்று ‘எவிடென்ஸ்’ இயக்குனர் கதிர் கூறினார். “அர்ச்சகர் தொழில் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்த நாகமுத்து குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யுள்ளது” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி வெளியிட்டது.
இதற்குப் பிறகு அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். பார்ப்பன
அர்ச்சகர் நியமனத்துக்காக விரட்டியடிக்கப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்டவர்தான் நாகமுத்து. இதுவே வழக்கின் பின்னணி

அய்.நா.வில் கண்ணீர் சாட்சியங்கள்
அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் முன் சிறீலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வரும் செப்டம்பரில் தீவிரமாகும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஜெனிவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் வெள்ளைக் கொடியுடன் இராணுவத்திடம் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் தளபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது, சர்வதேச நெறி முறையின்படி கடும் குற்றமாகும். இது குறித்து சிறீலங்கா மவுனம் சாதித்து வருகிறது. இந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் சமாதானப் பிரிவுத் தலைவர் புலித் தேவனின் மனைவி குறிஞ்சி, கொல்லப்பட்ட புலிகளின் தளபதி மலரவன் மனைவி சுசீலாம்பிகை மற்றும் கொல்லப்பட்ட அரசியல் பிரிவு தலைவர் நடேசனின் மகன் ஆகியோர் அளித்த கண்ணீர் சாட்சியங்கள் அய்.நா.வில் பெரும் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது.
சுட்டுக் கொல்லப்பட்டதை இவர்களின் சாட்சியங்கள் உறுதி செய்துள்ளன. அய்.நா.வின் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனமான பசுமைத் தாயகம், இங்கிலாந்து தமிழ் பேரவை, அமெரிக்க தமிழர் அரசியல் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த சாட்சியங்களுக்கு ஏற்பாடுகளை செய்தன. ஏற்கெனவே இலங்கை அளித்த உறுதிமொழியின்படி எந்த உள்நாட்டு விசாரணையும் இலங்கை நடத்தவில்லை. 13ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றும் முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை என்பதால், இலங்கை தன்னை நியாயப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில் 8 தமிழர்களைக் கொலை செய்த இராணுவ அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதித்து அண்மையில் கொழும்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும், அய்.நா.வை ஏமாற்றும், ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. 1976ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்படவில்லை. ஏற்கெனவே மரணதண்டனைக்குள்ளான 400 பேர் தண்டனை நிறைவேற்றப்படாமலே உள்ளனர். மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே நமது கருத்து. ஆனாலும் இப்போது கொழும்பு நீதிமன்றம் விதித்துள்ள மரணதண்டனை ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

பார்ப்பன பயங்கரவாதத்தை மோடி அரசு காப்பாற்றுகிறது
மகாராஷ்டிராவில் உள்ள மாலேகான் பகுதியில் 2008இல் வெடிகுண்டுகள் வெடித்ததில்
37 உயிர்கள் பலியாயின. 140 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல் காவல் துறை மு°லீம் இளைஞர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுத்தது. வழக்கு சிறப்புப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டவுடன் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது பார்ப்பனப் பயங்கரவாதம் என்ற உண்மைகள் வெளிவரத் தொடங்கின. பிரங்யாசிங் தாக்கூர் என்ற பெண் சாமியார், சிவ் நாராயண் கோபால், சிரி கார்த் புரோகித் கல்சகரா, ஷியாம் போன்ற இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட்ட ரோகினி செலியன், அண்மையில் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளார். மோடி ஆட்சிக்கு வந்தவுடன், தேசிய புலனாய்வுக் கழகத்தைச் சார்ந்த ஒரு அதிகாரி, இவரை சந்தித்து, வழக்கில் தீவிரம் காட்ட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். வழக்கில் வேறு புதிய வழக்கறிஞரை நியமிக்கவிருப்பதால் வழக்கிலிருந்து விடுவித்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சிகளை மோடி ஆட்சி தொடங்கிவிட்டது.
அடுக்கடுக்கான ஊழல்கள்
பதவியேற்ற ஓராண்டு காலத்திலேயே மோடி ஆட்சியின் ஊழல் முறைகேடுகள் வெளிவரத் தொடங்கி விட்டன. ‘அய்.பி.எல்.’ என்ற கிரிக்கெட் சூதாட்ட நிறுவனத்தின் தலைவராக இருந்து பல கோடி சுருட்டிய – தேடப்படும் குற்றவாளி லலித்மோடிக்கு, போர்ச்சுகல் நாட்டுக்கு பயணிக்க ஆவணங்கள் கிடைப்பதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா, இலண்டன் தூதரகத்துக்கு மறைமுகமாக பரிந்துரை செய்தார் என்பது ஒரு புகார். இராஜஸ்தான் முதல்வரான வசுந்தரா ராஜே, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, லலித் மோடிக்கு இலண்டன் குடியுரிமை வழங்க எழுத்துப் பூர்வமாக தனது ஆதரவைத் தெரிவித்ததோடு, இந்த உண்மை இந்திய அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ தெரியக் கூடாது என்று அதில் குறிப்பிட்டிருந்தது. மற்றொரு மிகப் பெரும் முறைகேடு; வசந்த்தராவின் மகனும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்யந்த் என்பவர் நடத்தும் போலி நிறுவனத்துக்கு லலித்மோடி கோடிக்கணக்கில் பணம் கொடுத்திருக் கிறார்.
மற்றொரு ஊழல், மகாராஷ்டிராவில் பா.ஜ.க. சிவசேனை கூட்டணி ஆட்சியோடு தொடர்புடை யது. கார் விபத்தில் பலியான பா.ஜ.க. தலைவர் கோபிநாத் முன்டேயின் மகள் பங்கஜா முன்டே, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர். ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேலான எந்தப் பொருளையும் டெண்டர் மூலம் வாங்க வேண்டும் என்ற விதியை மீறி, 24 அரசு உத்தரவுகளைப் போட்டு, 204 கோடிக்கான பொருள்களை நேரடியாக வாங்கி ஊழல் செய்திருக்கிறார். ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மய்யங்களுக்காக குழந்தைகளுக்காக வாங்கப்பட்ட உணவுப்பொருள்களில் இந்த ஊழல் நடந்திருக்கிறது. இந்த குழந்தை உணவுப் பொருள் களில் களிமண், கற்கள் கலக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்தபோது, இந்த முறைகேடுகள் வெளியே வந்துள்ளன. இன்னும் எத்தனை ஊழல்கள் வெளிவரப் போகிறதோ தெரியவில்லை.

அத்வானி தரும் நெருக்கடி
அவசர நிலை மீண்டும் வரலாம் என்று கூறிய அத்வானி, பிறகு அதை காங்கிரசை மனதில் வைத்துக் கூறியதாகக் கூறினார். இப்போது சுஷ்மா, இராஜஸ்தான் முதல்வர் வசந்தரா மீது முறைகேடுகள் புகார் வந்த நிலையில் மற்றொரு ‘ஏவுகணை’யை வீசியிருக்கிறார். ‘ஹவாலா’ குற்றச்சாட்டில் தனது பெயர் அடிபட்டபோது உடனே பதவி விலகிய தோடு, நீதி விசாரணைக்கும் உட்பட தயாராக இருந்ததாக இந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். யஷ்வந்த் சின்ஹா என்ற மற்றொரு பா.ஜ.க. தலைவர், “75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பா.ஜ.க.வில் மூளைச் சாவுக்கு உட்பட்டுவிட்டனர்” என்று கூறியிருக்கிறார். மோடி, அமித்ஷா என்ற இரு சர்வாதிகாரிகளிடம் நாடு சிக்கிக் கொண்டு சீரழிகிறது என்று மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜ் புரோகித் என்பவர் இந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
“நாளுக்கு நாள் பா.ஜ.க.வின் புகழ் அதல பாதாளத்தில் சரிந்து வருகிறது. கட்சியினர் இந்த உண்மையை தலைமையிடம் பேசப் பயப்படு கிறார்கள். காரணம், பதவி போய் விடுமோ என்ற அச்சம். அவர்கள் பதவியை வைத்துப் பிழைப்பு நடத்துகிறவர்கள் என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறார் ராஜ் புரோகித்.

பெரியார் முழக்கம் 02072015 இதழ்

You may also like...