‘அவதார’ ராமனுக்கு அவசர வேண்டுகோள்!
ஓ..ஸ்ரீராம பகவானே! இந்து ராஷ்டிரத்தின் காட் பாதரே.. வழிகாட்டியே தத்துவமே..
உங்களை நம்பி வாழும் எங்கள் மோடி ராஜ்ஜியத்துக்கு சோதனைமேல் சோதனை வந்துகொண்டே இருக்கிறதே. உன் ஞானக் கண்களுக்கு தெரிகிறதா? நம்புகிறோம்! நாங்கள் நம்புகிறோம். எல்லாம் அறிந்த உனக்கு நிச்சயமாக இது தெரியாமல் இருக்காது.
எங்கள் மோடிஜியும் எங்கள் அமைச்சர்களும், உனக்கு கோயில் கட்ட உத்தரவிட்ட எங்கள் மோகன் பகவத்தும், சேவக்குகளும் சனாதனிகளும் உனது மகா சக்தியைத் தானே நம்பி இருக்கிறோம்?
நாங்கள் எல்லாம் இப்போது திக்குமுக்காடி அரசியல், பொருளாதார நெருக்கடிகளில் தவிக்கிறோம்! திணருகிறோம். இது உனக்கு தெரியவில்லையா சுவாமி?.
அமெரிக்கா மிரட்டுகிறது; வரி போடுகிறது. ரஷ்யாவிடமிருந்து பெட்ரோல் வாங்காதே என்று ஆணையிடுகிறது. இந்துக்கள் வாழும் நமது புண்ணிய ஆன்மீக பூமியில் ஒரு ரூபாயின் மதிப்பு என்ன தெரியுமா? சொல்வதற்கே வாய் கூசுகிறது. அமெரிக்காகாரன் ஒரு டாலர் கொடுத்தால் அதற்கு நாம் 92 ரூபாயை எண்ணி வைக்க வேண்டும். அய்யகோ அமெரிக்காவின் கிறுத்தவர்களிடம் உலகத்துக்கே கலாச்சாரக் காவலர்களாகிய நாம் இப்படி `மதிப்பு’ இழந்து கிடக்கலாமா?.
நாங்கள் டிரம்புக்கு கொடி தூக்கினோம்! இப்போது அந்த மனிதர் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது படையெடுத்து படுகொலைகளைச் செய்கிறார். 7 வயதிலிருந்து 8 வயது வரை உள்ள 168 குழந்தைகள் துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள். நமது மோடிக்கு கண்டனம் தெரிவிக்கக் கூட துணிவு வரவில்லை. கச்சா எண்ணெய் வரவில்லை; சமையல் கேஸ் உற்பத்தி பாதிக்கப்பட்டு விட்டது. ஓட்டல்களும், டீக்கடைகளும் மூடப்பட்டு வருகின்றன. இவ்வளவு நெருக்கடிகளையும் நமது பாரதத்தாய் தாங்கிக் கொள்வாளா?.
ஸ்ரீராம பகவானே! உனக்கு நாங்கள் என்னய்யா குறைவைச்சோம் என்னய்யா துரோகம் செய்தோம்.
பிறப்பிட சான்றிதழ் எதுவும் இல்லாமலே உனக்கான பிறப்பிடத்தை நாங்கள் உருவாக்கினோம்; அதற்காகவே பாபர் மசூதியை கரசேவை செய்தோம்; குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டனையிலிருந்து தப்பிக்க விட்டோம். உனக்காகவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வாங்கினோம். ராமா! நீதானே நேரில் வந்து தீர்ப்பு எழுதினாய்! இதை நீதிபதியே கூறினாரே. மசூதி இடித்த இடத்திலேயே உனக்கு கோயில் கட்டினோமே!
மகா ராஜாவே! தேசத் தெய்வமே!
உன் கோயிலுக்கு நாங்கள் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா ரூ.5000 கோடி; 67 ஏக்கர் அரசு நிலத்தை உனக்காக தானமாக வழங்கினோம். உனது கோயில் கட்டிட வளாகத்திற்காக அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வீடுகளையும் கடைகளையும் மக்கள் கதறக் கதற இடித்து தள்ளினோம்.
உன் கருணைக்காகவே ஆட்சி நடத்துகிறார் நமது உ.பி முதல்வர். அவர் உனக்காக எவ்வளவு செலவிட்டது தெரியுமா? அயோத்திக்கு சர்வதேச விமான நிலையம்; புதிய தொடர்வண்டி நிலையம்; ராமர் பாதை; பக்தி பாதை; ராமஜென்ம பூமி பாதை என்று அரசு செலவிட்ட தொகை மட்டும் ரூ.30,000 கோடி. பகவான் எங்களை கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையின் உச்சியிலே நாங்கள் நின்றோம். ஏன் இப்போதும் நிற்கிறோம்.
எங்கள் நிலையை பார்த்தாயா?…ஈரான் இசுலாமிய மக்களிடமும், அமெரிக்க- ரஷ்ய கிறுத்தவர்களிடமும் நாங்கள் சரணடைந்து கிடக்கிறோமே. பெட்ரோல் நெருக்கடிகளாலும், வரி விதிப்புகளாலும் உனது ராமராஜ்யம் சிரிப்பாய் சிரிக்கிறதே!
சொல்! …ஸ்ரீராமா சொல்!
இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்? வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டுமா? தட்டுகளை எடுத்து தாளம் போட வேண்டுமா? ` ஸ்ரீராம ஜெயம்’ பக்கம் பக்கமாக எழுத வேண்டுமா? இப்படி எந்த உயிர் தியாகங்களுக்கும் நாங்கள் தாயார்.தாயார். தாயார்!.
உனக்குத் தெரியுமா ராமா?
நமது மோடிஜி தமிழ்நாட்டில் பேசத் தொடங்கும்போது ஜெய் ஸ்ரீராம் என்ற ஓங்கார கூச்சலுடன் தானே தொடங்குகிறார். அவரது நாடி நரம்புகள் அப்போது துடிப்பதை, புடைப்பதை நீ பார்க்கிறாயா? அப்பப்பா…என்னே எமோசன்! நாம் யார்? உலகம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய நமது குடி. அந்தக் குடி இப்போது உலக நாடுகளிடம் மண்டியிட்டு கிடக்கிறதே இதை சகிக்க முடியுமா?
ஸ்ரீராமானே! கோதண்ட பாணியே! மரியாதை புருஷனே! சீதாபதியே! அயோத்தி ராஜாவே! வா.! உனது பாரத தேசத்தைக் காப்பாற்ற அவதாரம் எடுத்து வா!. அப்படியே இன்னொரு வேண்டுகோள் எங்களது என்.டி.ஏ.
கூட்ணியையும்..
இப்படிக்கு
ஸ்ரீராமா பக்தர்களும் என்.டி.ஏ கூட்டணியும்.
– கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் இதழ் 12032026
